சுயத்தை தேட வைக்கும் படம்!
வாழ்க்கை என்பது என்னவென்றால் வாழ்வது தான். இப்படி யாராவது சொன்னால் என்ன செய்வோம்? ‘இது எனக்கு தெரியாதா’ என்போம்; ‘உன் வேலைய பார்க்குறியா’ என்போம்; தீக்குச்சி உரசினாற்போல எதற்கெடுத்தாலும் ‘டென்ஷன்’ ஆகும் சிலர் இன்ன பிற விதமாகக் கூட ‘ரியாக்ட்’ செய்யலாம். அவர்களை ஆற்றுப்படுத்தும்விதமாகத் தமிழில் சில திரையிசைப் பாடல்கள் உண்டு; சில திரைப்படக் காட்சிகள் உண்டு.
அதேநேரத்தில், திசை மாறிய வாழ்வை நேர்ப்படுத்தும்விதமான கதைகளை வெறுமனே வசனங்களில் இல்லாமல் வாழ்வாகத் திரையில் சொன்ன படைப்புகள் மிகக்குறைவு. அவற்றில் ஒன்றாக இடம்பிடிக்க முயற்சித்திருக்கிறது ஹலீதா ஷமீம் இயக்கியுள்ள ‘மின்மினி’. ஏ.ஆர்.ரஹ்மானின் மூத்த மகள் கதீஜா இதற்கு இசையமைத்திருக்கிறார். மனோஜ் பரமஹம்சா ஒளிப்பதிவு செய்திருக்கிறார்.
எப்படி இருக்கிறது ‘மின்மினி’ தரும் திரையனுபவம்?!
இரு வேறு தேடல்கள்!
ஊட்டியிலுள்ள பள்ளியொன்றில் படித்து வருகிறார் பாரி முகிலன் (கௌரவ் காளை). விளையாட்டு, படிப்பில் சிறந்து விளங்கும் அவர் பள்ளி முதல்வர் முதல் ஆசிரியர்கள், உடன் படிக்கும் மாணவ மாணவியர் என்று அனைவராலும் விரும்பப்படுகிற நபராகத் திகழ்கிறார்.
அந்தப் பள்ளியில் புதிதாக வந்து சேர்கிறார் சபரி (பிரவீன் கிஷோர்). யாரிடமும் பேசாமல் தனிமைப் பறவையாக இருக்கிறார். அவரது வரவைக் கொண்டாடும்விதமாக, சக மாணவரான பாரி கிண்டலடிக்கிறார். ‘ராகிங்’ செய்வது போல விளையாடுகிறார். அது சபரியிடத்தில் எரிச்சலை விதைக்கிறது.
ஆனால், பாரியோ அதனை சகஜமாக எடுத்துக் கொள்கிறார். மனதுக்குள் சபரியை நண்பனாகக் கருதத் தொடங்குகிறார். அவரிடத்தில் நெருக்கமாக முயற்சிக்கிறார்.
ஒருநாள் பாரியின் வகுப்பில் படிக்கும் அனைவரும் சுற்றுலா செல்கின்றனர். அப்போது நிகழும் விபத்தில் மாணவ மாணவியர் சிக்கிக் கொள்ள, அவர்களை வேனில் இருந்து வெளியேற்றுகிறார் பாரி. இறுதியாக, பயத்தில் மயங்கிக் கிடக்கும் சபரியைக் காண்கிறார்.
அவரை வெளியேற்றும்போது, வேனில் பற்றிய தீ அதிகமாகிறது. அது வெடிக்க, வெளியே தூக்கி வீசப்படுகிறார் பாரி. தரையில் விழும் அவருக்குத் தலையில் பலத்த காயம் ஏற்படுகிறது. அதனைப் பார்த்தாலும், எதுவும் செய்ய முடியாத நிலையில் செயலற்றுக் கிடக்கிறார் சபரி.
சில நாட்களில் பாரி இறந்து போகிறார். அவரது உடலுறுப்புகள் ஐந்து பேருக்குத் தானம் செய்யப்படுகின்றன.
பாரியின் இதயமானது பிரவீணா (எஸ்தர் அனில்) என்ற சிறுமிக்குப் பொருத்தப்படுகிறது.
