குளிர்காலத்தில் வாயுத் தொல்லை உள்ளிட்ட செரிமான பிரச்னைகளை தடுக்க சில வழிமுறைகள் உள்ளன.
குளிர்காலத்தில் வெப்பநிலை குறைவாக இருப்பதால் நமது உடலில் செரிமான இயக்கங்கள் மெதுவாக நடைபெறுகின்றன. அதாவது, குளிர் காரணமாக ஒட்டுமொத்த உடல் இயக்கமும் சற்று குறைகிறது, இதனால் செரிமானம் ஆவது தாமதமாகிறது. ஆகவே, இந்த பிரச்னை நமது வயிற்றை நேரடியாக பாதிக்கிறது. இதன் காரணமாக வாயு, அஜீரணம், எடை அதிகரிப்பு, மலச்சிக்கல் உள்ளிட்ட பிரச்சனைகளை எதிர்கொள்ள வேண்டியுள்ளது.
குளிர்காலத்தில் செரிமானம் சீராக நடக்க தினசரி நாம் சாப்பிடும் உணவுகளில் கவனம் செலுத்துவது அவசியம் என்று மருத்துவர்கள் கூறுகிறார்கள். சரியான நேரத்தில் சரியான உணவை சாப்பிடவில்லை எனில், வயிறு பிரச்னைகள் ஏற்பட்டும், உடலின் நோய் எதிர்ப்பு சக்தி குறையக்கூடும். குளிர்காலத்தில் செரிமானக் கோளாறு ஏற்படாமல் தடுக்க என்ன செய்ய வேண்டும் என்பது குறித்து பார்ப்போம்.
லேசான உணவுகளை சாப்பிடலாம்
குளிர்காலத்தில் செரிமான மண்டலம் ஆரோக்கியமாக செயல்பட லேசான மற்றும் சூடான உணவுகளை நாம் எடுத்துக்கொள்ள வேண்டும். குளிச்சியான அல்லது பழைய உணவுகள் செரிமான மண்டலத்திற்கு தீங்கு விளைவிக்கக் கூடும். அதே சமயம் காய்கறிகள், பருப்பு வகைகள், சூப்கள் மற்றும் கிச்சடி போன்ற உணவுகள் எளிதில் ஜீரணமாகும், இவை வயிற்றில் அதிக அழுத்தத்தை ஏற்படுத்தாது. சூடான உணவுகள் உடலை உற்சாகப்படுத்துகிறது, வாயுத் தொல்லையை நீக்குகிறது.
நார்ச்சத்துள்ள உணவுகளை சாப்பிடுங்கள்
மற்ற காலங்களை விட குளிர்காலத்தில் மலச்சிக்கல் ஏற்படுவது பொதுவாக உள்ளது. நார்ச்சத்து இல்லாதது, போதுமான அளவு தண்ணீர் உட்கொள்ளாததுதான் இதற்கு முக்கிய காரணம். காய்கறிகள், பழங்கள் மற்றும் தானியங்களில் நார்ச்சத்து நிறைந்துள்ளது. இது செரிமான மண்டலத்தை பலப்படுத்துகிறது. நார்ச்சத்து குடல்களை சுத்தப்படுத்துகிறது மற்றும் குடல் இயக்கத்தை எளிதாக்குகிறது. மருத்துவர்களின் கூற்றுப்படி, உங்கள் தினசரி உணவில் சாலட், கேரட், கீரை, ஆப்பிள் மற்றும் கொய்யாவைச் சேர்ப்பது நீண்டகால ஆரோக்கியத்தை பராமரிக்கவும் மருந்துகளின் தேவையைத் தடுக்கவும் உதவும்.
தயிர், மோர் சேர்த்துக்கொள்ளுங்கள்
குளிர்காலங்களில் சளிபிடித்துவிடும் என பலரும் தயிர், மோர் வகைகளை ஒதுக்கிவிடுகிறார்கள். ஆனால், இது செரிமான அமைப்புக்கு தீங்கையே விளைவிக்கும். தயிர், மோரில் உள்ள புரோபயாடிக்குகள் குடலை வலுப்படுத்தி செரிமான அமைப்பை சீராக இயங்க வைக்கின்றன. தினமும் தயிர் அல்லது மோர் உட்கொள்வது வாயு, அஜீரணம் மற்றும் வயிற்று பிரச்னையை குறைக்கும். அதே சமயம் இரவில் தயிர் சாப்பிடுவதை தவிர்த்து விடுங்கள்.
இஞ்சி, சீரகம் பயன்படுத்துங்கள்
நம் சமையலறைகளில் காணப்படும் இஞ்சி, சீரகம், பெருங்காயம் உள்ளிட்ட சில சில மசாலாப் பொருட்கள் குளிர்காலத்தில் வயிற்றுப் பிரச்சினைகள் ஏற்படாமல் தடுக்க பயனுள்ளதாக உள்ளன. இவை வாயு, வயிற்று வலி மற்றும் அஜீரணத்திலிருந்து உடனடி நிவாரணம் அளிக்கின்றன. நம் வீட்டில் இருந்து கிடைக்கும் பொருட்கள் எந்த பக்க விளைவுகளும் இல்லாமல் ஆரோக்கியமான வயிற்றைப் பராமரிக்க உதவுகின்றன.
குளிர்காலத்தில் காரமான மற்றும் வறுத்த உணவுகளை சாப்பிடுவது வயிற்றுப் பிரச்சினைகளை ஏற்படுத்தும். எண்ணெய், சர்க்கரை அதிகம் உள்ள உணவுகள் செரிமான அமைப்பை பலவீனப்படுத்தி வாயு, அமிலத்தன்மை மற்றும் அஜீரணத்தை அதிகரிக்கும். ஆகவே, இதுபோன்ற உணவுகளை குளிர்காலத்தில் தவிர்க்க வேண்டும் அல்லது குறைத்துக்கொள்ள வேண்டும். லேசான உணவுகள் மட்டுமே செரிமான மண்டலத்திற்கு ஏற்புடையதாக இருக்கும்.
