திமுகவின் மதிப்பு குறைந்துவிட்டதா? காமெடியா இருக்கு : எடப்பாடிக்கு ஸ்டாலின் பதில்!

Published On:

| By Kavi

தமிழ்நாட்டில் திமுகவின் மதிப்பு குறையவில்லை, அதிமுக மதிப்புதான் குறைந்துவிட்டது என்று முதல்வர் ஸ்டாலின் தெரிவித்துள்ளார்.

தமிழ்நாடு முதல்வர் ஸ்டாலின், நாமக்கல்லில் கலைஞர் சிலையையும்,  பொம்மைகுட்டை மேடு பகுதியில் கட்டப்பட்டுள்ள கலைஞர் நூற்றாண்டு பேருந்து நிலையத்தையும் இன்று (அக்டோபர் 22) திறந்து வைத்தார்.

நாமக்கல் மாவட்டத்தில் புதிய திட்டப் பணிகளுக்கு அடிக்கல் நாட்டி, நலத் திட்ட உதவிகளையும் முதல்வர் ஸ்டாலின் வழங்கினார்.

இந்நிகழ்ச்சியில் பேசிய அவர், “5 ஆண்டுகளுக்கு பின் திரும்பிப் பார்த்தால் எல்லா மாவட்டங்களும் வளர்ந்திருக்கும். எல்லா துறையும் வளர்ந்திருக்கும் அந்த நிலையைதான் உருவாக்கிக் காட்ட நானும் அமைச்சர்களும், அரசு அதிகாரிகளும் உழைத்துக்கொண்டிருக்கிறோம்.

அந்த வளர்ச்சி நம் கண்முன்னே தெரிகிறது. கடந்த சட்டமன்றத் தேர்தலில் பெற்ற செல்வாக்கை விட நடந்து முடிந்த நாடாளுமன்றத் தேர்தலில் திமுகவின் செல்வாக்கு உயர்ந்திருக்கிறது.

இதை பொறுத்துக்கொள்ள முடியாத எதிர்க்கட்சித் தலைவர், திமுகவுக்கு மதிப்பு சரிந்துவிட்டது என சொல்லியிருக்கிறார். அவர் இந்த உலகத்தில் தான் இருக்கிறாரா? அல்லது கனவு உலகத்தில் இருக்கிறாரா?

எதிர்க்கட்சித் தலைவரே, தினமும் பேருந்துகளில் கட்டணம் இல்லாமல் பயணம் செய்யும் லட்சக்கணக்கான மகள்களின் முகத்தை பாருங்கள் திமுகவின் மதிப்புத் தெரியும்.

மாதம்தோறும் ஆயிரம் ரூபாய் பெறக்கூடிய ஒரு கோடிக்கும் அதிகமான என்னுடைய சகோதரிகளிடம் சென்று கேளுங்கள் திமுகவின் மதிப்பு உங்களுக்குத் தெரியும்,

20 லட்சம் குழந்தைகள் தினம்தோறும் காலை உணவு சாப்பிடுகிறார்கள். அதில் இருக்கிறது திமுகவின் மதிப்பு.

புதுமைப்பெண் திட்டத்தின் மூலமும், தமிழ் புதல்வன் திட்டத்தின் மூலமும் பயன் பெறும் மாணவ மாணவிகளுக்கு தெரியும் திமுக ஆட்சியின் மதிப்பு.

இப்படியொரு நிலையில் தான் திமுகவின் மதிப்பு குறைந்துவிட்டதாக எடப்பாடி பழனிசாமி சொல்வதை மக்கள் காமெடியாக எடுத்துகொள்கிறார்கள். அவர் சொல்வதையெல்லாம் நான் பொருட்படுத்தவே இல்லை.

அதற்கெல்லாம் நேரம் செலவழிக்க நான் விரும்பவில்லை. கடந்த 5 ஆண்டுகளில் நடந்திருக்கக் கூடிய நாடாளுமன்றத் தேர்தல் முதல் உள்ளாட்சித் தேர்தல் வரை அனைத்திலும் திமுக வென்றிருக்கிறது.

திமுகவின் மதிப்பு ஒன்றும் குறையவில்லை. தமிழகத்தின் மதிப்பை நீங்கள் தான் அடமானம் வைத்தீர்கள். உங்களுடைய பதவியை காப்பாற்ற வேண்டும் என்று குறியாக இருந்ததால் அதிமுகவின் மதிப்பு குறைந்துவிட்டது.

இன்று மேற்கு மண்டலத்தின் நிலை என்ன? அதிமுகவின் செல்வாக்குடைய பகுதிகள் என்று சொல்வீர்களே? இப்போது என்ன ஆனது?

நாடாளுமன்றத் தேர்தல் முடிவுகள் அதையும் பொய்யாக்கிவிட்டது. இந்த தேர்தல் முடிவுகளை 234 தொகுதிகளாக பகுப்பாய்வு செய்து பார்த்தால், 222 தொகுதிகளில் எங்கள் கூட்டணி அதிக வாக்குகளை பெற்றிருக்கிறது.

உங்களைப்பற்றி எங்களுக்கு கவலையில்லை. அடுத்துவரும் சட்டமன்றத் தேர்தலிலும் வெற்றி பெறுவோம்” என்று கூறினார்.

கடந்த அக்டோபர் 21ஆம் தேதி திருநெல்வேலி மாவட்டம் அம்பாசமுத்திரத்தில் பேசிய எடப்பாடி பழனிசாமி, “அதிமுகவின் செல்வாக்கு அதிகரித்து வருகிறது. திமுகவிற்குதான் செல்வாக்கு சரிந்து வருகிறது. அந்தக் கூட்டணியில் புகைச்சல் தொடங்கி விட்டது” என்று கூறியிருந்தார்.

இதற்கு பதிலளிக்கும் விதமாக முதல்வர் ஸ்டாலின் இவ்வாறு தெரிவித்துள்ளார்.

செய்திகளை உடனுக்குடன் பெற மின்னம்பலம் வாட்ஸப் சேனலில் இணையுங்கள்…. 

பிரியா

மும்பை கார் ஜிம்கானாவில் மத பிரச்சாரம்… கிரிக்கெட் வீராங்கனை ஜெமிமா ரோட்ரிகஸ் நீக்கம்!

வக்ஃபு சட்டத்திருத்த மசோதா: நாடாளுமன்ற கூட்டுக்குழு விவாதத்தில் வாக்குவாதம்!

செய்திகளை உடனுக்குடன் பெற மின்னம்பலம் வாட்ஸ் ஆப் சேனலில் இணையுங்கள்!
Join Our Channel
Share