பெங்களூருவில் முன்னாள் மனைவி கொடுமையால் ஐ.டி ஊழியர் ஒருவர் தற்கொலை செய்து கொண்டுள்ள நிலையில், மனைவி கொடுமையால் போலீஸ்காரர் ஒருவர் தற்கொலை செய்து கொண்டிருப்பது அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது.
கர்நாடக மாநிலம் விஜயபுராவை சேர்ந்தவர் திப்பன்னா. இவர், ஹூ்லிமாவு காவல் நிலையத்தில் தலைமை போலீஸ்காரராக பணியாற்றி வந்தார்.
இவருக்கும் பார்வதி என்பவருக்கும் 3 ஆண்டுகளுக்கு முன்பு திருமணம் நடந்தது. எலக்ட்ரானிக் சிட்டி பகுதியில் இந்த தம்பதி வசித்து வந்துள்ளனர். தம்பதிக்கிடையே, அடிக்கடி தகராறு ஏற்பட்டுள்ளது. திப்பன்னாவை மனைவி மற்றும் மாமனார் ஆகிய இருவரும் சேர்ந்து கொடுமைப்படுத்தியுள்ளனர்.
மனைவியின் கொடுமை தாங்காமல் திப்பன்னா கடும் மன உளைச்சலில் இருந்துள்ளார்.
இந்த நிலையில், ஹஸ்கூர் பகுதியில் தனது பைக்கை நிறுத்தி விட்டு, யூனிபார்மிலேயே ரயில் முன் பாய்ந்து திப்பன்னா உயிரை மாய்த்துக் கொண்டார்.
சம்பவ இடத்துக்கு வந்த போலீசார் அவரின் உடலை மீட்டு மருத்துவமனைக்கு அனுப்பி வைத்தனர். அவரது, பைக்கையும் மீட்டு சென்றனர்.
திப்பன்னாவின் தாயார் மருமகள் பார்வதி மீது போலீசில் புகாரளித்துள்ளார். இதனடிப்படையில், போலீசார் விசாரணை நடத்தி வருகின்றனர்.
தற்கொலைக்கு முன்பு திப்பன்னா எழுதியுள்ள கடிதத்தில், மனைவி பார்வதி மனதளவில் செய்யும் கொடுமை தாங்க முடியாமல் உயிரை மாய்த்துக் கொள்வதாக கூறியுள்ளார்.
மேலும், தனது மாமனார் யமுனாப்பா தன்னை போனில் மிரட்டியதாகவும் ‘ஒன்று நீ செத்து போ இல்லையென்றால் நான் உன்னை கொன்று போட்டு விடுவேன்’ என்று மிரட்டியதாகவும் அந்த கடிதத்தில் அவர் தெரிவித்துள்ளார்.
கர்நாடகாவில் ஐ.டி ஊழியர் அதுல் சுபாஷ் என்பவர் விவாகரத்து பெற்ற மனைவி கொடுமையால் தற்கொலை செய்து கொண்ட சம்பவம் பரபரப்பை ஏற்படுத்தியிருந்தது.
அந்த பரபரப்பு அடங்குவதற்குள் ஹெட் கான்ஸ்டபிள் ஒருவரே மனைவி மற்றும் மாமனார் கொடுமையால் உயிரை மாய்த்துக் கொண்டுள்ளது ஆண் வர்க்கத்தை கடும் அதிர்ச்சிக்குள்ளாக்கியுள்ளது.
செய்திகளை உடனுக்குடன் பெற மின்னம்பலம் வாட்ஸப் சேனலில் இணையுங்கள்….
-எம்.குமரேசன்
ஐ.டி ஊழியர் தற்கொலை: ஒரே ஒரு போன் கால்… கொடுமைக்கார மனைவியை தட்டி தூக்கிய போலீசார்!
அல்லு அர்ஜுன் கைதுக்கு பின்னணி அரசியல்… பவன் கல்யாண் காரணமா?