வருகிற ஜனவரி 10ஆம் தேதி முதல் விமான நிலைய லவுஞ்ச் தொடர்பான விதிமுறைகளை மாற்றுவதாக HDFC வங்கி அறிவித்துள்ளடு.
முன்னணி தனியார் துறை வங்கியான HDFC, தனது வாடிக்கையாளர்களுக்கு விமான நிலைய லவுஞ்ச் (lounge) அணுகல் முறையில் முக்கிய மாற்றங்களை ஜனவரி 10 முதல் அமல்படுத்துகிறது. இனிமேல், கார்டை ஸ்வைப் செய்வதற்குப் பதிலாக டிஜிட்டல் வவுச்சரைப் (digital voucher) பெற்றால்தான் லவுஞ்சில் இலவசமாக நுழைய முடியும். மேலும், இந்த இலவச அணுகலைப் பெற காலாண்டுக்கு குறைந்தபட்சம் ரூ. 10,000 செலவு செய்ய வேண்டும். இந்த புதிய விதிமுறைகள் டெபிட் கார்டு பயன்பாட்டை ஊக்குவிக்கவும், டிஜிட்டல் முறைகளை வலுப்படுத்தவும் கொண்டுவரப்பட்டுள்ளன.
இதற்கு முன்பு, HDFC வங்கி டெபிட் கார்டுகளைப் பயன்படுத்தி விமான நிலைய லவுஞ்ச்களில் இலவசமாக நுழையும் வசதி இருந்தது. ஆனால், ஜனவரி 10 முதல் இந்த முறை மாறுகிறது. இனிமேல், லவுஞ்ச் அணுகலுக்கு டிஜிட்டல் வவுச்சர் கட்டாயம். உங்கள் கார்டு தகுதி பெற்றிருந்தால், HDFC வங்கி உங்களுக்கு SMS அல்லது மின்னஞ்சல் மூலம் ஒரு லிங்க் அனுப்பும். அந்த லிங்க்கை கிளிக் செய்து, உங்கள் மொபைல் எண்ணுக்கு வரும் OTPயை உள்ளிட்டு வவுச்சரைப் பெற வேண்டும். இந்த வவுச்சர் கோட் அல்லது QR கோடை லவுஞ்சில் காட்டினால் மட்டுமே உங்களுக்கு அனுமதி கிடைக்கும்.
இந்த இலவச லவுஞ்ச் அணுகலைப் பெற இனிமேல் ஒரு காலாண்டில் குறைந்தபட்சம் ரூ. 10,000 உங்கள் டெபிட் கார்டு மூலம் செலவு செய்திருக்க வேண்டும். முன்பு இந்த குறைந்தபட்ச செலவு ரூ. 5,000 ஆக இருந்தது. ஆனால், HDFC Infiniti Debit Card வைத்திருப்பவர்களுக்கு இந்த புதிய குறைந்தபட்ச செலவு நிபந்தனை பொருந்தாது. அவர்கள் எந்தவிதமான குறைந்தபட்ச செலவும் செய்யாமலேயே இலவச லவுஞ்ச் அணுகலைப் பெறலாம். உங்கள் டெபிட் கார்டு மூலம் நீங்கள் செய்யும் கொள்முதல் பரிவர்த்தனைகள் (purchase transactions) மட்டுமே இந்த காலாண்டு செலவு கணக்கீட்டில் சேர்க்கப்படும். மற்ற பரிவர்த்தனைகள் இதில் சேராது.
பின்வரும் பரிவர்த்தனைகள் கணக்கில் எடுத்துக்கொள்ளப்படாது:
ATM-ல் பணம் எடுத்தல்
UPI அல்லது Wallet மூலம் பணம் செலுத்துதல் (GPay, PhonePe, Paytm போன்றவை)
டெபிட் கார்டு மூலம் கிரெடிட் கார்டு பில் செலுத்துதல்
டெபிட் கார்டு EMI பரிவர்த்தனைகள்
புதிதாக டெபிட் கார்டு வாங்குபவர்களும் இந்த ரூ. 10,000 செலவு நிபந்தனையை பூர்த்தி செய்தால்தான் இலவச லவுஞ்ச் அணுகலைப் பெற முடியும். ஒவ்வொரு டெபிட் கார்டு வகைக்கும் இலவச லவுஞ்ச் வருகைகளின் எண்ணிக்கை மாறுபடும். இந்த எண்ணிக்கை அப்படியே தொடரும் என்று அறிவிக்கப்பட்டுள்ளது.
Millennia Debit Card: ஒரு காலாண்டில் 1 இலவச வருகை
Platinum Debit Card: ஒரு காலாண்டில் 2 இலவச வருகைகள்
Times Points Debit Card: ஒரு காலாண்டில் 1 இலவச வருகை
Business Debit Card: ஒரு காலாண்டில் 2 இலவச வருகைகள்
GIGA Debit Card: ஒரு காலாண்டில் 1 இலவச வருகை
Infiniti Debit Card: ஒரு காலாண்டில் 4 இலவச வருகைகள்
எனவே, நீங்கள் எத்தனை முறை லவுஞ்சுக்குச் செல்லலாம் என்பதை அறிய, உங்கள் காலாண்டு செலவு மற்றும் உங்கள் கார்டு வகையைச் சரிபார்க்க வேண்டும். நீங்கள் பெறும் லவுஞ்ச் வவுச்சர், அது வழங்கப்பட்ட நாளிலிருந்து அடுத்த காலாண்டின் இறுதி வரை செல்லுபடியாகும். அதற்குள் பயன்படுத்தாவிட்டால் அது காலாவதியாகிவிடும் என்பதை நினைவில் கொள்ளவும்.
