ஹெச்.டி. ரேவண்ணாவுக்கு 3 நாட்கள் எஸ்ஐடி காவல்!

Published On:

| By christopher

எச்.டி.ரேவண்ணாவுக்கு எதிராக தாக்கல் செய்யப்பட்ட கடத்தல் வழக்கில் மே 8-ம் தேதி வரை எஸ்ஐடி காவலில் வைக்க பெங்களூரு நீதிமன்றம் இன்று (மே 5) உத்தரவிட்டுள்ளது.

முன்னாள் பிரதமர் தேவகவுடாவின் மூத்த மகன் எச்.டி.ரேவண்ணா எம்.எல்.ஏ. மற்றும் அவரது மகன் பிரஜ்வல் ரேவண்ணா எம்.பி., ஆகியோர் மீது அவரது வீட்டில் வேலை பார்த்த பெண் பாலியல் தொல்லை கொடுத்ததாக புகார் செய்தார்.

இதற்கிடையே மைசூரு கே.ஆர்.நகர் போலீஸ் நிலையத்தில் எச்.டி.ரேவண்ணா மீது ஒரு பெண்ணை கடத்தியதாக கூறி கடந்த ஏப்ரல் 29ஆம் தேதி வழக்குப்பதிவு செய்யப்பட்டது. கடத்தப்பட்டதாக கூறப்பட்ட பெண், பிரஜ்வால் ரேவண்ணாவுடன் ஒரு ஆபாச வீடியோவில் இருப்பதாக கூறப்படுகிறது.

இந்த வழக்கு தொடர்பாக எச்.டி.ரேவண்ணா முன்ஜாமீன் கோரி பெங்களூரு மக்கள் பிரதிநிதிகள் சிறப்பு கோர்ட்டில் மனுத்தாக்கல் செய்திருந்தார்.

இதற்கிடையே எச்.டி.ரேவண்ணாவால் கடத்தப்பட்டதாக கூறப்படும் பெண் இருக்கும் இடத்தை கண்டறிந்த சிறப்பு புலனாய்வு குழு போலீசார் உடனடியாக அங்கு சென்று அந்த பெண்ணை மீட்டனர்.

இந்த நிலையில் எச்.டி.ரேவண்ணாவின் முன்ஜாமீன் மனு மீது நேற்று தீர்ப்பு வழங்கிய நீதிபதி, அந்த மனுவை தள்ளுபடி செய்தார். இதனையடுத்த சில நிமிடங்களில் சிறப்பு புலனாய்வு குழு அதிகாரிகள் அவரை அதிரடியாக கைது செய்தனர்.

அவரை எஸ்.ஐ.டி அலுவலகத்துக்கு அழைத்து சென்று பெண்ணை கடத்தியது தொடர்பாக விசாரணை நடத்தினர்.

மேலும் அவரது மகன் பிரஜ்வல் ரேவண்ணா குறித்தும் விடிய, விடிய விசாரணை நடத்தினர். அப்போது அவர் போலீசாரிடம் பல்வேறு தகவல்களை தெரிவித்ததாக கூறப்படுகிறது.

இந்நிலையில், ரேவண்ணாவை 5 நாள் காவலில் எடுத்து விசாரிக்க சிறப்பு புலனாய்வு குழு பெங்களூரு 17வது ஏசிஎம்எம் நீதிமன்றத்தில் மனுத்தாக்கல் செய்திருந்தது.

அதன்படி பௌரிங் மற்றும் லேடி கர்சன் மருத்துவமனையில் மருத்துவப் பரிசோதனைக்குப் பிறகு இன்று மாலை பெங்களூரு நீதிமன்றம் முன்பு ரேவண்ணா ஆஜர்படுத்தப்பட்டார்.

அந்த மனுவை விசாரித்த நீதிமன்றம் ரேவண்ணாவுக்கு வரும் 8ஆம் தேதி வரை 3 நாட்கள் போலீஸ் காவல் வழங்கி உத்தரவிட்டுள்ளது.

செய்திகளை உடனுக்குடன் பெற மின்னம்பலம் வாட்ஸ் ஆப் சேனலில் இணையுங்கள்…

கிறிஸ்டோபர் ஜெமா

அதுக்குள்ள இப்டியா? குக் வித் கோமாளியில் இருந்து விலகிய பிரபலம்.. ரசிகர்கள் ஷாக்!

இடியாப்ப சிக்கலில் சிஎஸ்கே அணி : மீண்டும் ஒரு முக்கிய வீரர் விலகல்!

 

 

செய்திகளை உடனுக்குடன் பெற மின்னம்பலம் வாட்ஸ் ஆப் சேனலில் இணையுங்கள்!
Join Our Channel
Share