“மூச்சுவிடுவதில் சிரமம், வயிற்றுவலி, உடல் பருமன் என்று பல்வேறு மருத்துவ சிகிச்சைகளை எடுத்துக்கொண்டு, கடைசியாக ‘எதற்கும் குடல்நல மருத்துவரைப் பாருங்கள்’ என்று யாரோ ஒருவர் பரிந்துரைத்த நிலையில்தான் பலருக்கு ‘குடல் இறக்கம்’ என்கிற பிரச்சினை இருப்பது தெரிய வருகிறது. இதை அலட்சியப்படுத்தாதீர்கள்… ஆபத்தில் முடியலாம்” என்று எச்சரிக்கிறார்கள் குடல்நல மருத்துவர்கள்.
“குடல் இறக்கம் என்கிற ‘ஹெர்னியா’ ஏற்படுவதற்கு குறிப்பிட்டுச் சொல்லும்படி பொதுவாக எந்த ஒரு காரணமும் இல்லை. அதிகம் எடை கொண்ட பொருளைத் தூக்குவது, காலைக்கடன் முடிக்க சிரமப்பட்டு வயிற்றில் அழுத்தம் கொடுப்பதால் ஹெர்னியா ஏற்படலாம். பிறவியிலேயேகூட இந்தப் பிரச்சினை இருந்து, வளர்ந்த பிறகு வெளிப்படலாம். தொடர் இருமல், குடல் செயல்பாட்டில் பிரச்னை, கூடுதல் உடல் எடை, ஊட்டச்சத்துக் குறைவு, புகைப்பழக்கம், கடினமான உடல் உழைப்பு போன்ற காரணங்களால், வயிற்றில் அழுத்தம் அதிகரித்து வயிற்றுத் தசைகள் வலுவிழந்தும் ஹெர்னியா ஏற்படலாம்.
சிலருக்கு தொடர் இருமல், மலம் கழிக்கும்போது முக்குதல் போன்ற நிகழ்வுகளின்போது வலுவிழந்த தசைப் பகுதியில் சிறிய வீக்கம் ஏற்பட்டு அந்தப் பகுதியில் அதிக வலி ஏற்படும். சிலருக்கு ஜீரண பாதிப்பு ஏற்பட்டு வாந்தி, காலைக் கடன் முடிக்க முடியாத நிலை போன்றவை ஏற்படும். நீரிழிவு நோய் இருக்கும் சிலருக்கு ஹெர்னியாவின் வலி தெரியாது. அவர்கள் அதை நீண்ட காலத்துக்கு கவனிக்காமல்விட்டால் ஒருகட்டத்தில் திடீரென வலி ஏற்பட்டு அவசர சிகிச்சை செய்து கொள்ள வேண்டிய நிலை ஏற்படக்கூடும்.
சிசேரியன் பிரசவமான பெண்களில் சிலருக்குத் தையல் போட்ட இடத்தில் ஹெர்னியா வரும். ஆனால், அது ஹெர்னியா என்று அடையாளம் கண்டுகொள்ளாமல் தொப்பை என்றே நினைத்துக்கொண்டிருப்பார்கள். ஹெர்னியாவை உரிய நேரத்தில் கண்டறிந்து சிகிச்சை பெற்றுக்கொண்டால் பெரிய ஆபத்து இல்லை. ஆனால், ஹெர்னியா இருப்பவர்களுக்கு அதைக் கவனிக்காமல்விட்டால், சில நேரங்களில் வயிற்றுக்குள் குடல் முறுக்கிக்கொள்ளும். கடுமையான வலி எடுக்கும். இந்த நிலை உயிருக்கு ஆபத்தானது.
இந்த நிலையில், ஹெர்னியா பாதிப்புக்கு அறுவை சிகிச்சைதான் தீர்வு. ஆனால், அதன் அளவு, அதனால் ஏற்படும் வலி உள்ளிட்ட அசௌகர்யங்கள் ஆகியவற்றைப் பொறுத்தே அறுவை சிகிச்சை தேவையா என முடிவு செய்வோம். சில நேரங்களில் இன்னும் சில காலம் பொறுத்துக்கொள்ளலாம், பிரச்னை தீவிரமானால் பார்த்துக்கொள்ளலாம் என்ற நிலையில் அறுவை சிகிச்சையைத் தள்ளிப்போடலாம்.
பொதுவாக ஐம்பது வயதுக்கும் மேலானவர்களை அதிகம் பாதிக்கும் பிரச்சினை இது என்பதால் தினமும் மிகவும் இறுக்கமான உடைகளை அணிவது குடல் இறக்கத்தை உருவாக்கும் அபாயத்தை அதிகரிக்கும். இதைத் தடுக்க மிகவும் இறுக்கமான மற்றும் அசௌகர்யத்தை ஏற்படுத்தும் உடைகளை அணிவதைத் தவிர்க்கலாம்.
அடுத்து, உடல் பருமன் குடல் இறக்கத்துக்கான முக்கிய காரணம் என்பதால் ஆரோக்கியமான எடையைப் பராமரியுங்கள். தவறாமல் உடற்பயிற்சி செய்யுங்கள். அது உங்கள் வயிற்றுத் தசைகளை வலுவாக வைத்திருக்கவும் பலவீனமடைவதையும் தடுக்கும். புகைபிடித்தல் குடல் இறக்கத்தை உருவாக்கும் அபாயத்தை அதிகரிக்கும் என்பதால் அந்தப் பழக்கத்தை நிறுத்துங்கள். நாள்பட்ட மலச்சிக்கலால் அவதிப்படுபவர் என்றால் உணவில் காய்கறிகள், முழு தானியங்கள், கொட்டைகள் மற்றும் விதைகள், கீரைகள் போன்ற நார்ச்சத்து அதிகம் உள்ள உணவுகளைச் சேர்த்துக் கொள்ளுங்கள்” என்கிறார்கள் குடல்நல மருத்துவர்கள்.
செய்திகளை உடனுக்குடன் பெற மின்னம்பலம் வாட்ஸ் ஆப் சேனலில் இணையுங்கள்…
டாப் 10 நியூஸ்: விழுப்புரத்தில் முதல்வர் ஆய்வு முதல் கனமழை விடுமுறை வரை!
T20 Ranking: முதலிடத்தில் தொடரும் சூர்யகுமார், முன்னேறிய வீரர்கள் யார்?