தவெக கூட்டணியில் காங்கிரஸ் இணைந்ததற்கு எதிர்ப்பு தெரிவித்து அகில இந்திய இளைஞர் காங்கிரஸ் தேசியச் செயலாளர் வி.ஸ்ரீநிதி தனது பதவியையும், கட்சியின் முதன்மை உறுப்பினர் பொறுப்பையும் அதிரடியாக ராஜினாமா செய்துள்ளதாக செய்திகள் வெளியாகி உள்ளது.
தமிழக சட்டமன்றத் தேர்தலில் திமுக கூட்டணியில் அங்கம் வகித்த காங்கிரஸ் கட்சிக்கு நீண்ட இழுபறிக்கு பின்னர் 28 தொகுதிகள் ஒதுக்கப்பட்டன. இதில் 5 தொகுதிகளில் மட்டுமே அக்கட்சி வெற்றி பெற்றது. குறிப்பாக, சிங்காநல்லூர் தொகுதியில் காங்கிரஸ் சார்பில் போட்டியிட்ட ஸ்ரீநிதி, 65,024 வாக்குகள் பெற்றுத் தோல்வியடைந்தார்.
இதனிடையே, தேர்தலுக்குப் பிறகு காங்கிரஸ் கட்சி தமிழக வெற்றிக் கழகத்திற்கு ஆதரவு அளித்தது. தவெக அமைச்சரவையில் காங்கிரஸைச் சேர்ந்த ராஜேஷ்குமார், விஸ்வநாதன் ஆகிய இருவரும் அமைச்சர்களாகப் பொறுப்பேற்றுள்ளனர். இந்நிலையில், ஸ்ரீநிதி காங்கிரஸ் கட்சியிலிருந்து விலகுவதாகத் தகவல்கள் வெளியாகியுள்ளன.
இதுகுறித்து அவர் காங்கிரஸ் தலைமைக்கு எழுதியதாகக் கூறப்படும் கடிதம் ஒன்று சமூக வலைதளங்களில் வேகமாகப் பரவி வருகிறது. அக்கடிதத்தில், “மிகுந்த வலியுடனும், ஆழ்ந்த மன உளைச்சலுடனும், நீண்ட சிந்தனைக்குப் பிறகும் எனது பதவிகளை ராஜினாமா செய்கிறேன். NDA கூட்டணியிலிருந்து வெளியேறிய மூன்று எம்.எல்.ஏ-க்களை (தவெக) கட்சியில் இணைக்கும் சமீபத்திய முடிவு, எனது மனசாட்சியை ஆழமாகப் பாதித்துள்ளது.
பிரிவினைவாத சக்திகளுடன் இணைவதில்லை என்று கூறிவந்த காங்கிரஸ் கட்சி, இப்போது எடுத்துள்ள இந்த முடிவு அரசியல் கொள்கைகளின் நிலைத்தன்மை மற்றும் தெளிவு குறித்துக் கடுமையான கேள்விகளை எழுப்புகிறது. ஏற்கனவே கூட்டணியால் பலன் அடைந்த எம்பிக்கள், எம்எல்ஏக்கள் மற்றும் மூத்த தலைவர்கள் எளிதாக இத்தகைய முடிவுகளை எடுக்கிறார்கள். ஆனால், தேர்தல் களத்தில் நின்ற அடிமட்டத் தொண்டர்களும் எங்களைப் போன்றவர்களுமே இதன் விளைவுகளைச் சந்திக்க வேண்டியிருக்கிறது.
கடுமையான உழைப்பால் தான் சிங்காநல்லூர் தொகுதியில் என்னால் 65,024 வாக்குகளைப் பெற முடிந்தது. நேற்று என்னைத் தோற்கடித்த ஒருவருடன் இன்று நான் எப்படி கைகுலுக்க முடியும்? அவரது வெற்றி, பொதுமக்களின் பார்வையில் அவரது தனிப்பட்ட உழைப்பை விட, அவரது தலைவரின் (விஜய்) நட்சத்திர ஆளுமை மற்றும் செல்வாக்கினால்தான் கிடைத்தது என்பது அனைவருக்கும் தெரியும்.
வெறும் தேர்தல் வெற்றிகளுக்காக அல்லாமல், கொள்கை, மரியாதை மற்றும் மக்களின் குரலுக்கான பெரிய போராட்டத்திற்காக அரசியலுக்கு வந்தேன். வெற்றி மட்டுமே எனது இலக்காக இருந்திருந்தால் தயக்கமின்றி தொடர்ந்திருப்பேன். எனவே, இந்திய தேசிய காங்கிரஸ் இளைஞர் அணியின் தேசிய செயலாளர் பதவியிலிருந்தும், கட்சியின் அனைத்து முதன்மை உறுப்பினர் பதவிகளிலிருந்தும் உடனடியாக ராஜினாமா செய்கிறேன்” எனத் தெரிவிக்கப்பட்டுள்ளது.
இருப்பினும், இந்த ராஜினாமா குறித்து ஸ்ரீநிதியின் அதிகாரப்பூர்வ சமூக வலைதளப் பக்கங்களில் எந்தவித அறிவிப்பும் இதுவரை வெளியாகவில்லை. மேலும், இதுகுறித்து அவரிடம் விளக்கம் கேட்க பலமுறை செல்போனில் தொடர்புகொள்ள முயன்றபோதும், அவரைத் தொடர்பு கொள்ள இயலவில்லை.