யாரால் தான் உயிர் பிழைத்தோமோ, அந்த பாரி முகிலன் படித்த பள்ளியில் அனைவருடனும் பழக வேண்டுமென்று விரும்புகிறார் பிரவீணா. அங்கு சேர்ந்தபிறகு, அவரைக் குறித்த ஒவ்வொரு தகவலையும் சேகரிக்கிறார். அப்போது, தனித்தே திரியும் சபரியைக் காண்கிறார்.
அதுநாள் வரை செஸ் ஆடுவதிலும், ஓவியம் வரைவதிலும் ஆர்வம் கொண்டிருந்த சபரி, பாரியின் இறப்புக்குப் பின்னர் அவற்றில் இருந்து விலகி நிற்கிறார். பாரி ஆசைப்பட்ட, அவரால் நிறைவேற்ற முடியாத விஷயங்களைத் தேடித் தேடிச் செய்யத் தொடங்குகிறார்.
பாரியின் நட்பை தவறவிட்டது, சபரியின் நெஞ்சில் ‘முள்ளாய்’ குத்துகிறது. அவர் ஏன் தன்னைக் காப்பாற்றிவிட்டு உயிரிழக்க வேண்டும் என்கிற குற்றவுணர்ச்சியைப் பொறுக்க முடியாமல், பாரியைப் போலவே செயல்படத் தொடங்குகிறார். ஆனால், அதிலும் அவருக்குத் திருப்தி கிடைப்பதாக இல்லை.
அதேநேரத்தில், பாரியைப் போல மகிழ்ச்சி மிக்கவனாக, சக மனிதர்களோடு நட்புடன் திகழ்கிற ஒரு மனுஷியாய் வாழத் தொடங்குகிறார் பிரவீணா. அவருக்கு, சபரி தன் சுயத்தை இழந்து நிற்பது வருத்தத்தைத் தருகிறது.
’பாரியின் இறப்புக்குத் தானும் ஒரு காரணம்’ என்ற குற்றவுணர்வில் இருந்து எப்படியாவது சபரியை மீட்க வேண்டும் என்று பிரவீணா விரும்புகிறார். ஆனால், எதிர்பாராதவிதமாக யாரிடமும் சொல்லாமல் கொள்ளாமல் பள்ளியை விட்டுச் சென்றுவிடுகிறார் சபரி.
கிட்டத்தட்ட ஆறு ஆண்டுகள் கழித்து, மீண்டும் சபரியைச் சந்திக்கிறார் பிரவீணா. இமயமலைப் பகுதியில் பைக்கில் பயணிக்கும்போது அந்த சம்பவம் நிகழ்கிறது.
அது பிரவீணா திட்டமிட்ட ஒன்றா? அப்போதும் சபரி அப்படியேதான் இருந்தாரா? அந்தப் பயணம் அவர்களது வாழ்வை திசைதிருப்பியதா? இக்கேள்விகளுக்குப் பதிலளிக்கிறது ‘மின்மினி’யின் மீதி.
பாரி முகிலன் என்ற நபர் மீது கொண்ட ஈர்ப்பின் காரணமாக பிரவீணா, சபரி இருவரும் வெவ்வேறு தேடல்களை நோக்கிப் பயணிப்பதுதான் ‘மின்மினி’யின் மையக் கதை. இறுதியாக, அவர்கள் தங்கள் சுயத்தைக் கண்டடைவதோடு படம் முடிவடைகிறது.
சிறப்பான காட்சியனுபவம்!
இந்தப் படத்தில் சபரி, பிரவீணா மற்றும் பாரி முகிலன் என்ற மூன்று பாத்திரங்களே பிரதானமாக இருக்கின்றன. அதிலும் பாரி என்ற பாத்திரம் திரையில் தோன்றும் காலம் சொற்பம்.
இளம் வயதில் வியந்து பார்த்த சிலர் சட்டென்று நம்மைவிட்டுப் பிரிந்தாலும், அவர்களது நினைவு இறுதிக்காலம் வரை தொடரும் என்று சொல்லப்படுவதுண்டு. அப்படிப்பட்ட ஒரு பாத்திரமாக, இதில் தோன்றியிருக்கிறார் கௌரவ் காளை.
