கிச்சன் கீர்த்தனா: சண்டே ஸ்பெஷல் – கேஸ் அடுப்பும் சில டிப்ஸுகளும்!

health

ஒவ்வொரு கிச்சனிலும் முதுகெலும்பே கேஸ் ஸ்டவ்தான். இப்போது வண்ணமயமான டிசைன்களில், ஸ்டீல் பாடி மற்றும் க்ளாஸ் டாப் வகைகளில், இரண்டில் இருந்து நான்கைந்து பர்னர்கள் கொண்ட கேஸ் ஸ்டவ்கள் சந்தையில் கிடைக்கின்றன. பாதுகாப்பை உறுதிப்படுத்த ஐஎஸ்ஐ முத்திரை பெற்ற கேஸ் ஸ்டவ்கள் இருந்தாலும் அதை முறையாகப் பராமரிக்க வேண்டியது அவசியம்.

அதற்காக கேஸ் அடுப்பு ஒருபக்கம் எரிந்துகொண்டு இருக்கும்போதே, மற்ற பாகங்களைத் துடைத்து சுத்தம் செய்யக் கூடாது. ஸ்டவ் எரியாமல் இருக்கும்போது, கேஸ் சிலிண்டரையும் மூடிய பின்னரே சுத்தம் செய்ய வேண்டும்.

அடுப்பின் ஒரு பர்னரில் சூடான எண்ணெய் உள்ள பாத்திரம் இருந்தால், பக்கத்தில் உள்ள பாத்திரத்திலிருந்து நீர்த் திவலைகள் அதில் சொட்டிவிடாமல் பார்த்துக் கொள்ளவும். இல்லாவிட்டால் சடசடவென எண்ணெய் வெடித்து உங்கள் மீது தெறிக்கும்.

கேஸ் ஸ்டவ்வை ‘சிம்’மில் வைத்தே முதலில் பற்றவைத்து, பாத்திரத்தை அதன் மீது வையுங்கள். பிறகு, தீயை அதிகப்படுத்தி எண்ணெய் ஊற்றுவது போன்ற அடுத்தகட்ட வேலைகளை ஆரம்பிக்கலாம்.

பர்னரை அடுப்பில் இருந்து எடுத்து, அதை சோப்பு அல்லது ஷாம்பூ கலந்த வெதுவெதுப்பான நீரில் ஒரு மணி நேரம் ஊறவைத்து, பின்னர் எடுத்து துடைத்து, ஊசியால் ஒவ்வொரு ஓட்டையையும் சுத்தம் செய்யவும். பிறகு சுத்தமான நீரில் கழுவினால், பர்னர் நன்கு சுத்தமாக இருக்கும். அதை நன்கு உலரவைத்து, அடுப்பில் பொருத்தவும்.

பொதுவாக எல்லா கேஸ் ஸ்டவ்களிலும் இரண்டு பர்னர்கள் இருப்பதால், சமையலறையில் இரண்டு கிடுக்கிகளை நல்ல நிலையில் எப்போதும் வைத்திருங்கள். அடுப்பிலிருந்து பாத்திரம் இறக்க இவை பயன்படும். இதற்குப் பதில் புடவைத் தலைப்பு, துண்டு, காகிதம் போன்றவற்றை சூடான பாத்திரங்களை இறக்க பயன்படுத்தாதீர்கள். அவை எரிந்துகொண்டிருக்கும் நெருப்பில்பட வாய்ப்புகள் அதிகம்.

காதுகளைச் சுத்தம் செய்யும் காட்டன் பட்ஸ் வைத்து… கேஸ் அடுப்பின் திருப்பும் குமிழ்களைச் சுத்தம் செய்யலாம்.

அடுப்பில் எதையாவது கிளறும்போது, நீங்கள் நிற்கும் திசையை நோக்கி கிளறாதீர்கள். நீங்கள் நிற்பதற்கு எதிர் திசையிலோ, பக்கவாட்டிலோ கிளறுங்கள். இது திடீரென்று ஏற்படும் தீக்காயங்களில் இருந்து உங்களைப் பாதுகாக்கும்.

அடுப்பிலிருந்து சூடான பாத்திரங்களைத் தூக்கும்போது உங்களால் எவ்வளவு எடையைச் சுலபமாக தூக்க முடியும் என்பதை ஒருமுறை யோசித்து அதற்குப் பிறகு தேவையான உபகரணங்களை வைத்துத் தூக்கி இறங்குங்கள். அதுதான் உங்களுக்கும் நல்லது. அடுப்புக்கும் நல்லது.

[நேற்றைய ரெசிப்பி: எக்லெஸ் ப்ளம் கேக்](https://www.minnambalam.com/k/2021/01/02/1)�,

+1
0
+1
0
+1
0
+1
0
+1
0
+1
0
+1
0

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *