கொரோனா தடுப்பூசி போட்டுக்கொண்டு மது அருந்தக்கூடாது : விஜயபாஸ்கர்

Published On:

| By Balaji

கொரோனா தடுப்பூசி போட்டுக் கொண்டு மது அருந்தக் கூடாது எனத் தமிழக சுகாதாரத் துறை அமைச்சர் விஜயபாஸ்கர் தெரிவித்துள்ளார்.

இந்தியா முழுவதும் கொரோனா தொற்று தடுப்பூசி போடும் பணி வரும் 16ஆம் தேதி தொடங்குகிறது. இதற்காக உருவாக்கப்பட்ட கோவிஷீல்டு மற்றும் கோவாக்சின் தடுப்பூசிகள் மாநிலங்களுக்குப் பிரித்து வழங்கப்படுகின்றன.

அந்தவகையில், புனேவில் உள்ள சீரம் நிறுவனத்திலிருந்து தமிழகத்துக்கு முதல்கட்டமாக 5,36,500 டோஸ் ‘கோவிஷீல்டு’ தடுப்பு மருந்துகள் விமானம் மூலம் நேற்று சென்னைக்கு வந்தன. தேனாம்பேட்டை டிஎம்எஸ்வளாகத்தில் உள்ள மாநில மருந்து சேமிப்பு கிடங்கில் வைக்கப்பட்ட இம்மருந்துகள் பின்னர் மற்ற மாவட்டங்களில் அமைக்கப்பட்டுள்ள சேமிப்பு மையங்களுக்கு அனுப்பி வைக்கப்பட்டன.

சென்னை (டோஸ் – 63,700) , காஞ்சிபுரம்(10,900), செங்கல்பட்டு(23,800) மற்றும் திருவள்ளூர்(19,600) மாவட்டங்களுக்கு 1,18,000 தடுப்பூசிகள் கடலூர் (7,800), விழுப்புரம்(11,500), கள்ளக்குறிச்சி(6,200) மாவட்டங்களுக்கு 25,500 தடுப்பூசிகள், திருச்சி(17,100), அரியலூர்(3,300), பெரம்பலூர்(5,100), புதுக்கோட்டை (6,900),கரூர்(7,800) ஆகிய மாவட்டங்களுக்கு 40,200 தடுப்பூசிகள் தஞ்சாவூர் (15,500), நாகப்பட்டினம்(6,400), திருவாரூர்(6,700) மாவட்டங்களுக்கு 28,600 தடுப்பூசிகள் மதுரை(23,100), திண்டுக்கல் (13,100), விருதுநகர்(9,700), தேனி (8,200) மாவட்டங்களுக்கு 54,100 தடுப்பூசிகள் சிவகங்கை(10,700), ராமநாதபுரம்(8,300) மாவட்டங்களுக்கு 19,000தடுப்பூசிகள்

நெல்லை (10,900), கன்னியாகுமரி(22,600), தென்காசி(5,100), தூத்துக்குடி(13,100) மாவட்டங்களுக்கு 51,700 தடுப்பூசிகள் வேலூர் (18,600), ராணிப்பேட்டை (4,400),திருப்பத்தூர் (4,700) மற்றும் திருவண்ணாமலை(14,400) மாவட்டங்களுக்கு 42,100 தடுப்பூசிகள் சேலம் (27,800), கிருஷ்ணகிரி(11,500), நாமக்கல்(8,700), தர்மபுரி (11,800) மாவட்டங்களுக்கு 59,800 தடுப்பூசிகள் கோவை (40,600), ஈரோடு (13,800), திருப்பூர் (13,500), நீலகிரி (5,300) மாவட்டங்களுக்கு 73,200 தடுப்பூசிகள் அனுப்பி வைக்கப்பட்டுள்ளன.

இந்நிலையில், திருச்சிக்கு வந்த கொரோனா தடுப்பூசிகள் அனைத்தும், காஜாமலை பகுதியில் உள்ள சுகாதாரத் துறை துணை இயக்குநர் அலுவலக பாதுகாப்புக் கிடங்கில் பாதுகாப்பாக வைக்கப்பட்டுள்ளது. பாதுகாப்பு கிடங்கைத் தமிழக சுகாதாரத் துறை அமைச்சர் விஜயபாஸ்கர் இன்று (ஜனவரி 13) ஆய்வு செய்தார்.

திருச்சியிலிருந்து மற்ற பகுதிகளுக்கு மருந்துகளை அனுப்பி வைத்த பிறகு செய்தியாளர்களைச் சந்தித்த அவர், “தமிழகத்தில் ஜனவரி 16ஆம் தேதி முதல்வர் எடப்பாடி பழனிசாமி தடுப்பூசி போடும் பணியைத் தொடங்கி வைக்கிறார். தடுப்பூசி குறித்துப் பரவும் வதந்திகளை யாரும் நம்ப வேண்டாம். சமூக வலைதளத்தில் வதந்தி பரப்பினால் நடவடிக்கை எடுக்கப்படும். தடுப்பூசி போட்டுக்கொண்ட 42 நாட்களுக்குப் பிறகு நோய் எதிர்ப்புச் சக்தி உருவாகும். முதல் டோஸ் போட்டவுடன் மது அருந்தக் கூடாது. 2ஆவது டோஸ் போடும் வரையில் 28 நாட்களுக்கு மது அருந்தக் கூடாது. தடுப்பூசி விநியோகிக்க அனைத்து மாவட்டங்களிலும் விரிவான ஏற்பாடுகள் செய்யப்பட்டுள்ளன” என்று தெரிவித்தார்.

**-பிரியா**�,

செய்திகளை உடனுக்குடன் பெற மின்னம்பலம் வாட்ஸ் ஆப் சேனலில் இணையுங்கள்!
Join Our Channel
Share