திடீரென்று கோடிக்கணக்கில் உயர்ந்த எச்டிஎஃப்சி வங்கிக் கணக்குகள்!

Published On:

| By admin

திடீரென்று உங்கள் வங்கிக் கணக்கில் ஒரு கோடி ரூபாய் உயர்ந்துள்ளதைக் கண்டால் என்ன செய்வீர்கள்? மேலும் பண மாற்றம் செய்ய முயலும்போது வங்கிக் கணக்கு வேலை செய்யவில்லை. ஆனால், அந்த ஒரு கோடி ரூபாய் இன்னும் கணக்கில் உள்ளது. சில மணி நேரத்துக்குப் பிறகு அந்தப் பணம் காணாமல் போய்விடுகிறது என்றால் எப்படி இருக்கும்? அப்படிதான் நேற்று முன்தினம் சென்னையில் எச்டிஎஃப்சி வங்கி வாடிக்கையாளர்கள் தங்கள் வங்கிக் கணக்குகளில் தவறுதலாகப் பல கோடி ரூபாய் உயர்ந்துள்ளதைக் கண்டு அதிர்ச்சியடைந்தனர்.

தொழில்நுட்ப மேம்படுத்தலின்போது ஏற்பட்ட தொழில்நுட்பக் கோளாறால், 100 வாடிக்கையாளர்களின் வங்கிக் கணக்குகளில் 13 கோடி ரூபாய் வரை உயர்ந்தது. இதைக் கண்டு ஆச்சரியமடைந்த வாடிக்கையாளர்களால் எந்தப் பணப் பரிவர்த்தனைகளையும் செய்யவோ அல்லது தங்கள் கணக்குகளில் பணம் பெறவோ முடியாததால் சிரமம் அடைந்தனர். அது அன்று மாலையே சரி செய்யப்பட்டது.

ADVERTISEMENT

இதுகுறித்து வாடிக்கையாளர்களில் ஒருவர் தனது மனைவியின் வங்கிக் கணக்கில் எந்த கிரெடிட் பதிவுமின்றி 1.23 கோடி ரூபாய் உயர்ந்ததாகக் கூறினார். மேலும் அது மாலையில் பழைய நிலைக்குத் திரும்பி விட்டதாக அவர் தெரிவித்தார்.

இதுகுறித்து எச்டிஎஃப்சி வங்கி பிரதிநிதி ஒருவர் கூறுகையில், “கடந்த சனிக்கிழமை இரவு வழக்கமான மென்பொருள் தொழில்நுட்ப மேம்படுத்தல் செயல்பாட்டுக்குப் பிறகு, ஒரு சில வாடிக்கையாளர் கணக்குகளில் கோளாறுகள் கண்டறியப்பட்டது. இதன் விளைவாக, சில வங்கி வாடிக்கையாளர்கள் கணக்குகளில் பணப் பரிவர்த்தனைக்குத் தடை விதிக்கப்பட்டது. முடக்கம் காரணமாக வாடிக்கையாளர்கள் மற்ற கணக்குகளுக்குப் பணத்தை மாற்ற முடியவில்லை. பிறகு மாலையே இது சரி செய்யப்பட்டு வங்கிக் கணக்குகள் வழக்கம்போல செயல்பட தொடங்கின” என்று தெரிவித்தார்.

ADVERTISEMENT
செய்திகளை உடனுக்குடன் பெற மின்னம்பலம் வாட்ஸ் ஆப் சேனலில் இணையுங்கள்!
Join Our Channel
Share