ஹரிஷ் கல்யாண் நடித்து சமீபத்தில் வெளியான ‘லப்பர் பந்து’ திரைப்படம் மக்கள் மத்தியில் மாபெரும் வரவேற்பை பெற்று வரும் நிலையில், தற்போது அவர் நடிக்கும் அடுத்த படம் சுமார் 25 கோடி ரூபாய் செலவில் பிரம்மாண்டமாகத் தயாராகவுள்ளதாகத் தகவல் வெளியாகியுள்ளது.
இயக்குநர் தமிழரசன் பச்சமுத்து இயக்கத்தில் ஹரிஷ் கல்யாண், ‘அட்டக்கத்தி’ தினேஷ் ஆகியோர் முதன்மை கதாபாத்திரங்களில் நடித்து சமீபத்தில் வெளியான ’லப்பர் பந்து’ திரைப்படம் மக்கள் மத்தியில் மிகுந்த வரவேற்பைப் பெற்றது.விமர்சன ரீதியாகவும் மிகுந்த பாராட்டுகளைப் பெற்றது. இந்தப் படத்தின் வெற்றி விழா நாளை (அக்டோபர் 5) துபாயில் கொண்டாடப்படவுள்ளது.
இந்த நிலையில், ஹரிஷ் கல்யாண் நடிக்கும் அடுத்த படம் குறித்த தகவல் ஒன்று வெளியாகியுள்ளது. இந்தப் படத்தைக் கடந்த 2021 ஆம் ஆண்டு கவின் நடித்து வெளியான ‘லிஃப்ட்’ படத்தை இயக்கிய வினீத் வரப்பிரசாத் இயக்குகிறார். மேலும் இந்தப் படத்தை அவரே தயாரிக்க உள்ளார் எனவும் தகவல் வெளியாகியுள்ளது.
இந்தப் படத்தை பிரம்மாண்ட பொருட்செலவில் தயாரிக்க இப்படக்குழு திட்டமிட்டுள்ளதாம். அதாவது, சுமார் ரூ.25 கோடி ரூபாய் பட்ஜெட்டில் இந்தப் படம் உருவாகவுள்ளது எனத் திரைத்துறை வட்டாரங்கள் தெரிவிக்கின்றனர்.இது ஹரிஷ் கல்யாண் திரை வாழ்க்கையிலேயே மிகப் பெரிய பட்ஜெட்டில் உருவாகும் படமாகும்.
தற்போது வரை ஹவுஸ்ஃபுல்லாக ஓடிக்கொண்டிருக்கும் ‘லப்பர் பந்து’ இரண்டே வாரங்களில் தமிழ்நாட்டில் மட்டும் 27 கோடி ரூபாய் வசூல் செய்துள்ளது என்பதும் குறிப்பிடத்தக்கது.
அதைத் தொடர்ந்து உருவாகும் இந்தப் படத்தில் மலையாள நடிகர் செம்பன் வினோத்தும், பிற மொழி திரையுலகிலிருந்து பலர் நடிக்க வாய்ப்புள்ளது எனவும் தகவல் வெளியாகியுள்ளது.
ஆக இது ஹரிஷ் கல்யாண் நடிக்கும் ஒரு பான் இந்திய திரைப்படமாக உருவாகும் எனத் தெரிகிறது.
– ஷா
பிரார்த்தனை செய்த ரசிகர்களுக்கு நன்றி… ரஜினி உருக்கம்!