“பெற்ற மனம் பித்து” என்பார்கள். ஆனால், ஹரியானாவில் நடந்த ஒரு சம்பவம், அந்தப் பழமொழியை பொய்யாக்கியுள்ளது. அழகான சிறுமிகள் மீது கொண்ட விபரீத பொறாமையால், அடுத்தவர் குழந்தைகளை மட்டுமல்ல, சந்தேகத்தைத் திசைதிருப்பத் தன் சொந்த மகனையே கொன்ற ஒரு பெண்ணின் கொடூர முகம் வெளிச்சத்துக்கு வந்துள்ளது.
சிக்கியது எப்படி? ஹரியானாவின் பானிபட் (Panipat) மாவட்டத்தைச் சேர்ந்தவர் பூனம் (32). கடந்த திங்கட்கிழமை (டிசம்பர் 1) நவ்ல்தா கிராமத்தில் நடந்த ஒரு திருமண விழாவிற்கு இவர் சென்றுள்ளார். அப்போது அங்கிருந்த விதி (Vidhi) என்ற 6 வயது சிறுமி திடீரென மாயமானார். பல இடங்களில் தேடியும் கிடைக்காத நிலையில், வீட்டின் முதல் மாடியில் உள்ள ஒரு பிளாஸ்டிக் தண்ணீர் டப்பில் (Water Tub) தலைகீழாகக் கவிழ்ந்த நிலையில் அந்தச் சிறுமி சடலமாக மீட்கப்பட்டார்.
விபத்து என்று நினைத்தாலும், சந்தேகத்தின் பேரில் போலீசார் நடத்திய விசாரணையில் சிறுமியின் அத்தை பூனம் சிக்கினார். நேற்று (புதன்கிழமை) அவரைக் கைது செய்து விசாரித்த போதுதான், அதிர வைக்கும் உண்மைகள் ஒவ்வொன்றாக வெளியே வந்தன.
சைக்கோ பின்னணி: பூனம் கொன்றது இந்த ஒரு சிறுமியை மட்டுமல்ல. கடந்த இரண்டு ஆண்டுகளில் மட்டும் இவர் மொத்தம் 4 குழந்தைகளைக் கொன்றுள்ளார். போலீஸ் சூப்பிரண்டு பூபேந்தர் சிங் கூறுகையில், “பூனம் ஒரு ‘சைக்கோ’ (Psychopath) மனநிலையில் உள்ளார். அழகான சிறுமிகளைப் பார்த்தாலே அவருக்கு வெறுப்பு வரும். ‘இவர்கள் வளர்ந்தால் என்னை விட அழகாகிவிடுவார்களோ’ என்ற பொறாமை (Jealousy) அவருக்குள் இருந்துள்ளது. அதனால் சந்தர்ப்பம் கிடைக்கும் போதெல்லாம் குழந்தைகளைத் தண்ணீரில் மூழ்கடித்துக் கொன்றுள்ளார்,” என்றார்.
சொந்த மகனுக்கே எமன்: இவரது கொடூரத்தின் உச்சம் என்னவென்றால், 2023-ம் ஆண்டு தனது உறவினர் வீட்டு 9 வயது சிறுமியைக் கொன்றுள்ளார். அப்போது குடும்பத்தினர் தன் மீது சந்தேகப்படக்கூடாது என்பதற்காக, தன் பெற்ற வயிற்றுப் பிள்ளையான 3 வயது மகன் சுபத்தையும் (Shubham) தண்ணீர்த் தொட்டியில் மூழ்கடித்துக் கொன்றுள்ளார்.
“தன் பிள்ளையையே பறிகொடுத்தவள் எப்படி அடுத்தவர் பிள்ளையைக் கொல்வாள்?” என்று ஊர் நம்ப வேண்டும் என்பதற்காகவும், அனுதாபம் தேடவும் இந்த நாடகத்தை ஆடியுள்ளார்.
தொடர் கொலைகள்:
- 2023-ல் ஒரு சிறுமி மற்றும் சொந்த மகன்.
- ஆகஸ்ட் 2025-ல் சேவா கிராமத்தில் ஒரு 6 வயது சிறுமி.
- டிசம்பர் 2025-ல் (திங்கட்கிழமை) விதி என்ற 6 வயது சிறுமி.
மொத்தம் 4 பிஞ்சுக் குழந்தைகளை, அவர்கள் அழகாக இருக்கிறார்கள் என்பதற்காகவே கொன்ற இந்த அரக்கிக்குச் சட்டப்படி கடுமையான தண்டனை பெற்றுத் தரப்படும் என்று போலீசார் தெரிவித்துள்ளனர்.
