’பார்க்கிங்’, ‘லப்பர்பந்து’ வெற்றிகளுக்குப் பிறகு, ‘அடுத்த படம் என்ன’ என்று ரசிகர்கள் கேட்கிற இடத்திற்கு நகர்ந்திருக்கிறார் நாயகன் ஹரிஷ் கல்யாண்.
இயக்குனர் சசியின் ‘நூறு கோடி வானவில்’ மற்றும் சண்முகம் முத்துசாமியின் ‘டீசல்’ படங்கள் முழுமையாக நிறைவடைந்து வெளியாகத் தயாராகவுள்ளன. கிட்டத்தட்ட இரண்டாண்டுகளுக்கும் மேலாக, இவை காத்திருப்பில் உள்ளன. அதற்கான உண்மையான காரணம் என்னவென்பது இதுவரை வெளியாகவில்லை.
இந்த நிலையில், இப்போது ‘டீசல்’ பட டீசர் வெளியாகியிருக்கிறது. வடசென்னை பின்னணியில் அமைந்த இப்படமானது ‘பெட்ரோல் மாஃபியா’ பற்றிப் பேசுவது அதில் தெளிவாகியிருக்கிறது. அது மட்டுமல்லாமல், ஒரு முழு நீள ஆக்ஷன் படத்தில் ஹரிஷ் கல்யாண் இடம்பெற்றிருப்பதை உறுதிப்படுத்தி இருக்கிறது.
திபு நிணன் தாமஸ் இசையமைத்துள்ள இப்படத்தில் இருந்து ‘பீர்’ பாடல் ஏற்கனவே வெளியாகி ‘வைரல்’ ஆனது. இப்படத்தில் அதுல்யா ரவி, வினய் ராய், சாய்குமார், அனன்யா, கருணாஸ், ரமேஷ் திலக், காளி வெங்கட், விவேக் பிரசன்னா, ஜாகீர் ஹுசைன், சச்சின் கடேகர், கேபிஒய் தீனா, தங்கதுரை, அபூர்வா சிங் என ஒரு நட்சத்திரப் பட்டாளமே இடம்பிடித்துள்ளது. இவர்களது பெயர்களே இந்தப் படம் தருகிற திரையனுபவம் மீது எதிர்பார்ப்பை ஏற்படுத்தியிருக்கிறது.
தீபாவளி பண்டிகையை ஒட்டி மாரி செல்வராஜ் – துருவ் விக்ரமின் ‘பைசன்’ மற்றும் விக்னேஷ் சிவன் – பிரதீப் ரங்கநாதனின் ‘லவ் இன்சூரன்ஸ் கம்பெனி’ ஆகியன வெளியாவது உறுதியாகியுள்ளது. பிரதீப்பின் இன்னொரு படமான ‘டூட்’டும் அதே வாரத்தில் வெளியாகும் என்று அறிவிக்கப்பட்டிருந்தது. இந்தச் சூழலில் ‘டீசல்’ வெளியாவது அறிவிக்கப்பட்டுள்ளது.
‘லேட்டா வந்தாலும் லேட்டஸ்டாக வருவேன்’ என்பதாக ‘டீசல்’ அமையுமா?
