இந்தியாவில் சமூகப் பரவல் ஏற்பட்டுவிட்டதா என்பது குறித்து மத்திய சுகாதாரத் துறை அமைச்சர் ஹர்ஷவர்தன் பதிலளித்துள்ளார்.
கொரோனா வைரஸின் தாக்கம் நாடு முழுவதும் தொடர்ந்து அதிகரித்து வருகிறது. கடந்த 24 மணி நேரத்தில் மட்டும் 24 ஆயிரத்து 879 பேருக்கு கொரோனா தொற்று உறுதி செய்யப்பட்டுள்ளது. இதனால் நாடு முழுவதும் பாதிக்கப்பட்டவர்களின் எண்ணிக்கை 7 லட்சத்து 67 ஆயிரத்து 296 ஆக அதிகரித்துள்ளது. 2 லட்சத்து 69 ஆயிரத்து 789 பேர் மருத்துவமனைகளில் சிகிச்சை பெற்று வருகின்றனர். 4 லட்சத்து 76 ஆயிரத்து 378 பேர் பூரண நலம் பெற்று வீடு திரும்பிவிட்டனர். நாடு முழுவதும் உயிரிழந்தவர்களின் எண்ணிக்கை 21 ஆயிரத்து 129 ஆக உயர்ந்துள்ளது.
இந்த நிலையில் கொரோனா பரவலை கட்டுப்படுத்துவது, மருத்துவ வசதிகள் குறித்து விவாதிக்க மத்திய சுகாதாரத் துறை அமைச்சர் ஹர்ஷவர்தன் தலைமையில் டெல்லியில் இன்று (ஜூலை 9) அமைச்சர்கள் ஆலோசனைக் கூட்டம் நடைபெற்றது.
பின்னர்,பேட்டியளித்த ஹர்ஷவர்தன், “கொரோனா தொற்றால் அதிகம் பாதிக்கப்பட்டுள்ள மூன்றாவது நாடாக இந்தியா மாறியிருந்தாலும், இதை சரியான கண்ணோட்டத்தில் புரிந்துகொள்வது அவசியம். ஏனெனில், உலகத்திலேயே அதிக மக்கள் தொகை கொண்ட இரண்டாவது நாடு இந்தியா. எனினும், 10 லட்சத்துக்கு 538 பேர் என்ற அளவில் இந்தியாவில் பாதிப்பு உள்ளது. இதுவே உலக அளவில் சராசரி 1,453 ஆக உள்ளது” என்று தெரிவித்தார்.
இந்தியாவில் சமூகப் பரவல் இல்லை என்று மறுத்த ஹர்ஷவர்தன், “இன்று நடந்த ஆலோசனைக் கூட்டத்தின்போது, இந்தியாவில் சமூக பரவல் இல்லை என்று நிபுணர்கள் கூறினர். மக்கள் நெருக்கம் அதிகமுள்ள சில பகுதிகளில் கொரோனா பரவல் அதிகமாக இருக்கலாம். ஆனால், ஒரு நாடாக, சமூக பரிமாற்றம் இல்லை” என்றும் குறிப்பிட்டார்.
**எழில்**
�,