ஹரியானா சட்டமன்ற தேர்தல் வாக்கு எண்ணிக்கையில் ஆரம்பத்தில் காங்கிரஸ் முன்னிலையில் இருந்த நிலையில், தற்போது பாஜக அதிக இடங்களில் முன்னேறி கடும் போட்டியை உருவாக்கியுள்ளது.
கடந்த பத்தாண்டுகளாக பாஜக ஆளும் ஹரியானாவில் உள்ள 90 தொகுதிகளிலும் ஒரே கட்டமாக கடந்த அக்டோபர் 5ஆம் தேதி சட்டமன்றத் தேர்தல் நடைபெற்றது.
இதில் பாஜகவுக்கு நேரடி போட்டியாக மீண்டும் ஆட்சியை பிடிக்கும் முயற்சியில் காங்கிரஸ் போட்டியிட்டது. இந்த இரு கட்சிகளை தவிர ஆம் ஆத்மி, இந்திய தேசிய லோக்தளம்-பகுஜன் சமாஜ் கூட்டணி, ஜே.ஜே.பி-ஆசாத் சமாஜ் கூட்டணி என பலமுனை போட்டி நிலவியது.
தேர்தலில் மொத்தம் 67.90 சதவீத வாக்குகள் பதிவாகின. தொடர்ந்து இன்று காலை 8 மணி முதல் வாக்குகள் அனைத்தும் எண்ணப்பட்டு வருகின்றன.
அதன்படி காலை 9 மணியளவில் காங்கிரஸ் கட்சி 55 இடங்களிலும், பாஜக 23 இடங்களிலும், இதர கட்சிகள் 6 இடங்களிலும் முன்னிலை வகிப்பதாக தகவல்கள் வெளியாகின.
இதனால் உற்சாகத்தில் மிதந்த அம்மாநில காங்கிரஸ் கட்சியினர் ஒருவருக்கொருவர் இனிப்புகளை வழங்கி தங்களது மகிழ்ச்சியை தெரிவித்து வந்தனர்.
இந்த நிலையில் திடீரென தற்போது பாஜக பல இடங்களில் முன்னேறி 43 தொகுதிகளில் முன்னிலை வகிக்கிறது. அதேவேளையில் பெரும்பான்மையான தொகுதிகளில் முன்னிலையில் இருந்த காங்கிரஸ் தற்போது 34 இடங்களில் மட்டுமே முன்னிலை வகிப்பதாக இந்திய தேர்தல் ஆணையம் அறிவித்துள்ளது.
ஹரியானாவில் பெரும்பான்மை பெற 46 தொகுதிகளில் வெற்றி பெற வேண்டும். இந்த நிலையில் பாஜக முன்னிலை வகிப்பது அக்கட்சியில் மூன்றாவது முறையாக அங்கு ஆட்சியமைக்கும் என எதிர்பார்க்கப்படுகிறது.
கிறிஸ்டோபர் ஜெமா
வினேஷ் போகத் முன்னிலை… 19 ஆண்டுகளுக்குப் பிறகு ஜூலானா தொகுதியை கைப்பற்றும் காங்கிரஸ்?
ஹரியானா, ஜம்மு – காஷ்மீரில் வாக்கு எண்ணிக்கை : ஓங்கும் காங்கிரஸ்!