டேனியல் கிரைக் நடிப்பில் உருவாகும் ‘நோ டைம் டு டை’ என்ற புதிய ஜேம்ஸ்பாண்ட் படத்திற்கு இசையமைப்பாளராக ஹான்ஸ் சிம்மர் பணியற்றவுள்ளார். இதுபற்றிய அதிகாரப்பூர்வ அறிவிப்பு வெளியிடப்பட்டதும் உலகெங்கிலும் உள்ள ஜேம்ஸ்பாண்ட் மற்றும் ஹான்ஸ் சிம்மர் ரசிகர்கள் மகிழ்ச்சியில் உள்ளனர்.
புனைவு கதாபாத்திரமான பிரிட்டிஷ் நாட்டின் உளவாளி ஜேம்ஸ்பாண்ட் கதாபாத்திரத்தை இயான் பிளெமிங் என்ற பிரிட்டிஷ் அரசு அதிகாரி 1952இல் காசினோ ராயல் நாவலில் அறிமுகம் செய்தார். அதன் வெற்றியைத் தொடர்ந்து ஜேம்ஸ்பாண்ட் கதாபாத்திரத்தை வைத்து மேலும் பல நாவல்களை உருவாக்கினார்.
1962இல் பிரிட்டிஷ் தயாரிப்பு நிறுவனமான இயோன் புரொடக்ஷன், சீன் கானரி ஜேம்ஸ் பாண்டாக நடிக்க முதல் ஜேம்ஸ் பாண்ட் திரைப்படமான “Dr.நோ”வை தயாரித்தது. இப்படத்தின் வெற்றியைத் தொடர்ந்து, இயோன் புரொடக்ஷன் மேலும் பல ஜேம்ஸ்பாண்ட் படங்களை தயாரித்து வந்தது.
இந்நிறுவனத்தின் புதிய ஜேம்ஸ்பாண்ட் படமான “நோ டைம் டு டை” வரும் ஏப்ரல், டேனியல் கிரைக் நடிப்பில் வெளியாகயிருக்கிறது. இப்படத்தை ட்ரூ டிடெக்டிவ் வெப் செரீஸ் இயக்குநர் கேரி ஜோஜி இயக்குகிறார். இதன் டிரெய்லர் சமீபத்தில் வெளியாகி மிகப்பெரிய வரவேற்பை பெற்ற நிலையில், இதன் இசையமைப்பாளராக ஹான்ஸ் சிம்மர் அறிவிக்கப்பட்டுள்ளார். இவர் பேட்மேன், இன்செப்ஷன், கிளாடியேடர், லயன் கிங், பைரேட்ஸ் ஆஃப் தி கரீபியன் போன்ற வெற்றிப் படங்களுக்கு இசையமைத்துள்ளார்.
ஹான்ஸ் சிம்மர் திரையிசையில் ‘ஷெபர்ட் டோன்(shepard tone)’ எனப்படும் முறை பிரதானம். இந்த முறையை பயன்படுத்தி இசையமைக்கும் வெகு சிலரில் ஹான்ஸ் சிம்மரும் ஒருவர். கதையின் மைய ஓட்டத்தின் பொழுது குறைந்த ஒலியில் ஒரு குறிப்பிட்ட ஓசை மெல்ல எழுப்பப்படும். காட்சி தீவிரம் அடையும் பொழுது அந்த ஓசை மெல்ல அதிகமாகி பார்வையாளனை நிலைகுலையச் செய்யும். டங்கிர்க் திரைப்படத்தில் கைகடிகாரத்தின் ஓசையை பயன்படுத்தியே ஒரு காட்சியை நகர்த்தியிருப்பார். ஷெர்லாக் ஹோம்ஸில் பிடில், இண்டர்ஸ்டேல்லரில் பியானோ, பேட்மேனில் செல்லோ என்று வித்தியசமான இசையனுபவத்தை ரசிகர்களுக்கு வழங்கியிருப்பார். ஷெர்லாக் ஹோம்ஸ் படத்துக்காக ஸ்லோவாக்கியா நாட்டில் உள்ள ஒரு பாரம்பரிய கிராமத்துக்குச் சென்று அங்கிருந்த இசைக்கலைஞர்களை திரட்டி இசைகோர்ப்பு செய்தார். இவருடைய இசையின் படிமானங்கள், உலகெங்கிலும் கடைபிடித்து வரும் திரையிசை அனுபவத்தில் மிகப்பெரிய தாக்கத்தை ஏற்படுத்தியுள்ளது என்பது குறிப்பிடத்தக்கது. அவர் ஜேம்ஸ்பாண்ட் படத்துக்கு இசையமையக்க இருப்பது இந்தப் படத்தில் என்ன செய்யப்போகிறார் என்ற எதிர்பார்ப்பை கூட்டியுள்ளது.
,”
