மின்னம்பலம் மின்னம்பலம்
மாலை 7, திங்கள், 18 ஜன 2021

சண்டே ஸ்பெஷல்: உடலும் உறைவிடமும்!

சண்டே ஸ்பெஷல்: உடலும் உறைவிடமும்!

மழைக் காலத்தில் உடலுக்கேற்ற உணவை மட்டுமல்ல; நம் வீட்டையும் பராமரிப்பது அவசியம். இந்த சண்டேயில் சமையலறையைவிட்டு வெளியே வந்து வீட்டையும் பராமரிப்போம்.

மழைக்காலத்தில் ஈரப்பதம் அதிகமாவதால் குளியலறை மற்றும் சமையலறையில் பாத்திரம் கழுவும் இடங்கள் போன்றவற்றில் பூஞ்சை வளரும். பாசி மட்டுமே கண்ணுக்குத் தெரியும் என்பதால் இந்தப் பூஞ்சையை யாரும் கவனிப்பது கிடையாது. இந்தப் பூஞ்சை பலருக்கு அலர்ஜியை ஏற்படுத்துவதற்கான வாய்ப்பு உள்ளது. குறிப்பாக, குழந்தைகள் குளிக்கும்போது அவர்களை அறியாமலேயே குளியலறையின் சுவரைத் தொடுவார்கள். அப்போது சுவரில் இருக்கும் பூஞ்சை குழந்தையின் கைகளில் ஒட்டி நோய்த்தொற்றை ஏற்படுத்துவதற்கு வாய்ப்பிருக்கிறது. மிகக் குறிப்பாக, சரும அலர்ஜி, சுவாச அலர்ஜி உண்டாவதற்கான வாய்ப்புகள் அதிகம் என்பதால் அந்தப் பகுதிகளை அவ்வப்போது நன்கு சுத்தம் செய்து கழுவிவிட்டு பாசி மற்றும் பூஞ்சை சேராமல் பார்த்துக்கொள்ள வேண்டும்.

வீட்டுக்குள் கார்ப்பெட் விரிப்பது சமீபகாலமாக ஒரு ஃபேஷனாகவே மாறிவிட்டது. இந்த கார்ப்பெட்டில் ஈரப்பதம் அதிகமாகும்போது அதில் 'மைட்ஸ்' எனப்படும் கண்ணுக்கே தெரியாத குட்டிக் குட்டிப் பூச்சிகள் உருவாகும். அதேபோல மழைக்காலத்தில் குளிருக்கு இதமாக இருக்கும் என்பதால் சிலர் பிளாங்க்கெட்களைப் பயன்படுத்துவதுண்டு. சரியாகச் சுத்தம் செய்யப்படாத பழைய பிளாங்க்கெட்களில் இந்த மைட்ஸ் பூச்சிகள் இருக்கும். இதை அப்படியே போர்த்திக்கொள்ளும்போது அலர்ஜி ஏற்பட்டு அதனால் தும்மல், சளி போன்றவையும் உண்டாக வாய்ப்புள்ளது. எனவே, கார்ப்பெட் மற்றும் பிளாங்க்கெட்களை வெயிலில் காயவைத்து, தயாராக எடுத்து வைத்துக்கொண்டு மழை மற்றும் குளிர்காலத்தில் பயன்படுத்த வேண்டும்.

மழைக்காலத்தில் வீட்டின் ஜன்னல் கதவு, ஜன்னல்களுக்கு திரைச்சீலைகள் போன்றவற்றைப் போடலாம். ஆனால், இப்போதெல்லாம் கனமான திரைச்சீலைகள் அதிகமாகப் புழக்கத்தில் இருக்கின்றன. எனவே இந்தத் திரைச்சீலைகளுக்குப் பின்னால் கொசு, கரப்பான்பூச்சி போன்றவை ஒளிந்துகொள்ள வாய்ப்பிருக்கிறது. பார்ப்பதற்கு அழகாக இருக்கும் என்பதற்காகச் சிலர், திரைச்சீலைகளை ஆங்காங்கே சுருட்டிச் சுருட்டிக் கட்டி வைத்திருப்பார்கள். இதற்குள்ளும் கொசு போன்றவை ஒளிந்துகொள்ளும். எனவே, கட்டி வைத்திருக்கும் திரைச்சீலைகளை இரண்டு நாள்களுக்கு ஒருமுறை அவிழ்த்துவிட்டு நன்கு தட்டிவிட்டு சுத்தம் செய்வது நல்லது.

