மின்னம்பலம் மின்னம்பலம்
ஞாயிறு, 17 ஜன 2021

ரிலாக்ஸ் டைம்: வாழைத்தண்டு சூப்!

ரிலாக்ஸ்  டைம்: வாழைத்தண்டு சூப்!

குளிருக்கு இதமாக ரிலாக்ஸ் டைமில் சூப் அருந்தும்போது அது, உடலுக்கு ஆரோக்கியமானதாகவும் புத்துணர்ச்சித் தருவதாகவும் அமைந்தால் கூடுதல் சிறப்பைத் தரும். அதற்கு இந்த வாழைத்தண்டு சூப் உதவும்.

எப்படிச் செய்வது?

நறுக்கிய வாழைத்தண்டு 250 கிராம், நறுக்கிய குடமிளகாய் 100 கிராம், நறுக்கிய 100 கிராம் தக்காளியை குக்கரில் சேர்த்து, இரண்டு கப் தண்ணீர் விட்டு ஒரு விசில் வரும் வரை வேக விட்டு இறக்கவும் (கலவை நன்றாக மசிந்து இருக்க வேண்டும்). கலவையை ஆறவைத்து மிக்ஸியில் அரைத்து வடிகட்டி சாறு எடுக்கவும்.

வாணலியை அடுப்பில் வைத்து ஒரு டீஸ்பூன் நல்லெண்ணெய் விட்டு சூடாக்கி ஒரு டீஸ்பூன் சீரகம், சிறிதளவு கறிவேப்பிலை, ஒரு சிட்டிகை பெருங்காயத்தூள் சேர்த்துத் தாளிக்கவும். அதில் வடிகட்டிய சாற்றைச் சேர்த்து தேவையான அளவு உப்பு, மிளகுத்தூள், சூப்புக்கு தேவையான அளவு தண்ணீர் (சூப் அதிக கெட்டியாக இருந்தால் மட்டும்) சேர்த்துக் கொதிக்கவிடவும். சூப் பதம் வந்ததும் அடுப்பிலிருந்து இறக்கி, எலுமிச்சைச் சாறு இரண்டு டீஸ்பூன், நறுக்கிய மல்லித்தழை ஒரு டீஸ்பூன் சேர்த்துச் சூடாகப் பரிமாறவும்.

சிறப்பு

வாழைத்தண்டுக்குச் சிறுநீரைப் பெருக்கும் தன்மை உண்டு. எனவே, இதை நீர்ச்சுருக்கு, எரிச்சல் போன்றவை தீர அருந்தி வரலாம். மேலும், இது தேவையற்ற உடல் பருமனையும் குறைக்கும் தன்மையுடையது.

செவ்வாய், 12 ஜன 2021

chevronLeft iconமுந்தையது
அடுத்ததுchevronRight icon