‘சட்னி அரைக்கணும்னு நினைச்சேன்… சட்டுன்னு நின்னுடுச்சு…’ – வாரத்துக்கு ஒரு தடவை அந்த மிக்ஸி மேல கொஞ்சமாச்சும் அக்கறை எடுத்திருந்தீங்கனா, இப்படியாகியிருக்குமா?
மிக்ஸி மட்டும் இல்லீங்க… கிரைண்டர், வாஷிங் மெஷின், ஏர் கண்டிஷனர், வாட்டர் ஹீட்டர்னு உங்க வசதிக்காக வீட்டுக்குள்ள நீங்க வாங்கி வெச்சுருக்கற எந்தப் பொருளா இருந்தாலும், சரிவர பராமரிக்கலைனா, ‘பழைய ஈயம் பித்தளைக்கு பேரீச்சம்பழம்’ங்கற மாதிரி தூக்கித்தான் வீச வேண்டியிருக்கும்!
* பொதுவாக மிக்ஸியில் எல்லோரும் செய்கிற முதல் தவறு… ஓவர் லோடு. மசாலாவை ஜார் நிரம்பி வழியும் அளவுக்கு அரைப்பதுதான் பலருக்கும் வழக்கமாக இருக்கிறது. கடைசியில மசாலா நம் முகத்துல பாதி, சுவரில் பாதி என்று தெறித்து வழிந்துகொண்டிருக்கும். அது மட்டுமல்லாமல், மிக்ஸியின் கப்ளரும் (ஜாரின் அடிப்பகுதியிலும், மிக்ஸியின் மேல் பகுதியிலும் இருக்கும்) சூடாகி உடையும் வாய்ப்புள்ளது. அதனால் ஓவர் லோடை தவிருங்கள்.
* தினமும் மிக்ஸியைத் துடைத்து வைப்பதன் மூலம் நீண்ட காலத்துக்குப் பழுதாகாமல் இருக்கும். மேலும், மிக்ஸியில்தான் அதிகமாக கரப்பான்பூச்சி வாசம் செய்யும். மிக்ஸியில் அரைத்தவுடன், கடைசியில் வெறும் தண்ணீரை ஊற்றி ஒரு சுற்று சுற்றி பிறகு கழுவினால், இடுக்குகளில் உணவுத் துணுக்குகள் சேராமல் இருக்கும்.
* மிக்ஸி சுத்தம் செய்ய பெயின்ட் பண்ணும் பிரஷ்ஷைப் பயன்படுத்தலாம். மிக்ஸியின் கீழ் மோட்டர் இருக்கும் பகுதியை மேலோட்டமாகத் துடைக்காமல், தினமுமே மிக்ஸியின் கீழே இருக்கும் இடைவெளியில் பிரஷ்ஷைக் கொண்டு சுத்தப்படுத்த வேண்டும்.
* பொருள்களை வதக்கிவிட்டு, சிலர் அவசரத்தில் சூடாக அப்படியே மிக்ஸியில் போட்டு அரைத்துவிடுவார்கள். மிக்ஸி மூடி தெறித்து, அதில் உள்ள சூடான பதார்த்தம் முகத்தில் பட்டுப் புண்ணாக வாய்ப்புண்டு. கவனம்.
* லோவோல்டேஜ் பிரச்சினை இருந்தால், அந்தத் தருணத்தில் மிக்ஸியைப் பயன்படுத்துவதைத் தவிர்க்க வேண்டும்.
* துவையல், சட்னி அரைப்பதாக இருந்தாலும், எல்லாவற்றையும் பொடியாக நறுக்கிய பிறகு அரைக்க வேண்டும். சிலர் தக்காளி, தேங்காய் போன்றவற்றைப் பெரிதாகப் போட்டு அரைப்பார்கள். இதனால் சீக்கிரத்திலேயே மிக்ஸி பழுதாக வாய்ப்பு இருக்கிறது.
* மிக்ஸியில் போட்ட பொருள் சரியாக அரையவில்லை என்றால், பிளேடின் ஷார்ப்னெஸ் போயிருக்கலாம். கல் உப்பை போட்டு ஒரு சுற்று சுற்றிவிட்டு அரைத்தால் நன்றாக அரையும்.
* மிக்ஸியில் பொருட்களைப் போட்டு, மூடாமல் அரைப்பது கூடாது. அரைக்கும்போது ஒரு கையால் மூடியை அழுத்தியபடி அரைப்பது நல்லது. மேலும், மிக்ஸி ஓடிக்கொண்டிருக்கும்போதே, நடுவில் திறந்து பார்ப்பது கூடாது. கண்களில் தெறிக்க வாய்ப்பு இருக்கிறது.
**[நேற்றைய ரெசிப்பி: சோள ரவை புட்டு!](https://minnambalam.com/k/2021/02/13/1)**�,