kசித்த மருத்துவத்தின் மீது சந்தேகம் ஏன்?

Published On:

| By Balaji

சித்த மருத்துவத்தின் மீது ஏன் சந்தேகப்படுகிறீர்கள் என தமிழக அரசுக்கு உயர் நீதிமன்றம் கேள்வி எழுப்பியுள்ளது.

கொரோனாவுக்கு மருந்து கண்டுபிடித்துவிட்டதாகக் கூறிய சித்த மருத்துவர் தணிகாச்சலத்தை, ஊடகங்களில் தவறான தகவல் பரப்பியதாகக் கூறி காவல் துறையினர் கைது செய்தனர். பின்னர், குண்டர் தடுப்புச் சட்டத்தின் கீழ் அவர் கைது செய்யப்பட்டார். குண்டர் சட்டத்தில் கைது செய்யப்பட்டதற்கு எதிராக தணிகாச்சலம் சார்பில் அவரது தந்தை கலியபெருமாள் சென்னை உயர் நீதிமன்றத்தில் ஆட்கொணர்வு மனு தாக்கல் செய்தார். இதுதொடர்பாக சென்னை மாநகர காவல் ஆணையர் உள்ளிட்டோர் பதிலளிக்க உத்தரவிடப்பட்டது.

இந்த வழக்கு நீதிபதிகள் கிருபாகரன், வேலுமணி அமர்வு முன்பு நேற்று (ஜூலை 9) விசாரணைக்கு வந்தது. அப்போது நீதிபதிகள், “ஆங்கில மருத்துவத்தின் அடிப்படையில் கொரோனாவுக்கு சிகிச்சை அளிக்கப்பட்டு வருவதில் எவ்வித தவறுமில்லை. ஆனால், சித்த மருத்துவர்கள் யாரேனும் கொரோனாவுக்கு மருந்து கண்டுபிடித்துவிட்டதாக வந்தால் அதை ஆய்வு செய்வதை விடுத்து ஏன் சந்தேகப்படுகிறீர்கள்?” என்று மத்திய, மாநில அரசுகளுக்குக் கேள்வி எழுப்பினர்.

கொரோனாவுக்கு மருந்து கண்டுபிடித்துவிட்டதாக இதுவரை எத்தனை சித்த மருத்துவர்கள் அரசை நாடியுள்ளனர்? அவற்றில் எத்தனை பரிசோதிக்கப்பட்டுள்ளது? எத்தனை மருந்துகளில் நோய் எதிர்ப்பு சக்தி உள்ளதாகத் தெரியவந்துள்ளது? எத்தனை மத்திய ஆயுஷ் அமைச்சகத்துக்கு அனுப்பி வைக்கப்பட்டுள்ளது? போன்ற விவரங்களைக் கேட்ட நீதிபதிகள்,

“சித்த மருத்துவ ஆய்வகங்கள் எத்தனை உள்ளன. அவற்றில் எத்தனை மருத்துவர்கள், பணியாளர்கள் இருக்கிறார்கள், தமிழகத்தில் சித்த மருத்துவ ஆய்வுக்காக இதுவரை எவ்வளவு நிதி ஒதுக்கீடு செய்யப்பட்டுள்ளது. மத்திய ஆயுஷ் அமைச்சகம் சித்த மருத்துவ ஆய்வுக்காக ஐந்து ஆண்டுகளில் எவ்வளவு தொகை செலவிட்டுள்ளது” என்றும் அடுக்கடுக்காகப் பல்வேறு கேள்விகளை முன்வைத்தனர்.

இதுதொடர்பாக மத்திய, மாநில அரசுகள் பதிலளிக்க உத்தரவிட்ட நீதிபதிகள், வழக்கை வரும் 23ஆம் தேதிக்குத் தள்ளிவைத்தனர். இவ்வழக்கில் காவல் துறை, தமிழக அரசு ஆகியவற்றோடு மத்திய ஆயுஷ் அமைச்சகமும் எதிர் மனுதாரராக இணைக்கப்பட்டுள்ளது.

**எழில்**�,

செய்திகளை உடனுக்குடன் பெற மின்னம்பலம் வாட்ஸ் ஆப் சேனலில் இணையுங்கள்!
Join Our Channel
Share