தமிழகத்தில் கொரோனா பாதிப்பு உச்சத்தை தொட்டுள்ளதாக மருத்துவ நிபுணர்கள் குழு தெரிவித்துள்ளது.
தமிழகத்தில் கொரோனா பாதிப்புகள் வேகவேகமாக அதிகரித்து வரும் நிலையில், மீண்டும் முழு ஊரடங்கை அமல்படுத்த வேண்டும் என்கிற கோரிக்கை தொடர்ந்து வலுத்து வருகிறது. இந்த நிலையில் சென்னை தலைமைச் செயலகத்தில் மருத்துவ நிபுணர்கள் குழுவுடன் முதல்வர் எடப்பாடி பழனிசாமி இன்று (ஜூன் 15) ஆலோசனை நடத்தினார்.
அதில் ஐசிஎம்ஆர் துணைத் தலைவர் பிரதீப் கவூர், இந்திய மருத்துவ கழகத்தின் தலைவர் சி.என்.ராஜா, கிறிஸ்தவ மருத்துவக் கல்லூரி இயக்குனர் பீட்டர் உள்ளிட்டோர் கலந்துகொண்டனர். கொரோனா பரவல் நிலை, கட்டுப்படுத்த எடுக்கப்பட்ட நடவடிக்கைகள், ஊரடங்கு கட்டுப்பாடுகள் குறித்து விரிவாக விவாதிக்கப்பட்டது.
ஆலோசனை முடிந்த பிறகு செய்தியாளர்களை சந்தித்த மருத்துவ குழுவைச் சேர்ந்த குகானந்தம், “கொரோனா பாதிப்பு என்பது உச்ச நிலைக்குச் சென்று பிறகு குறையும் என்று தெரிவித்திருந்தோம். தற்போது, தமிழகம் கொரோனா பாதிப்பில் உச்ச நிலையை அடைந்துள்ளது. கொரோனாவால் உலகம் முழுவதும் அதிக பாதிப்புகள் ஏற்பட்டுள்ளன. இந்தியாவிலேயே தமிழகத்தில்தான் அதிக பரிசோதனைகள் நடைபெற்று வருகின்றன. அதனால் பாதிப்பு விகிதமும் அதிகரித்து வருகிறது. கொரோனாவால் பாதிக்கப்பட்டு சர்க்கரை நோய் உள்ளிட்ட பிற நோய்களுக்கும் உள்ளானவர்கள்தான் அதிகமாக இறக்கின்றனர்” என்று தெரிவித்தார்.
சென்னையில் வார்டு வார்டாக பரிசோதனை நடைபெற்று வருவதாகத் தெரிவி்த்த அவர், “தமிழகம் முழுவதும் கொரோனா நோயாளிகளுக்காக 75,000 மருத்துவ படுக்கைகள் தயார் நிலையில் வைக்கப்பட்டுள்ளன. 12,000 மருத்துவர்கள், செவிலியர்கள், லேப் டெக்னீஷியன்கள் நியமனம் செய்யப்பட்டுள்ளனர்” என்று குறிப்பிட்டார். மேலும், “இந்தியாவிலேயே தமிழகத்தில்தான் அதிக அளவு சோதனை நடைபெறுகிறது. தமிழகத்தில் ஊரடங்கை கடுமையாக்கி கொரோனாவை கட்டுப்படுத்த பரிந்துரை செய்துள்ளோம்” என்ற தகவலையும் தெரிவித்தார்.
மேலும், “முதல் கட்டமாக கொரோனா பாதிப்பு குறைந்தாலும் கூட இன்னும் சில மாதங்களில் அதிகரிப்பதற்கான வாய்ப்புகள் உள்ளன. பரிசோதனைகளை அதிகமாக செய்ய செய்ய உயிரிழப்புகளை தடுக்க முடியும்” என்றும் மருத்துவக் குழுவினர் தெரிவித்தனர்.
**எழில்**
�,