ஹர்திக் பாண்டியாவுடன் சேர்ந்து மும்பை இந்தியன்ஸ் அணி, ரோஹித்துக்கு செய்த துரோகம் தற்போது தெரிய வந்துள்ளது.
கடந்த மாதம் ஹர்திக் பாண்டியாவை வைத்து குஜராத், மும்பை அணிகள் கபடி விளையாண்டன. இதனால் ஹர்திக்கின் நிலைமை மத்தளம் போல இருந்தது.
ஒருவழியாக அவர் மும்பைக்கு திரும்ப குஜராத், மும்பை அணிகளை விடவும் ரசிகர்கள் தான் நிம்மதி பெருமூச்சு விட்டனர்.
இந்த நிலையில் மும்பை அணியில் நடந்தது என்ன? ரோஹித் ஏன் கேப்டன் பதவியில் இருந்து அவசர, அவசரமாக நீக்கப்பட்டார்? என்பதற்கான காரணங்கள் தற்போது வெளியாகி இருக்கின்றன.

மும்பை பிளான்
ஆரம்பத்தில் ஹர்திக்கை மீண்டும் எடுப்பது மட்டும் தான் மும்பை அணியின் பிளானாக இருந்ததாம். ஓரிரண்டு வருடங்கள் அவர் ரோஹித்தின் கீழ் விளையாடிய பின்னர் கேப்டனாக அறிவிக்கலாம் என நினைத்துள்ளனர்.
இதை ரோஹித்திடமும் சொல்லி சமாதானம் செய்து அதன் பிறகு தான் ஹர்திக்கை அணிக்கு எடுக்க பேச்சுவார்த்தை நடத்தி உள்ளனர்.
ஆனால் ‘வந்தால் ராஜாவாக தான் வருவேன்’ என்பது போல, கேப்டன் பதவி கொடுத்தால் தான் வருவேன் என ஹர்திக் அடம்பிடித்து இருக்கிறார். இதுதான் அவர் மும்பை திரும்ப தாமதம் ஆனதற்கு காரணம்.
ஒருபுறம் ரோஹித்திடம் இந்த வருடம் நீங்கள் தான் கேப்டன் என தெரிவித்து விட்டதாலும், மறுபுறம் ஹர்திக் பாண்டியா கண்டிப்பாக வேண்டும் என அடம் பிடித்ததாலும் இது நீடித்துக்கொண்டே சென்றுள்ளது.

ரோஹித் Vs ஹர்திக்
கட்டக்கடைசியாக ஹர்திக் பாண்டியா தான் இந்திய அணியின் எதிர்காலம் என்பதால், 5 கோப்பை வென்ற ரோஹித்தை ஓரங்கட்ட மும்பை அணி முடிவெடுத்துள்ளது.
ஆனால் இதை ரோஹித்திடம் கூட கலந்து ஆலோசிக்கவில்லையாம். அதுதான் இவ்வளவு அவரசமாக அறிவிக்க காரணம்.
இந்த அதிர்ச்சியில் இருந்து ரோஹித் இன்னும் மீளவில்லை என கிரிக்கெட் வட்டாரங்களில் இருந்து தகவல்கள் வெளியாகி உள்ளன.
மினி ஏலத்துக்கு முன் வீரர்கள் வேறு அணிகளுக்கு செல்லலாம் என விதி இருந்தது. ரோஹித்தை அணியில் தக்க வைத்து அதற்கான காலம் எல்லாம் முடிந்த பின் தான் மும்பை இந்த கேப்டன் மாற்றத்தை கொண்டு வந்துள்ளது.

துரோகம்
அதாவது ரோஹித்தை அணியில் தக்க வைத்து விட்டு, அதன் பின்னர் தான் ஹர்திக் பாண்டியாவை புதிய கேப்டன் ஆக்கி அழகு பார்த்துள்ளனர்.
சொல்லப்போனால் ஹர்திக் பாண்டியாவுடன் சேர்ந்து மும்பையும், ரோஹித்தின் முதுகில் குத்தி விட்டது என்பது தான் உண்மை.
இது அந்த அணியிலும் பெரும் பிரச்சினையாக வெடிக்க ஆரம்பித்துள்ளது. ரோஹித்துக்கு ஆதரவாக சூர்யகுமார், பும்ரா இருவரும் இருப்பது வெளிப்படையாக தெரிய வந்துள்ளது.
அடுத்த ஆண்டு நடைபெறும் மெகா ஐபிஎல் ஏலத்தில் 3 வீரர்களை மட்டும் தான் தக்க வைக்க முடியும் என்பதால், மும்பை என்ன முடிவெடுக்கும் என்பதை நாம் பொறுத்திருந்து தான் பார்க்க வேண்டும்.
செய்திகளை உடனுக்குடன் பெற மின்னம்பலம் வாட்ஸ் ஆப் சேனலில் இணையுங்கள்…
–மஞ்சுளா
IPL2024: புதிய கேப்டனாக ஹர்திக் நியமனம்… அப்போ ரோஹித்தோட நிலைமை?
IPL2024: ‘ஆரம்பிக்கலாங்களா’ ஐபிஎல் கேப்டனாக தோனி படைத்த புதிய சாதனை!