கொரோனா காரணமாகப் பிள்ளைகள் பள்ளிக்குச் செல்வதில்லை. அலுவலக வேலைகளையும் பலர் வீட்டிலிருந்தே செய்கிறார்கள் என்பதால் ஷூக்களின் பயன்பாடு கிட்டத்தட்ட இல்லாமலேயே போய்விட்டது. எந்தவிதப் பராமரிப்பும் இல்லாமல் ஷூக்களை சாக்ஸுடன் சேர்த்து அப்படியே போட்டு வைத்தால் அவற்றில் கிருமிகள் சேர்வதற்கான வாய்ப்புகள் அதிகம். அதேபோல அதிகமான ஈரப்பதம் காரணமாக ஷூக்களிலும் பூஞ்சை உருவாகக்கூடும் என்பதால் ஷூக்களைப் பயன்படுத்துகிறோமோ இல்லையோ... வாரம் ஒருமுறை ஷூ ரேக்கை சுத்தம் செய்து ஷூக்களைத் தட்டித் துடைத்து வைக்க வேண்டியது அவசியம்.

வீட்டின் பால்கனி போன்ற இடங்களில் நிறைய செடிகளை வளர்ப்பவர்கள் அப்பகுதிக்கு நெட் போட்டுக்கொண்டால் பூச்சிகள் வீட்டுக்குள் வராமல் தடுக்கலாம்.

கரப்பான் பூச்சிக்கு இருட்டு என்றால் மிகவும் பிடிக்கும். குப்பைகளைக் குவித்து வைப்பது, பழைய அட்டைகள், பழைய பேப்பர்கள் போன்றவற்றை குவிப்பது, கடைகளில் கொடுக்கும் கவர்களை வீட்டில் சேர்த்துச் சேர்த்துக் குவித்து வைப்பது என்று வீட்டில் குப்பைகள் அதிகமாக இருந்தால் நிச்சயம் அந்த இடத்துக்கு கரப்பான் பூச்சிகள் வரும். கரப்பான்பூச்சி நோயை உருவாக்கும் தன்மை கொண்டது என்பதால் மழைக்காலத்தில் வீட்டில் மேற்சொன்ன குப்பைகளைச் சேர்க்காதீர்கள். வீட்டைச் சுற்றிலும் குப்பையைக் குவித்து வைக்காதீர்கள். வீடு சுத்தமாக இருந்தால் கரப்பான்பூச்சி வீட்டுக்குள் வராது.

மழைக்காலத்தில் கொசுக்களின் வரவு அதிகமாக இருக்கும். முடிந்தவரை ரசாயனப் பொருள்களைத் தவிர்த்து இயற்கை முறையில் கொசுக்களை விரட்ட முயற்சி செய்யலாம். நொச்சி இலை மற்றும் வேப்ப இலையைப் பயன்படுத்துவது, சிட்ரோநெல்லா என்ற ஒருவகை இலையிலிருந்து தயாரிக்கப்படும் அகர்பத்தியை ஏற்றி வைப்பது போன்ற இயற்கை வழிகள் கொசுவை ஓரளவுக்குக் கட்டுப்படுத்த உதவும். அதேபோல மாலையில் விளக்கு ஏற்றி வைக்கும் நேரத்தில் வீட்டின் ஜன்னல், கதவுகளைச் சிறிது நேரம் மூடிவைத்திருந்தால் வீட்டுக்குள் கொசு அதிகம் வருவது ஓரளவுக்குக் கட்டுப்படும்.

சனி, 21 நவ 2020

chevronLeft iconமுந்தையது