சஸ்பெண்ட் தொடர்பாக அவர் சொன்ன கருத்து என்பது கட்சிக்கும், தலைமைக்கு எதிராகவும் தான் இருந்தது என விசிகவில் இருந்து விலகிய ஆதவ் அர்ஜுனா குறித்து திருமாவளவன் கூறியுள்ளார்.
கடந்த 6ஆம் தேதி நடந்த அம்பேத்கர் புத்தக வெளியீட்டு விழாவில் விசிக துணைப் பொதுச்செயலாளராக இருந்த ஆதவ் அர்ஜுனா திமுகவுக்கு எதிராக பேசியது சர்ச்சையைக் கிளப்பியது.
இதையடுத்து அவர் 6 மாதங்கள் சஸ்பெண்ட் செய்யப்படுவதாக அக்கட்சியின் தலைவர் திருமாவளவன் உத்தரவிட்டார். எனினும் தொடர்ந்து திமுக மற்றும் விசிகவுக்கு எதிராக ஊடகங்களில் பேட்டியளித்து வந்தார் ஆதவ். இந்த நிலையில், விசிகவில் இருந்து தான் முழுமையாக விலகுவதாக நேற்று அறிவித்தார்.
கட்சியில் சேரும்போது ஆதவ் சொன்ன வார்த்தை!
இதுதொடர்பாக சென்னை விமான நிலையத்தில் நேற்று இரவு செய்தியாளர்களை சந்தித்து திருமாவளவன் பேசுகையில், “விசிகவில் இருந்து விலகுவது தொடர்பான விளக்கத்தை அவரே அளித்துள்ளார். அவர் நல்ல நோக்கத்தின் அடிப்படையில் தான் கட்சியில் வந்து இணைந்தார். அவர் கட்சியில் சேரும் போது.. ’திமுக உட்பட எந்த கட்சியில் வேண்டுமென்றாலும் என்னால் இணைந்திருக்க முடியும். ஆனால், தலித் மக்களின் நலன்களுக்காக உங்களுடன் இணைந்து பணியாற்ற விரும்புகிறேன்’ என்றே என்னிடம் கூறினார். அதன்படியே அவர் கட்சியில் இணைந்தார்.
அவர் தற்போது வெளியிட்டுள்ள அறிக்கையில் கூட.. தனது நியாயமான கோபங்கள், மக்கள் நலன் கருதி வெளியிடும் கருத்துக்கள் திருமாவுக்கும் எனக்கும் இடையே உள்ள உறவைப் பாதிக்கும் வகையிலும், இடைவெளியை ஏற்படுத்தும் வகையில் இருக்கிறது, அதற்கு நான் இடம் கொடுக்க விரும்பவில்லை. எனவே விலகுகிறேன் என்று கூறியிருக்கிறார்.
கட்சிக்கும், தலைமைக்கும் எதிராக பேச்சு!
இடைநீக்கம் செய்யப்பட்ட பிறகு, அதுகுறித்து பொதுவெளியில் கருத்துச் சொல்வது வழக்கம் இல்லை. தலைமை அல்லது ஒழுங்கு நடவடிக்கை குழுவிடம் அவர் விளக்கம் அளிக்கலாம். அது ஏற்கப்பட்டு, அவர் மீது ஒழுங்கு நடவடிக்கை தேவையில்லை என்று கருதினால் கட்சியில் மீண்டும் இணைய வாய்ப்பிருக்கிறது. இதுவே அனைத்து கட்சிகளிலும் நடக்கும் நடைமுறை.
ஆனால், சஸ்பெண்ட் செய்யப்பட்ட அன்றே அவர் ஒரு அறிக்கையில், சஸ்பெண்ட் தொடர்பாக அவர் சொன்ன கருத்து என்பது கட்சிக்கும், தலைமைக்கு எதிராகவும் தான் இருந்தது. அதில் அவர் சொல்லியிருந்த விளக்கம் அவரது பார்வையில் சரியாக இருந்தாலும் கூட ஒரு கட்சியின் நடைமுறைக்கு அது ஏற்புடையதாக இல்லை.
கட்சிக்கு கட்டுப்பட வேண்டியது முக்கியமானது!
அதாவது ஒரு சிஸ்டத்திற்குள் நாம் வரும் போது, அதற்குள் இணைந்து வேலை செய்ய வேண்டும் என உடன்பட வேண்டும். நமக்கு எல்லாம் தெரியும்.. நாம் பேசுவது சரி, நாம் மக்களுக்காகத் தான் பேசுகிறோம் என்றாலும் கூட கட்சி ஒரு கட்டுப்பாட்டை விதித்து, அதற்குள் இருந்து இயங்க வேண்டும் என்பதே முக்கியமானது.
கட்சிக்குள் வந்துவிட்டால், எவ்வளவு பெரியவராக இருந்தாலும் கட்சிக்கு கட்டுப்பட வேண்டியது முக்கியமானது. அவரது கோரிக்கை, குரல் நியமானதாக இருக்கலாம்.. ஆனால், குரல் கட்சியின் வழியாக ஒலிக்க வேண்டும். கட்சியின் நலன்களுக்கு இணங்கி அது செயல்பட வேண்டும்.
அதைப் பல முறை நாங்கள் அவரிடமே சொல்லி இருக்கிறோம். தனக்கு எது சரி என்பதை யோசித்தே இந்த முடிவை எடுத்துள்ளார். அவரை கட்சியில் இருந்து நீக்க வேண்டும் என்பதோ, வெளியேற வேண்டும் என்பதோ எங்கள் நோக்கம் இல்லை. அவர் கட்சிக்கு கட்டுப்பட வேண்டும் என்பதே நோக்கமாக இருந்தது” என்று திருமாவளவன் கூறினார்.
கிறிஸ்டோபர் ஜெமா
செய்திகளை உடனுக்குடன் பெற மின்னம்பலம் வாட்ஸ் ஆப் சேனலில் இணையுங்கள்…
டாப் 10 நியூஸ் : உருவாகும் காற்றழுத்த தாழ்வுப் பகுதி முதல் மோடி – இலங்கை அதிபர் சந்திப்பு வரை!
ஹெல்த் டிப்ஸ்: குளிரால் ஏற்படும் தொண்டை வலி… தவிர்ப்பது எப்படி?