தேர்தல் விதிகளை மீறி பிரதமர் மோடி, ராகுல் காந்தி பேசியதாக கூறப்படும் புகார் தொடர்பாக தேர்தல் ஆணையத்தில் விளக்கமளிக்க பாஜக மற்றும் காங்கிரஸ் தலைமை கூடுதல் காலஅவகாசம் கோரியுள்ளது.
நம் நாட்டில் மொத்தம் 7 கட்டங்களாக மக்களவை தேர்தல் அறிவிக்கப்பட்ட நிலையில், இரண்டு கட்ட தேர்தல் நடந்து முடிந்து விட்டது.
இரண்டாம் கட்ட பிரச்சாரத்தின் போது பிரதமர் மோடி, ராகுல் காந்தி ஆகியோர் பேசியது சர்ச்சையை ஏற்படுத்தியது.
குறிப்பாக கடந்த 21ம் தேதி ராஜஸ்தான் மாநிலம் பன்ஸ்வாராவில் பிரதமர் மோடி பேசுகையில், “காங்கிரஸ் ஆட்சிக்கு வந்தால், மக்களிடம் உள்ள தங்கம் மற்றும் சொத்துகள் எல்லாவற்றையும் பறித்து ஊடுருவல்காரர்களுக்கும், அதிக குழந்தைகளை பெற்றவர்களுக்கும் கொடுத்துவிடும். இது காங்கிரஸ் தேர்தல் அறிக்கையில் சொல்லப்பட்டுள்ளது. இதனால் பெண்களின் தாலி கூட மிஞ்சாது” என்றார்.
இதில் ஊடுருவல்காரர்கள், அதிக குழந்தைகளை பெற்றவர்கள் என பிரதமர் மோடி முஸ்லிம்களை மறைமுகமாக குறிப்பிட்டு இருந்தார்.
இந்நிலையில் தான் இருதரப்பினர் இடையே கலவரத்தை தூண்டி விடும் வகையில் பிரதமர் மோடி பேசியதாக காங்கிரஸ், மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்ட் உள்பட பல்வேறு தரப்பினர் சார்பில் தேர்தல் ஆணையத்திடம் புகாரளிக்கப்பட்டது.
அதேபோல் காங்கிரஸ் கட்சியின் ராகுல் காந்தி சிறுபான்மையினரிடையே பிரிவை ஏற்படுத்தும் வகையில் பேசியதாக பாஜகவினர் புகாரளித்தனர்.
இந்த புகார்களை தொடர்ந்து வரும் 29ஆம் தேதி 11 மணிக்குள் விளக்கம் அளிக்குமாறு பாஜக தலைவர் ஜேபி நட்டா மற்றும் காங்கிரஸ் தலைவர் மல்லிகார்ஜுன கார்கே ஆகியோருக்கு தேர்தல் ஆணைய நோட்டீஸ் அனுப்பியது.
இந்த கெடு நேற்றுடன் முடிவடைந்த நிலையில் தேர்தல் ஆணையத்தில் பாஜக மற்றும் காங்கிரஸ் சார்பில் விளக்கம் அளிக்கப்படவில்லை. மாறாக காலஅவகாசம் கோரப்பட்டுள்ளது.
அதன்படி பிரதமர் மோடி மீதான புகார் தொடர்பாக விளக்கம் அளிக்க பாஜக தலைமையும், ராகுல் காந்தி மீதான புகார் தொடர்பாக விளக்கம் அளிக்க காங்கிரஸ் தலைமையும் ஒரு வாரம் அவகாசம் கோரியுள்ளது.
செய்திகளை உடனுக்குடன் பெற மின்னம்பலம் வாட்ஸ் ஆப் சேனலில் இணையுங்கள்…
கிறிஸ்டோபர் ஜெமா