iகொரோனாவை எதிர்கொள்ள ரூ.15,000 கோடி: பிரதமர்

health

கொரோனா வைரஸ் தடுப்பு நடவடிக்கைகளுக்கு 15,000 கோடி ரூபாய் நிதி ஒதுக்கீடு செய்திருப்பதாக பிரதமர் நரேந்திர மோடி தெரிவித்துள்ளார்.

கொரோனா வைரஸின் தாக்கம் இந்தியாவில் நாளுக்கு நாள் அதிகரித்துக்கொண்டே உள்ளது. கொரோனா தடுப்பு நடவடிக்கைகளில் மத்திய மாநில அரசுகள் தீவிரமாக ஈடுபட்டு வருகின்றன. கொரோனாவுக்கு மருந்து கண்டுபிடிக்கப்படாததால், வருமுன் காப்போம் என்பதையே முக்கியமாகக் கொண்டு மக்கள் வீட்டிலேயே இருக்கும்படி அரசுகள் கோரிக்கை விடுத்துள்ளன.

இந்த நிலையில் நேற்று (மார்ச் 24) நாட்டு மக்களிடம் உரையாற்றிய பிரதமர் நரேந்திர மோடி, “மார்ச் 22ஆம் தேதி நடந்த மக்கள் ஊரடங்கின் மூலம் இந்திய மக்கள் கொரோனா வைரஸை எதிர்த்துப் போராடுகிறார்கள் என்பதை உலகம் தெரிந்துகொண்டது. ஊரடங்கு உத்தரவை வெற்றிகரமாக நடத்தி காட்டிய மக்களுக்கு நன்றி. நாடு முழுவதும் அடுத்த 21 நாட்களுக்கு ஊரடங்கு உத்தரவு அமல்படுத்தப்படுகிறது. ஒவ்வொரு மாநிலத்திலும், ஒவ்வொரு யூனியன் பிரதேசத்திலும், ஒவ்வொரு மாவட்டத்திலும், ஒவ்வொரு வட்டத்திலும், ஒவ்வொரு கிராமத்திலும் அமலுக்கு வருகிறது” என்று அறிவித்தார்.

ஊரடங்கானது நாட்டின் பொருளாதாரத்தில் பாதிப்பை ஏற்படுத்தும், இருந்தாலும் ஒவ்வோர் இந்தியனின் உயிரைக் காப்பாற்றுவதற்குத்தான் நாம் முன்னுரிமை அளிக்க வேண்டும் என்று தெரிவித்த பிரதமர்,

“கொரோனாவை தடுக்க மூன்று வாரங்கள் சமூக விலகல் என்பது மிகவும் முக்கியம். நீங்கள் வெளியேறினால் கொரோனா வைரஸை அழைத்து வருவீர்கள் என்பதை நினைவில்கொள்ள வேண்டும். இதனால் பல குடும்பங்கள் அழிக்கப்படும். வதந்திகள் மற்றும் மூட நம்பிக்கைகளை நம்ப வேண்டாம். மத்திய, மாநில அரசுகள் மற்றும் மருத்துவ சகோதரர்களின் வழிமுறைப்படி நடந்துகொள்வது அவசியம். கொரோனா வைரஸ் பாதிப்பின் ஏதேனும் ஓர் அறிகுறி உங்களுக்குத் தென்பட்டாலும் மருத்துவர்களின் பரிந்துரையில்லாமல் எந்த மருந்தையும் எடுத்துக்கொள்ள வேண்டாம். இதுபோன்ற கவனக்குறைவு உங்கள் வாழ்க்கையை மேலும் ஆபத்தில் ஆழ்த்தக்கூடும்.

