மின்னம்பலம் மின்னம்பலம்
மாலை 7, புதன், 21 அக் 2020

அமைச்சர் அன்பழகனுக்கு கொரோனா உறுதி!

அமைச்சர் அன்பழகனுக்கு கொரோனா உறுதி!

உயர்கல்வித் துறை அமைச்சர் கே.பி.அன்பழகனுக்கு கொரோனா பாதிப்பு உறுதி செய்யப்பட்டுள்ளது.

சென்னையில் கொரோனாவைக் கட்டுப்படுத்த அமைச்சர்கள், அதிகாரிகள் அடங்கிய குழுக்கள் அமைக்கப்பட்டது. அதில் உயர்கல்வித் துறை அமைச்சர் கே.பி.அன்பழகனுக்கு பெருங்குடி, அடையாறு, சோழிங்கநல்லூர் மண்டலங்கள் ஒதுக்கப்பட்டு, பணிகளைக் கவனித்து வந்தார். இதனிடையே கே.பி.அன்பழகனுக்குக் கொரோனா தொற்று உறுதி செய்யப்பட்டு, சென்னை மணப்பாக்கம் மியாட் மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டதாக ஒரு வாரத்திற்கு முன்பு செய்திகள் வெளியாகின.

கொரோனாவால் பாதிக்கப்பட்ட கே.பி.அன்பழகனை போனில் நலம் விசாரித்ததாக திமுக தலைவர் ஸ்டாலின் முகநூலில் பதிவிட்டார். அத்துடன், மத்திய மனிதவள மேம்பாட்டு துறை அமைச்சர் ரமேஷ் பொக்ரியாலும் அன்பழகன் விரைவில் நலம்பெற்ற வர வேண்டும் என ட்விட்டரில் வாழ்த்து தெரிவித்தார். எனினும், கொரோனா பாதித்ததாக வெளியான தகவலை அமைச்சர் கே.பி.அன்பழகனும், முதல்வர் எடப்பாடி பழனிசாமியும் மறுத்துவிட்டனர்.

இந்த நிலையில் கே.பி.அன்பழகனுக்கு கொரோனா தொற்று ஏற்பட்டுள்ளதை சென்னை மியாட் மருத்துவமனை உறுதி செய்துள்ளது. மருத்துவமனை நிர்வாகம் இன்று (ஜூன் 30) வெளியிட்ட செய்திக் குறிப்பில், “அமைச்சர் கே.பி.அன்பழகனுக்கு ஆரம்பத்தில் எந்தவித அறிகுறியும் இல்லை, அவருக்கு சிடி ஸ்கேன் செய்து பார்த்ததிலும் சாதாரணமாகவே இருப்பது தெரியவந்தது. எனினும், முன்னெச்சரிக்கை நடவடிக்கையாக மருத்துவக் கண்காணிப்பின் கீழ் இருந்தார்.

பின்னர் இரண்டாவது முறையாக அவரது மாதிரிகளை சேகரித்து எடுக்கப்பட்ட சோதனையில் கொரோனா தொற்று இருப்பது உறுதி செய்யப்பட்டது. நேற்றிலிருந்து அவருக்கு லேசான இருமல் இருந்து வரும் நிலையில், தொடர்ந்து சிகிச்சை அளிக்கப்பட்டு வருகிறது. தற்போது அவர் நலமுடன் இருக்கிறார், அவரது உடல் உறுப்புகள் நன்றாக இயங்குகின்றன” என்று தெரிவிக்கப்பட்டுள்ளது.

தமிழகத்தில் முதல்முறையாக அமைச்சர் ஒருவருக்கு கொரோனா தொற்று உறுதிசெய்யப்பட்டுள்ளது ஆளுந்தரப்பை அச்சத்தில் ஆழ்த்தியுள்ளது.

எழில்

செவ்வாய், 30 ஜுன் 2020

chevronLeft iconமுந்தையது
அடுத்ததுchevronRight icon