தமிழகம் முழுக்க கொரோனா சித்த மருத்துவ மையம் திறக்க நடவடிக்கை எடுக்கப்படும் என அமைச்சர் மாஃபா பாண்டியராஜன் தெரிவித்துள்ளார்.
தமிழகத்தில் கொரோனா பாதிப்பு உச்சம் தொடும் வகையில் பரவி வருகிறது. இந்த நிலையில் அலோபதி மருத்துவத்துக்கு மாற்றாக சித்த மருத்துவம், ஹோமியோபதி உள்ளிட்டவை மூலம் சிகிச்சை அளிக்கும் முயற்சிகளும் மேற்கொள்ளப்பட்டுள்ளன.
சென்னை வியாசர்பாடியில் உள்ள கொரோனா தடுப்பு சித்த மருத்துவ மையத்தில் சிகிச்சை பெற்று வந்த 8 பேர் இன்று (ஜூலை 6) சிகிச்சை முடிந்து வீடு திரும்பினர். அவர்களுக்கு பழங்கள், கபசுர குடிநீர் வழங்கி அமைச்சர் மாஃபா பாண்டியராஜன் தலைமையில் மருத்துவர்கள், அதிகாரிகள் வழியனுப்பிவைத்தனர். மேலும், கொரோனாவிலிருந்து மீள்வதற்காக சித்த மருத்துவ மையத்தில் அளிக்கப்படும் சிகிச்சை முறைகள் குறித்தும் கேட்டறிந்தனர்.
பின்னர் செய்தியாளர்களை சந்தித்த அமைச்சர் பாண்டியராஜன், “ஜூன் 23ஆம் தேதி முதல் செயல்பட்டு வரும் இந்த சித்த மருத்துவ மையத்தில் 107 பேர் தற்போது சிகிச்சை பெற்று வருகின்றனர். இதில் 8 பேர் தற்போது சிகிச்சை முடிந்து வீடு திரும்பியுள்ளனர். இங்கு ஆக்சிஜன் வசதிக்கும் ஏற்பாடு செய்யப்பட்டுள்ளது. எனினும், இதுவரை ஆக்சிஜன் பயன்பாடு தேவைப்படவில்லை. இன்னும் 200க்கும் மேற்பட்டோர் சிகிச்சை பெறும் வகையில் ஏற்பாடு செய்யப்பட்டுள்ளது” என்று தெரிவித்தார்.
பாரம்பரிய மருத்துவ முறையான சித்த மருத்துவத்தை தமிழக அரசு ஊக்குவித்து வருவதாகத் தெரிவித்த அவர், “உணவே மருந்து என்பதன் அடிப்படையில் சித்த மருத்துவ மையங்களில் உணவு வழங்கப்படுகிறது. தேவைக்கேற்ப சென்னை மட்டுமல்லாமல் தமிழகம் முழுவதும் சித்த மருத்துவ மையங்கள் திறக்க நடவடிக்கை எடுக்கப்படும்” என்றும் கூறினார்.
**எழில்**�,