ஊரடங்கு அமலில் இருந்தாலும், அத்தியாவசிய பொருட்கள் அனைத்தும் தடையின்றி கிடைப்பதை உறுதிப்படுத்தும் நடவடிக்கைகள் அனைத்தையும் எடுத்து வருகிறோம். 21 நாட்கள் ஊரடங்கைக் கடைப்பிடிக்கவில்லை எனில் நாம் 21 ஆண்டுகள் பின்னோக்கி சென்றுவிடுவோம். கொரோனா பாதித்த நபர் ஆரம்பத்தில் சாதாரணமாகத்தான் இருப்பார், அவருக்கு கொரோனா அறிகுறிகள் எதுவும் தெரியாது என்பதை நீங்கள் நினைவில்கொள்ள வேண்டும். ஆகவே முன்னெச்சரிக்கை நடவடிக்கையைக் கடைப்பிடித்து வீட்டிலேயே இருங்கள்” என்று வேண்டுகோள் விடுத்தார்.

“21 நாட்கள் ஊரடங்கு என்பது நீண்டகாலம்தான். ஆனால், உங்களுடைய மற்றும் உங்கள் குடும்பத்தினருடைய பாதுகாப்பு மிகவும் முக்கியமாகும். ஒவ்வோர் இந்தியரும் இந்தச் சவாலை வெற்றிகரமாகச் சமாளிப்பதோடு மட்டுமல்லாமல், நெருக்கடியான இந்த நேரத்தில் வெற்றிகரமாகச் செயல்படுவார்கள் என்று நான் நம்புகிறேன். கொரோனா தடுப்பு நடவடிக்கைகளில் உயிரைப் பணயம் வைத்து ஈடுபடுபவர்களை நினைவில் வைத்துக்கொள்ளுங்கள். இந்த கடினமான காலங்களில் இரவு பகலாக உழைக்கும் மருத்துவர்கள், செவிலியர்கள், நோயியல் நிபுணர்கள், மருந்தாளுநர்கள், ஆம்புலன்ஸ் டிரைவர்கள், வார்டு பாய் உள்ளிட்ட அனைவரையும் மனத்தில் வைத்துக்கொள்ளுங்கள்.

உங்களையும் உங்கள் குடும்பத்தையும் பாதுகாக்க, தங்கள் சொந்த குடும்பத்தைப் பற்றிச் சிந்திக்காமல், இரவும் பகலும் தங்கள் கடமையில் இருக்கும் காவல்துறையினரைப் பற்றி சிந்தியுங்கள். சில நேரங்களில் சிலரின் கோபத்தையும் அவர்கள் எதிர்கொள்கிறார்கள். அதேபோல கொரோனா வைரஸை ஒழிக்க சாலைகள் மற்றும் பொது இடங்களைத் தூய்மைப்படுத்தும் தூய்மைப் பணியாளர்களுக்காகப் பிரார்த்தனை செய்யுங்கள். சரியான தகவல்களை வழங்க சாலைகளில் தங்கி, மருத்துவமனைகளுக்குச் சென்று வந்து 24 மணி நேரமும் பணியாற்றும் ஊடகத்தினர் பற்றியும் நீங்கள் சிந்திக்க வேண்டும்” என்றும் தனது உரையில் பிரதமர் குறிப்பிட்டார்.

மேலும், “அரசுக்கு மக்கள் ஒத்துழைத்தால் மட்டுமே கொரோனா பாதிப்பை 100 சதவிகிதம் கட்டுப்படுத்துவது சாத்தியம். கொரோனாவால் பாதிக்கப்பட்டவர்கள் எண்ணிக்கை அதிகரித்து வரும் நிலையில், நீங்கள் எங்கு இருக்கிறீர்களோ… அங்கேயே இருங்கள் என்று உங்களைக் கையெடுத்து கும்பிட்டுக் கேட்டுக்கொள்கிறேன்” என்று குறிப்பிட்ட பிரதமர், கொரோனா வைரஸ் சோதனை, மருத்துவ உபகரணங்கள் வாங்குவது, ஐசியு, வென்டிலேட்டர், பயிற்சி மருத்துவ ஊழியர்களுக்குச் சம்பளம் என அனைத்துக்கும் 15,000 கோடி ரூபாய் நிதி ஒதுக்கப்படுகிறது எனவும் அறிவித்தார்.

**எழில்**�,

+1
0
+1
0
+1
0
+1
0
+1
0
+1
0
+1
0

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *