பலருடைய அன்றாட வேலைகளை பாதிப்பதில் பெரிய பங்குதாரராக தலைவலி இருக்கும். வலி ஓரிடத்தில் ஏற்பட்டாலும் அதற்கான காரணங்கள் பலவாக இருக்கின்றன.
பொதுவாக தலையில் அல்லது நெற்றிப் பகுதியில் உள்ள தசைகள் இறுக்கம் அடையும்போது ஏற்படக்கூடிய அசௌகர்யத்தை தான் நாம் தலைவலியாக உணர்கிறோம். தலைவலியை முதல் நிலை தலைவலி (Primary Headache) மற்றும் இரண்டாம் நிலை தலைவலி (Secondary Headache) என இரண்டு வகையாகப் பிரிக்கலாம்.
முதல் நிலை தலைவலி ஏற்படுவதற்கு தூக்கமின்மை, அதிக கோபம், மன அழுத்தம் எனப் பல்வேறு காரணங்கள் உள்ளன. இதற்கு நாம் வழக்கமாக எடுத்துக்கொள்ளும் தலைவலி தைலம் அல்லது வலி அதிகமாக இருக்கும்பட்சத்தில் வலி நிவாரண மாத்திரைகள் போதுமானதாக இருக்கும். பெரும்பாலானவர்கள் பாதிக்கப்படுவது முதல் நிலை தலைவலியால்தான்.
இரண்டாம் நிலை தலைவலி என்பது நரம்புகளோடு தொடர்புடைய பிரச்சினை. மூளையில் கட்டி, புற்றுநோய் போன்ற பிரச்சினைகளால் ஏற்படக்கூடியது. அடுத்தகட்ட சிகிச்சைக்கு முக்கியத்துவம் கொடுக்க வேண்டிய தலைவலி இது. பிரச்சினையைக் கண்டறிந்து அதற்குத் தீர்வு காணும்பட்சத்தில் தலைவலிக்கும் தீர்வு கிடைக்கும்.
பெரும்பாலானோருக்கு மன அழுத்தம், தூக்கமின்மை, கம்ப்யூட்டர், மொபைலில் அதிக நேரம் செலவழிப்பது, மது அருந்தும் பழக்கம் போன்றவை முக்கிய காரணங்களாக இருக்கும். நீர்ச்சத்து இழப்பு தலைவலிக்கு முக்கிய தூண்டுதலாக இருக்கும். எனவே, போதுமான அளவு தண்ணீர் குடிக்க வேண்டும்.
மைக்ரேன் எனும் ஒற்றைத் தலைவலி இருப்பவர்களுக்கு காபியில் உள்ள கஃபைன், அதிகம் புராசெஸ் செய்யப்பட்ட உணவுகள், சீஸ் போன்றவை ஒவ்வாமையை ஏற்படுத்தி, தலைவலியைத் தூண்டலாம். அதேபோல குளூட்டன் ஒவ்வாமை உள்ளவர்கள் கோதுமை, ரவை , பிரெட் உள்ளிட்ட குளூட்டன் இருக்கும் உணவை எடுத்துக்கொள்ளும்போது தலைவலி வரலாம். மைக்ரேன், குளூட்டன் ஒவ்வாமை உள்ளவர்கள் பிரச்சினையைத் தீவிரமாக்கும் உணவுகள் எடுத்துக்கொள்வதைத் தவிர்க்க வேண்டும்.
மைக்ரேன் தலைவலி ஏற்படும்போது, தலைவலியோடு வாந்தி போன்ற பிரச்னையும் ஏற்படும். இந்தத் தலைவலி இரண்டு முதல் மூன்று நாள்கள் வரைகூட நீடிக்கும். இந்த நாள்களில் அதிக வெளிச்சம், சத்தத்துக்கு ஆட்படும்போது தலைவலி தீவிரமாகலாம். தலைப்பகுதியில் உள்ள சிறிய காற்று துவாரங்களில் நீர் கோப்பதால், ‘சைனஸ்’ தலைவலி ஏற்படலாம். தலைக்கு குளிக்கும்போது, குளிர்பானங்கள், ஐஸ்கிரிம் போன்ற குளிர்ச்சியான உணவுகள் எடுத்துக்கொள்ளும்போது தலைவலி மேலும் தீவிரமாகலாம். எனவே, நிரந்தர தீர்வுக்கு மருத்துவரை அணுகி காரணங்களைக் கண்டறிந்து அதற்கேற்ற தீர்வைப் பெற வேண்டும்.
சைனஸ் பிரச்சினை உள்ளவர்கள் காது – மூக்கு – தொண்டை மருத்துவரின் ஆலோசனைகளைப் பெற வேண்டும். மூச்சுப்பயிற்சி, யோகா செய்வது போன்றவை மன அழுத்தத்தால் ஏற்படும் தலைவலியைக் குறைக்க உதவும். மெக்னீசியம் நரம்பு மற்றும் தசைகளைச் சீராக்குவதால் தலைவலி ஏற்படாமல் தடுக்கும். எனவே, வாழைப்பழம், நட்ஸ், கொண்டைக்கடலை, பச்சைப் பட்டாணி, டார்க் சாக்லேட் போன்ற மெக்னீசியம் அதிகமாக இருக்கும் உணவுகளை எடுத்துக்கொள்ளலாம்” என்கிறார்கள் நரம்பியல் மருத்துவர்கள்.
செய்திகளை உடனுக்குடன் பெற மின்னம்பலம் வாட்ஸ் ஆப் சேனலில் இணையுங்கள்.
இதெல்லாம் காதுகள் தாங்காதுப்பா : அப்டேட் குமாரு