மாற்றுத் திறனாளிகளின் வீல் சேர் கிரிக்கெட் இந்திய அணியின் கேப்டன் எனக்கூறி முதலமைச்சர் ஸ்டாலின் உள்ளிட்ட பலரையும் ஏமாற்றிய ராமநாதபுரத்தைச் சேர்ந்த வினோத் பாபு மீது இரண்டு பிரிவுகளின் கீழ் இன்று (ஏப்ரல் 27) வழக்குப் பதிவு செய்துள்ளனர் போலீசார்.
ராமநாதபுரம் மாவட்டம் கீழ செல்வனூர் கிராமத்தைச் சேர்ந்தவர் வினோத் பாபு. மாற்றுத்திறனாளியான இவர் தமிழகம் மற்றும் பல்வேறு மாநிலங்களில் நடைபெற்ற கிரிக்கெட் போட்டிகளில் கலந்து கொண்டு விளையாடி உள்ளார்.

முதல்வருடன் புகைப்படம்
இந்த சூழ்நிலையில் கோவில் படத்தில் வரும் வடிவேலு போல, கடையில் போலிக் கோப்பைகளை வாங்கிக்கொண்டு, தான் மாற்றுத்திறனாளிகளுக்கான இந்திய கிரிக்கெட் அணியின் கேப்டன் என்றும், வெளிநாடுகளில் சென்று வீல் சேர் கிரிக்கெட் போட்டியில் விளையாடி வெற்றி பெற்றுள்ளதாகவும் கூறி ராமநாதபுரம் மாவட்ட ஆட்சியர் மட்டுமின்றி பல்வேறு முக்கிய பிரமுகர்களிடம் வாழ்த்து பெற்றுள்ளார் வினோத் பாபு. மேலும் அவர்களிடம் இருந்து அரசு நிதியுதவியும் பெற்றுள்ளார்.
அதற்கெல்லாம் உச்சக்கட்டமாக கடந்த ஆண்டு லண்டனில் நடைபெற்ற வீல் சேர் டி20 உலகக்கோப்பையை வென்று இந்திய நாட்டுக்குப் பெருமை சேர்த்திருப்பதாகக் கூறி, முதலமைச்சர் மு.க.ஸ்டாலினிடமும், பாகிஸ்தானில் நடைபெற்ற ஆசியக் கோப்பையை வென்றிருப்பதாக கூறி விளையாட்டுத்துறை அமைச்சர் உதயநிதி ஸ்டாலின் ஆகியோரிடம் பிரம்மாண்ட கோப்பையைக் காட்டி வாழ்த்து பெற்றிருக்கிறார்.
இதுகுறித்த புகைப்படங்கள் தமிழ்நாடு முதல்வரின் அதிகாரப்பூர்வ சமூகவலைதள பக்கங்களில் கடந்த ஏப்ரல் 18ஆம் தேதி வெளியானது. அதில் முதல்வர், அமைச்சர் ராஜகண்ணப்பன் மற்றும் வினோத் பாபுவின் நண்பர் தினேஷ்குமார் ஆகியோரும் இருந்தனர்.
உலகக்கோப்பையுடன் முதலமைச்சரைச் சந்தித்த புகைப்படங்கள் வெளியான பிறகுதான்… ராமநாதபுரம் மாவட்டத்தில் இருந்து உளவுத்துறைக்குக் கிடைத்த ரகசிய தகவல்கள் வேறு மாதிரியாக இருந்தன. வினோத் பாபுவிடம் பாஸ்போர்ட்டே இல்லை என்பதும், கடையில் விதவிதமான கோப்பைகளை வாங்கி முதல்வர் உட்பட பலரையும் இந்த வினோத் பாபு விநோதமாக ஏமாற்றி உள்ளதும் தெரியவந்தது.

