மின்னம்பலம் மின்னம்பலம்
காலை 7, வியாழன், 22 அக் 2020

தனியார் மருத்துவமனைகளுக்கு தமிழக அரசு எச்சரிக்கை!

தனியார் மருத்துவமனைகளுக்கு தமிழக அரசு எச்சரிக்கை!

அத்தியாவசிய சிகிச்சைகளை மேற்கொள்ள வேண்டுமென தனியார் மருத்துவமனைகளுக்கு தமிழக அரசு எச்சரிக்கை விடுத்துள்ளது.

கொரோனா பாதிப்பை கட்டுக்குள் கொண்டு வருவதற்காக இந்தியா முழுவதும் ஊரடங்கு அமல்படுத்தப்பட்டுள்ளது. அத்தியாவசிய தேவைகளான உணவு மற்றும் மருந்து பொருட்களுக்கு மட்டுமே ஊரடங்கில் இருந்து விலக்கு அளிக்கப்பட்டுள்ளது.

தமிழகம் முழுவதும் சுமார் 1.5 லட்சம் கர்ப்பிணிகள் ஏப்ரல் மற்றும் மே மாதங்களில் பிரசவத்திற்காக காத்திருக்கிறார்கள். அவர்களுக்கு தனிக்கவனம் எடுத்தும் உரிய மருத்துவ உதவிகளை செய்ய வேண்டும் என்று மருத்துவர்களுக்கு தமிழக அரசு அறிவுறுத்தியுள்ளது. மேலும், மருத்துவ உதவி தேவை என்ற பட்சத்தில் உடனடியாக 102 மற்றும் 104 உதவி எண்களை அழைக்கலாம் என்றும் தெரிவித்திருந்தது. இந்த நிலையில் மகளிர், குழந்தைகளுக்கு தனியார் மருத்துவமனைகளில் சிகிச்சை மறுக்கப்படுவதாக தமிழக அரசுக்கு தகவல் சென்றிருக்கிறது.

இந்த நிலையில் சுகாதாரம் மற்றும் கிராமப்புற மருத்துவ சேவை இயக்குனரகம் இன்று (ஏப்ரல் 3) வெளியிட்ட அறிவிப்பில், “மகப்பேறு, குழந்தைகளுக்கான சிகிச்சை உள்ளிட்ட அத்தியாவசிய சிகிச்சைகளை அனைத்து தனியார் மருத்துவமனைகளும் கட்டாயம் அளிக்க வேண்டும். அதுபோலவே டயாலிசிஸ், கீமோதெரபி, நரம்பியல் சிகிச்சைகளும் தொடர வேண்டும்” என்று தெரிவித்துள்ளது.

இதுபோன்ற சிகிச்சைகள் மறுக்கப்படுவதாக அரசுக்கு தகவல் வந்துள்ளாகவும், “மேற்கண்ட அத்தியாவசிய சேவைகளை மறுப்பது நியாயமற்றது மற்றும் இந்திய மருத்துவ கவுன்சிலின் விதிகளுக்கு எதிரானது. வழக்கமாக தங்களிடம் வருபவர்களுக்கு சிகிச்சை அளிக்க வேண்டும். விதிகளை மீறும் பட்சத்தில் மருத்துவமனை அங்கீகாரம் தற்காலிகமாகவோ அல்லது நிரந்தரமாகவோ ரத்து செய்யப்படும்” என்று எச்சரித்துள்ளது.

எழில்

வெள்ளி, 3 ஏப் 2020

chevronLeft iconமுந்தையது
அடுத்ததுchevronRight icon