கொரோனா பாதிப்பைக் குறைக்க ஊரடங்கு பயனளித்ததாக மத்திய அரசு தெரிவித்துள்ளது.
கொரோனா பரவலைக் கட்டுப்படுத்துவதற்காக நாடு முழுவதும் இரண்டு மாதங்களுக்கும் மேலாக ஊரடங்கு அமலில் உள்ளது. இருந்தபோதிலும் கொரோனாவால் பாதிக்கப்பட்டவர்களின் எண்ணிக்கை ஒரு லட்சத்தைத் தாண்டி சென்றுகொண்டிருக்கிறது. அதேநேரம் குணமடைவோர் விகிதம் அதிகமாக இருப்பதும், கொரோனா தடுப்பு மற்றும் நிவாரண நடவடிக்கைகள் தொடர்பாக சுகாதாரத் துறை அமைச்சகம் நேற்று (மே 21) வெளியிட்ட செய்திக் குறிப்பில், “நாட்டின் சுகாதார உள்கட்டமைப்பை மேம்படுத்துவதற்கு இந்த காலம் சிறப்பாகப் பயன்படுத்தப்பட்டுள்ளது” என்றும் கூறியுள்ளது.
ஊரடங்கு மட்டுமே பயனளிக்காது என்ற எதிர்க்கட்சிகளின் விமர்சனத்திற்குப் பதில் கூறியுள்ள சுகாதாரத் துறை அமைச்சகத்தின் அதிகாரி, “அப்படிச் சொல்வது சரியானதல்ல. சிகிச்சை தேவைப்படும் அனைவருக்கும் அது சரியான நேரத்தில் கிடைப்பதை உறுதிசெய்யும் வகையில் சுகாதாரக் கட்டமைப்பை மேம்படுத்தியுள்ளது. மத்திய மற்றும் மாநில அரசுகள் 3,027 கொரோனா தடுப்பு மருத்துவமனைகளையும், 7,013 கொரோனா தடுப்பு மையங்களையும் ஏற்படுத்தியுள்ளன. 2.81 லட்சம் தனிமைப்படுத்தப்பட்ட படுக்கைகள் ஏற்படுத்தப்பட்டுள்ளன. தீவிர சிகிச்சைப் பிரிவில் 31,250 படுக்கைகளும், ஆக்சிஜன் உதவியுடன் கூடிய 11,387 படுக்கைகளும் உள்ளன” என்று தெரிவித்தார்.
மத்திய சுகாதாரத் துறை அமைச்சர் ஹர்ஷவர்தன் கூறுகையில், “பல வளர்ந்த மற்றும் வளரும் நாடுகளுடன் ஒப்பிடும்போது, கொரோனா வைரஸை ஒப்பிடும்போது இந்தியா ஒரு சிறந்த போராட்டத்தை நடத்தி வருகிறது. பாதிக்கப்பட்ட ஒரு லட்சம் பேரில் 40,000க்கும் அதிகமானோர் வீடு திரும்பிவிட்டனர். மீதமுள்ள 60,000 பேரில் பெரும்பாலானோர் குணமடையும் நிலையில் உள்ளனர். நம் நாட்டில் இறப்பு விகிதம் மிகவும் குறைவாக உள்ளது. கொரோனா விஷயத்தில் மற்ற நாடுகளை ஒப்பிடும்போது நாம் நன்றாகவே இருக்கிறோம்” என்றார். 65 லட்சம் பிபிஇ கவச உடைகள் வழங்கப்பட்டுள்ளன. ஒரு கோடியே 10 லட்சம் என்-95 முகக்கவசங்கள் வழங்கப்பட்டுள்ளன என்றும் அவர் குறிப்பிட்டார்.
எழில்