மேலும் தனது நண்பர்கள் முதல் முக்கிய பிரமுகர்கள் வரை பலரையும் ஏமாற்றி மாற்றுத்திறனாளி வினோத் பாபு லட்சக்கணக்கில் பணம் கறந்ததும் தெரியவந்தது.
இந்நிலையில் முதலமைச்சருடன் எடுத்த புகைப்படத்தில் இருந்த வினோத் பாபுவின் நண்பர் தினேஷ்குமார், ”என்னை நம்பவைத்து ஒரு லட்சம் ரூபாய் மோசடி செய்ததோடு, முதலமைச்சரைச் சந்தித்த புகைப்படத்தில் என்னையும் இடம்பெற செய்து ’அவருடைய மோசடிக்கு நானும் உடந்தை’ என்ற தோற்றத்தை வினோத் பாபு ஏற்படுத்தியுள்ளார். இதனால் நான் மிகுந்த மன உளைச்சல் அடைந்திருக்கிறேன். எனவே அவர் மீது நடவடிக்கை எடுக்க வேண்டும்” என ராமநாதபுரம் மாவட்டக் குற்றப்பிரிவு போலீஸாரிடம் நேற்று (ஏப்ரல் 26) தினேஷ்குமார் புகார் அளித்தார்.
இதையடுத்து வினோத் பாபு மீது 406, 420 ஆகிய இரண்டு பிரிவுகளின் கீழ் குற்றப்பிரிவு இன்ஸ்பெக்டர் உமாமகேஸ்வரன் இன்று வழக்கு பதிவு செய்திருக்கிறார். இதே போல் மாவட்ட எஸ்.பி. தங்கதுரையிடம், ஏ.பி.ஜே மிஷல் பாரா ஸ்போர்ட்ஸ் அசோசியேஷன் மற்றும் ராமநாதபுரம் மாவட்ட பாரா ஸ்போர்ட்ஸ் அசோசியேஷன் சார்பிலும் வினோத் பாபு மீது புகார் அளிக்கப்பட்டிருக்கிறது.
இதனையடுத்து வினோத் பாபு மீதான விசாரணையை போலீசார் துவங்கி உள்ளனர். இதற்கிடையே மாற்றுத் திறனாளியான வினோத் பாபு ஏமாற்றுத் திறனாளியாக பலரிடமும் லட்சக்கணக்கில் மோசடி செய்துள்ள சம்பவங்கள் அடுத்தடுத்து வெளியாகி அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளன.
அரசு வேலை வாங்கி தருவதாக மோசடி
மின்னம்பலத்தை தொடர்பு கொண்ட வினோத்பாபுவின் பள்ளிகால நண்பரான கடலூரைச் சேர்ந்த ராஜசேகரன் என்பவர் கூறுகையில், “வினோத் பாபு முதல்வருடன் எடுத்த புகைப்படத்தை பார்த்ததும் அதிர்ச்சி அடைந்தேன். பள்ளிப் படிப்புக்கு பிறகு கடந்த 2021 ஆம் ஆண்டு என்னை தொடர்பு கொண்ட வினோத், நான் இந்திய மாற்றுத் திறனாளி கிரிக்கெட் அணியில் கேப்டனாக உள்ளேன் என்றும், தற்போது லஞ்ச ஒழிப்புத் துறையில் பணியாற்றி வருகிறேன் என்றும் தெரிவித்தார்.
தொடர்ந்து எனக்கு அரசு வேலை வாங்கி தருவதாக கூறி 2.50 லட்சம் ரூபாயை பெற்றார். ஆனால் வேலை வாங்கி தராமல் தொடர்ந்து ஏமாற்றி வந்தார். இதற்கிடையே நான் கடந்த ஆண்டு செப்டம்பர் மாதம் கடலூர் மற்றும் இராமநாதபுரம் எஸ்.பி அலுவலகத்திலும் புகார் அளித்தேன்.

அதுதொடர்பான விசாரணைக்கு அழைத்தபோது, தான் மாற்றுத் திறனாளி என்பதால் கடலூருக்கு வரமுடியாது என்றார். பின்னர் ராமநாதபுரத்தில் போலீசார் நடத்திய விசாரணையில், தன் தவறை ஒத்துக்கொண்ட வினோத் பாபு, எழுத்துப்பூர்வமாக மன்னிப்புக்கோரி பணத்தை திருப்பி தந்துவிடுவதாகவும் கூறினார். ஆனால் இதுவரை வெறும் 25 ஆயிரம் ரூபாய் மட்டுமே திருப்பி தந்துள்ளார். இதுபோன்று பலரிடமும் வினோத் பாபு லட்சக்கணக்கான ரூபாய் மோசடி செய்துள்ளார் என்று தெரிவித்தார்.
இதுபோக, கிரிக்கெட்டில் ஆர்வமுடைய இரண்டு மாற்றுத்திறனாளிகளிடம், ’உங்களை இந்திய அணியில் சேர்த்துவிடுகிறேன்’ என்று கூறி அவர்களிடம் இரக்கமின்றி ஆயிரக்கணக்கில் பணமும் பறித்துள்ளார் இந்த போலி கேப்டன் வினோத் பாபு.
இந்த சம்பவத்தின் மூலம் நண்பர்கள், பிரமுகர்கள் மட்டுமின்றி ஒரு அரசாங்கத்தையே மாற்றுத்திறனாளி என்ற போர்வையில் ஏமாற்றியுள்ள வினோத் பாபுவின் திட்டங்கள் திடுக்கிட செய்துள்ளன.
இதுபோன்ற ஒரு சிலரால் உண்மையான உதவி தேவைப்படும் மாற்றுத் திறனாளிகளையும் சந்தேகக் கண்கொண்டு பார்க்கவேண்டிய துரதிர்ஷ்டவசமான நிலை இப்போது ஏற்பட்டுள்ளது.
கிறிஸ்டோபர் ஜெமா
சூடானில் இருந்து 9 தமிழர்கள் உட்பட 1,100 இந்தியர்கள் மீட்பு!
மகன்.. மருமகன்.. அமைச்சர்.. ஸ்டாலின் மெளனம் ஏன்: டெல்லியில் எடப்பாடி
