பொருத்தமற்ற என் 95 மாஸ்க்கை அணிய வேண்டாம் என்று மத்திய சுகாதாரத் துறை சார்பில் தெரிவிக்கப்பட்டுள்ளது.
கொரோனா பாதிப்பைத் தடுக்க மத்திய மாநில அரசுகள் மக்களிடம் விழிப்புணர்வு ஏற்படுத்தி வருகிறது. சமூக இடைவெளியை கடைப்பிடிக்க வேண்டும், மாஸ்க், கையுறை அணிய வேண்டும் என்று வலியுறுத்தி வருகிறது. ஒரு சில இடங்களில் மாஸ்க் அணியாமல் வெளியே சென்றால் அபராதமும் விதிக்கப்படுகிறது.
மாஸ்க் அணிவதைப் பொருத்தவரை, விலை அதிகம் என்றாலும், கொரோனா அச்சத்தால் சாமானியர்களும் கூட ரெஸ்பிரேட்டார் வால்வுடன் கூடிய என்.95 மாஸ்க்கை வாங்கி பயன்படுத்தி வருகின்றனர். துணியில் தயாரிக்கப்படும் சாதாரண மாஸ்குகளைக் காட்டிலும், என்.95 மாஸ்க் மூலம் கொரோனா தொற்று பரவுவதைத் தடுக்க முடியும் என்று நம்பப்படுகிறது.
இந்த சூழலில் என் 95 மாஸ்க்கை அணிய வேண்டாம் என்று அனைத்து மாநில மற்றும் யூனியன் பிரதேச சுகாதாரத் துறை செயலாளர்களுக்கு மத்திய சுகாதார சேவைகளின் பொது இயக்குநர், பேராசிரியர் ராஜீவ் கார்க் நேற்று (ஜூலை 20) கடிதம் எழுதியுள்ளார்.
என் 95 மாஸ்க் பொருத்தமற்ற வகையில் பயன்படுத்தப்படுவதைக் காண முடிகிறது. நியமிக்கப்பட்ட சுகாதார ஊழியர்களைத் தவிர்த்து, வால்வுடன் கூடிய என் 95 மாஸ்கை பொது மக்களும் பயன்படுத்தி வருகின்றனர்.
வால்வு பொருத்தப்பட்ட என்.95 மாஸ்குகளை அணிவது கொரோனா வைரஸ் பரவுவதைத் தடுக்காது என்பதை உங்கள் கவனத்திற்குக் கொண்டு வருகிறோம். இந்தவகை மாஸ்க்குகள் வைரஸ் பரவுவதைத் தடுக்காது என்பதால் ஏற்கனவே எடுக்கப்பட்ட கொரோனா வைரஸ் தடுப்பு நடவடிக்கைகளுக்குத் தீங்காக முடியும். எனவே அனைவரும் வாய், மூக்கு ஆகியவற்றை முழுவதுமாக மறைக்கும் விதத்தில் முக கவசங்களை அணிய வேண்டும் என்று வேண்டுகோள் விடுக்கிறேன். பொருத்தமற்ற என்.95 முகக் கவசங்களை அணிவதைத் தவிர்ப்போம் என்று கேட்டுக்கொண்டுள்ளார்.
மத்திய அரசு ஏப்ரல் மாதத்தில் வெளியிட்ட தகவலின் படி, வீட்டிலேயே தயாரிக்கும் முகக் கவசத்தை வாய், மூக்கு ஆகியவற்றை முழுமையாக மறைக்கும் வகையில் பயன்படுத்த வேண்டும். பயன்படுத்தப்பட்ட மாஸ்க்கை உப்பு நீரில் போட்டுக் கொதிக்க வைத்து, பின்னர் காய வைத்துப் பயன்படுத்தலாம். தினசரி இதைப் பின்பற்ற வேண்டும் என்றும் வலியுறுத்தியுள்ளார்.
**-கவிபிரியா**�,