கொரோனா நோயாளிகளுக்கு வழங்கப்படும் உணவுகள் என்னென்ன என்கிற பட்டியலில் இடம் பெறுபவைகளில் எலுமிச்சையும் ஒன்று.
‘காலை 11 மணியளவில் எலுமிச்சைப் பழத்தின் தோல், இஞ்சி இரண்டையும் கொதிக்க வைத்து, அதை வடிகட்டி தேவையான அளவு உப்பு அல்லது சர்க்கரை சேர்த்த சாறு பருகக் கொடுக்கிறோம். இதனால் உடலில் நோய் எதிர்ப்பு சக்தி பெருகுகிறது’ என்கின்றனர் கொரோனா நோய் தடுப்பு பணியில் உள்ள சுகாதாரத் துறையினர்.
‘லிவர் டானிக்’ என்று அழைக்கப்படும் எலுமிச்சையில் என்னென்ன நன்மைகள் இருக்கின்றன…
‘குறைந்த விலையில் நிறைவான பலன் தரும் பழங்களில் ஒன்று எலுமிச்சை. சத்துகள் நிறைந்தது; சர்வரோக நிவாரணி.
இந்தியர்களைவிட மேலைநாட்டினர் எலுமிச்சைப் பழத்தையும் அதன் விதை, தோல் என அனைத்தையும் மருந்தாகப் பயன்படுத்துகின்றனர். எலுமிச்சைப் பழத்தில் வைட்டமின் சி சத்து மற்றும் சுண்ணாம்புச் சத்து அதிகம் நிறைந்துள்ளன’ என்று கூறும் உணவியல் நிபுணர்கள், எலுமிச்சையின் பலன்களைப் பட்டியலிடுகின்றனர்.
* எலுமிச்சைப்பழச் சாற்றை இளஞ்சூடான நீரில் கலந்து குடித்தால், செரிமானப் பிரச்சினைகள், குமட்டல், வாந்தி போன்றவை சரியாகும்.
* ரத்தத்தைச் சுத்திகரிக்கக்கூடியது என்பதால், அடிக்கடி இதன் சாற்றை அருந்தினால் உடலிலுள்ள தேவையற்ற நச்சுகள் வெளியேறி ரத்தம் தூய்மையாகும். நோய் எதிர்ப்பு சக்தியை அதிகரிக்கும்.
* கல்லீரலின் செயல்பாட்டை அதிகப்படுத்த பெரிதும் துணைபுரியும்
* சிட்ரஸ் அதிக அளவில் உள்ளது. தினமும் இதன் சாற்றை அருந்துவது தோலைப் பளபளப்பாக்கும். உடலுக்கு மெருகூட்டும். தோலிலுள்ள சுருக்கங்களை மாற்றும். கரும்புள்ளிகளை மறையச் செய்யும். மொத்தத்தில் மேனி அழகுக்குத் தேவையான ஓர் இயற்கை உணவாகவும் இது செயல்படுகிறது.
* உடலைக் குளிர்ச்சியாக்கக்கூடியது என்பதால், தோல் எரிச்சல் மற்றும் வெப்ப நோய்களிலிருந்து உடலுக்குப் பாதுகாப்பு கிடைக்கும்.
* வாயில் துர்நாற்றம் இருப்பதோடு பற்கள், அதன் இடுக்குகளில், ஈறில் சிக்கல்கள் இருந்தால் இதன் சாற்றால் மசாஜ் செய்யலாம்.
* உடல் எடை குறைய தினமும் காலையில் இளம்சூடான தண்ணீருடன் எலுமிச்சைச் சாறு, தேன் சேர்த்து அருந்தி வந்தால் பலன் கிடைக்கும். அதிலும் காலையில் கண் விழித்ததும் அருந்தினால் நல்ல பலன் தரும். வெறும் வயிற்றில் சாப்பிடுவதால் பிரச்சினையை உண்டாக்கும் என்று சொல்வது தவறு.
* உயர் ரத்த அழுத்தம் உடையவர்களுக்கு இதன் சாறு மிக நல்ல பயன் தரும். உயர் ரத்த அழுத்தம், தலைசுற்றல் நீங்க இதிலுள்ள பொட்டாசியம் சத்து உதவும். எலுமிச்சைப்பழச் சாறு மன அழுத்தத்தைக்கூட குறைக்கும்.
* காய்ச்சல், ஜலதோஷத்துக்கும் இதன் சாறு நிவாரணம் தரும்.
* மூட்டுவலி, உடல் தசைகளில் வலிக்கு இதன் சாறு மருந்து.
* 70 கிலோவுக்கு அதிகமான உடல் எடை கொண்டவர்கள் முழு எலுமிச்சைப்பழத்தை ஒரு டம்ளர் தண்ணீரில் பிசைந்து உட்கொள்ளலாம். தினமும் இரண்டு முறை உட்கொள்ள வேண்டும். காலையில் குடிப்பது நல்லது. 70 கிலோவுக்குக் குறைவான எடை கொண்டவர்கள் அரை எலுமிச்சையைப் பிழிந்து சாறு எடுத்து அருந்தலாம்.
**கவனம்**
மொத்தத்தில் உடலில் களைப்பைப் போக்கி புத்துணர்வு தரும்; நோய்கள் பலவற்றிலிருந்து எலுமிச்சை நிவாரணம் தரக்கூடியது என்றபோதிலும் ‘அளவுக்கு மிஞ்சினால் அமுதமும் நஞ்சு’ என்ற பழமொழிக்கேற்ப அளவுக்கு அதிகமாக எலுமிச்சைச் சாறு பருகினால், தொடர்ந்து சிறுநீர் கழிக்க நேர்வதோடு, உடலில் நீர்ப் பற்றாக்குறை ஏற்படும். அலர்ஜி, தலைவலி மற்றும் ஒவ்வாமை ஏற்பட வாய்ப்புள்ளது.
எனவே, ஒரு நாளைக்கு இரண்டு வேளை மட்டும் உபயோகிப்பது நல்லது. அதிலும் எலுமிச்சைச் சாற்றுடன் சிறிது தண்ணீர் சேர்த்துப் பயன்படுத்துவது நல்லது என்று எச்சரிக்கிறார்கள்.
[நேற்றைய ரெசிப்பி: மிக்ஸ்டு கார்ன் ரைஸ்](https://minnambalam.com/k/2020/07/18/3)�,