தேசிய திறந்தநிலைப் பள்ளி சான்றிதழ்: தமிழக அரசாணைக்கு இடைக்காலத் தடை!

Published On:

| By Kavi

தேசிய திறந்தநிலைப் பள்ளி நிறுவனம் அளிக்கும் படிப்புச் சான்றிதழ் தமிழகத்தில் அரசு வேலைவாய்ப்புக்குச் செல்லாது என்ற தமிழக அரசாணைக்கு இடைக்கால தடை விதித்து சென்னை உயர் நீதிமன்றம் உத்தரவிட்டுள்ளது.

தேசிய, சர்வதேச விளையாட்டுப் போட்டிகளில் பங்கேற்கும் மாணவர்கள் வழக்கமான பள்ளி வகுப்புகளுக்கு செல்ல இயலாது. இதனால், மத்திய அரசு தேசிய திறந்தநிலைப் பள்ளியை (என்ஐஓஎஸ்) அமைத்தது.

ADVERTISEMENT

ஆனால், விளையாட்டில் கவனம் செலுத்தும் மாணவர்கள் இந்தப் பள்ளியில் படித்து பெறும் சான்றிதழ்கள் தமிழகத்தில் அரசு வேலைவாய்ப்புக்கோ, பதவி உயர்வுக்கோ செல்லாது என அறிவித்து தமிழக அரசு கடந்த 2023-ம் ஆண்டு டிசம்பர் 21 அன்று அரசாணை பிறப்பித்தது.

இந்த அரசாணையை எதிர்த்து தேசிய திறந்தநிலைப்பள்ளியில் படிக்கும் மாணவர்களான திருவள்ளூரைச் சேர்ந்த விஷ்ணு, சந்தோஷ் சார்பில் சென்னை உயர் நீதிமன்றத்தில், வழக்கு தொடரப்பட்டது.

ADVERTISEMENT

அதில், ‘தேசிய திறந்தநிலைப் பள்ளியில் படித்த மாணவர்கள் பொறியியல், மருத்துவம் போன்ற தொழிற்கல்வி உள்ளிட்ட உயர்கல்வி படிப்புகளுக்கு அனுமதிக்கப்படும் நிலையில், தமிழ்நாடு அரசுப்பணியாளர் தேர்வாணையம் மூலமாக நடத்தப்படும் போட்டித் தேர்வுகளில் பங்கேற்க தடை விதிப்பது சட்டவிரோதமானது.

தேசிய திறந்தநிலைப் பள்ளியின் கல்வித்தரம் என்பது மாநில பாடத்திட்டத்தை விட குறைந்தது அல்ல. தேசம் முழுவதும் மதிக்கத்தக்க, செல்லத்தக்க படிப்புச்சான்றிதழ் அது.

ADVERTISEMENT

நாடு முழுவதும் சிபிஎஸ்இ நடத்தும் 10-ம் வகுப்பு மற்றும் 12-ம் வகுப்பு தேர்வுகளுக்கு இணையானது. எனவே, இந்த படிப்புச்சான்றிதழ் தமிழகத்தில் செல்லாது என்ற தமிழக அரசின் அரசாணை பொது வேலைவாய்ப்பில் பங்கேற்பதை தடுக்கும் வகையில் உள்ளது.

இது அரசியல் சாசனத்துக்கு எதிரானது. இதனால் ஏற்கெனவே படித்தவர்கள் மட்டுமின்றி, தற்போது படித்துக் கொண்டிருப்பவர்கள், வருங்காலத்தில் இப்பள்ளியில் சேருபவர்கள் பாதிப்புக்குள்ளாக நேரிடும்.

எனவே, இந்த அரசாணையை ரத்து செய்ய வேண்டும். அதுபோல தமிழ்நாடு அரசுப்பணியாளர் தேர்வாணையம் நடத்தும் போட்டித்தேர்வுகளில் பங்கேற்க எங்களை அனுமதிக்க வேண்டும்’ எனக் கோரியிருந்தனர்.

இந்த வழக்கு நீதிபதி ஜி.ஆர்.சுவாமிநாதன் முன்பாக நேற்று (மே 27) விசாரணைக்கு வந்தது. அப்போது, மனுதாரர் தரப்பில் மூத்த வழக்கறிஞர் வி. ராகவாச்சாரி ஆஜராகி வாதிட்டார்.

இருதரப்பு வாதங்களையும் கேட்ட நீதிபதி, இந்த அரசாணைக்கு இடைக்காலத் தடை விதித்து, இந்த மனுவுக்கு தமிழக அரசு பதிலளிக்க உத்தரவிட்டு விசாரணையை ஒத்தி வைத்துள்ளார்.

-ராஜ்

செய்திகளை உடனுக்குடன் பெற மின்னம்பலம் வாட்ஸ் ஆப் சேனலில் இணையுங்கள்…

கிச்சன் கீர்த்தனா: புதுச்சேரி இறால் குழம்பு!

ஹெல்த் டிப்ஸ்: உங்களுக்கேற்ற தலையணையில்தான் தூங்குகிறீர்களா?

குரூப் 4 ஹால் டிக்கெட்: டவுன்லோட் செய்வது எப்படி?

சாமான்யன் – சாதித்தாரா? ராமராஜனின் புதிய பட வசூல் எவ்வளவு?

செய்திகளை உடனுக்குடன் பெற மின்னம்பலம் வாட்ஸ் ஆப் சேனலில் இணையுங்கள்!
Join Our Channel
Share