மின்னம்பலம் மின்னம்பலம்
செவ்வாய், 19 ஜன 2021

அதிகரிக்கும் பாதிப்பு: ஐந்தாவது இடத்தில் இந்தியா!

அதிகரிக்கும் பாதிப்பு: ஐந்தாவது இடத்தில் இந்தியா!

நாடு முழுவதும் ஒரே நாளில் கிட்டத்தட்ட 10,000 பேருக்கு கொரோனா பாதிப்பு உறுதி செய்யப்பட்டுள்ளது.

இந்தியாவில் கொரோனா வைரஸ் பரவலைக் கட்டுப்படுத்த இரண்டு மாதங்களுக்கும் மேலாக ஊரடங்கு அமலில் இருந்து வருகிறது. இருந்தாலும் கொரோனா பாதிப்பு என்பது அதிகரித்துக்கொண்டே உள்ளது. குறிப்பாக ஊரடங்கில் பல்வேறு தளர்வுகள் அளிக்கப்பட்ட ஜூன் 1ஆம் தேதிக்குப் பிறகு வெகு வேகமாக பாதிப்பு உயர்ந்து வருகிறது.

இந்த நிலையில் இதுவரை இல்லாத அளவுக்கு இன்று (ஜூன் 7) ஒரே நாளில் நாடு முழுவதும் அதிகபட்ச கொரோனா பாதிப்பு பதிவாகியுள்ளது. சுகாதாரத் துறை அமைச்சகம் வெளியிட்ட செய்திக் குறிப்பில், “கடந்த 24 மணி நேரத்தில் 9,971 பேருக்கு கொரோனா வைரஸ் தொற்று உறுதி செய்யப்பட்டுள்ளது. இதனையடுத்து, ஒட்டுமொத்தமாக கொரோனாவால் பாதிக்கப்பட்டவர்களின் எண்ணிக்கை 2,46,628 ஆக அதிகரித்துள்ளது” என்று தெரிவிக்கப்பட்டுள்ளது.

இதன்மூலம் கொரோனா வைரஸ் தொற்றுநோயால் மிகவும் பாதிக்கப்பட்டுள்ள நாடுகளின் பட்டியலில் ஸ்பெயினை பின்னுக்குத் தள்ளி இந்தியா ஐந்தாவது இடத்தைப் பிடித்தது. கொரோனா வைரஸ் பாதிப்பில் அமெரிக்கா, பிரேசில், ரஷ்யா மற்றும் இங்கிலாந்து ஆகியவை மட்டுமே இந்தியாவை விட முன்னிலையில் உள்ளன.

பாதிக்கப்பட்டவர்களில் 1,20,406 பேர் தற்போது மருத்துவமனைகளில் சிகிச்சை பெற்று வருகின்றனர். 1,19,293 பேர் பூரண நலம் பெற்று வீடு திரும்பிவிட்டனர். இதனால் கொரோனாவிலிருந்து மீளும் விகிதம் 48.36 சதவிகிதமாக அதிகரித்துள்ளது. கடந்த 24 மணி நேரத்தில் கொரோனாவால் 287 பேர் உயிரிழந்துள்ள நிலையில், ஒட்டுமொத்தமாக உயிரிழப்புகளின் எண்ணிக்கை 6,929 ஆக அதிகரித்துள்ளது. அதிகபட்சமாக மகாராஷ்டிரா மாநிலத்தில் 82,968 பேருக்கு கொரோனா வைரஸ் தொற்று உறுதி செய்யப்பட்டுள்ளது. அடுத்து தமிழகத்தில் 30,152, தலைநகர் டெல்லியில் 27,654 பேருக்கு கொரோனா உறுதிப்படுத்தப்பட்டுள்ளது.

இதுதொடர்பாக எய்ம்ஸ் மருத்துவமனை இயக்குனர் ரந்தீப் குலோரியா கூறுகையில், “இந்தியாவில் கொரோனா பாதிப்பு எண்ணிக்கை இன்னும் இரண்டு முதல் மூன்று மாதங்களில் உச்சத்தைத் தொடும். ஆனால், தேசிய அளவில் கொரோனா சமூகப் பரவலாக மாறவில்லை” என்று அவர் தெரிவித்தார்.

நாளை முதல் மதவழிபாட்டு தலங்களை திறக்க மத்திய அரசு அனுமதியளித்துள்ளது. அதுபோலவே உணவகங்கள், விடுதிகள், வணிக வளாகங்களை திறக்கவும் அனுமதியளிக்கப்பட்டுள்ளது. ஏற்கனவே கொரோனா பாதிப்பு அதிகமாகியுள்ள நிலையில், நாளை முதல் புதிய தளர்வுகள் அமலுக்கு வருவதால் கொரோனா வேகம் அதிகரிக்கும் என எதிர்பார்க்கப்படுகிறது.

எழில்

ஞாயிறு, 7 ஜுன் 2020

chevronLeft iconமுந்தையது
அடுத்ததுchevronRight icon