‘பூவரசம் பீப்பீ’யில் பார்த்த முகம் என்றாலும், பதின்ம வயதினருக்கே உரிய உற்சாகத்தின் உச்சத்தையும் குழப்பத்தின் அடியையும் அவர் முகத்தில் காட்டியிருப்பது அழகு.
பிரவீணாவாக வரும் எஸ்தர் அனில், இரு வேறு வயதுகளில் இதில் தோன்றியிருக்கிறார். முன்பாதியையும் பின்பாதியையும் ‘கனெக்ட்’ செய்துகொள்ள அவரது நடிப்பே முக்கியப் பங்கு வகிக்கிறது. அதுவே, அவருக்கான பாராட்டு.
சபரியாக வரும் பிரவீன் கிஷோர், முன்பாதியிலும் பின்பாதியிலும் கொஞ்சம் வேறுபட்டுத் தெரிகிறார். அது பார்வையாளர்களைச் சில நிமிடங்கள் குழப்பத்தில் ஆழ்த்தக் கூடும்.
மற்றபடி, ரொம்பவே தனிமையிலும் வெறுமையிலும் உழலும் சபரி பாத்திரத்தைத் திரையில் கையாண்டிருக்கும் விதம் அருமை. குறிப்பாக, கிளைமேக்ஸ் ஷாட்டில் அரை நிமிடத்திற்கும் மேலாகத் தன் உள்ளத்தில் ஒளித்து வைத்த உணர்ச்சிகளைப் பிரவீன் சுமார் வெளிக்காட்டுமிடம் அபாரம்.
ஆனால், அது போன்ற தருணங்கள் திரைக்கதையில் மிகக்குறைவு என்பது இப்படத்தின் குறை.
இவர்கள் தவிர்த்து பிரவீணாவின் பெற்றோர், பள்ளி முதல்வர், ஆசிரியர்கள், இமயமலைப் பயணத்தில் எதிர்ப்படுபவர்கள் என்று சுமார் இரண்டு டஜன் பேர் இதில் வந்து போயிருக்கின்றனர்.
சந்தோஷ் பிரதாப் மற்றும் நிவேதா சதீஷ் இதில் ஒரு காட்சிக்கு வந்து போயிருக்கின்றனர். அவர்களது இருப்பு, திரைக்கதையை அடுத்தகட்டத்திற்கு நகர்த்த உதவியிருக்கிறது.
’மின்மினி’யின் மிகப்பெரிய பலம் மனோஜ் பரமஹம்சாவின் ஒளிப்பதிவு. கதையே இமயமலையில் நிகழ்வதாகக் காட்டியிருப்பதால், பின்பாதியில் வரும் ஒவ்வொரு பிரேமும் அதன் அழகை அள்ளி விழுங்கியிருக்கின்றன.
கொஞ்சம் தவறினாலும் பல அடிகள் சரிந்து விழக்கூடிய அபாயமிருக்கிற சாலைகளில் படமாக்கப்பட்டிருக்கும் ஷாட்கள் ‘ஆஹா’ என்றிருக்கின்றன.
இப்படத்தின் இன்னொரு சிறப்பு, கதீஜா ரஹ்மானின் இசை. லேசாக ‘96’ படத்தில் கோவிந்த் வசந்தா தோற்றுவித்த அதிர்வுகளைப் பிரதிபலித்தாலும், இதில் அவர் தந்திருக்கும் பாடல்கள் நான்குமே மெதுவாக நம்மில் ஊடுருவும் ரகம்.
குறிப்பாக ’இரு பெரும் நதிகள்’, ‘மின்மினி நீ’ இரண்டும் சட்டென்று ஈர்க்கின்றன.
பல காட்சிகளில் ஓரிரு வாத்தியங்கள் கொண்டு அவர் அமைத்திருக்கிற பின்னணி இசை, பாத்திரங்களின் தனிமையை, ஏக்கத்தை, சொல்லில் அடங்கா குற்றவுணர்ச்சியைச் சட்டென்று நமக்கு உணர்த்துகின்றன.
அழகியகூத்தன், சுரேன்.ஜியின் ஒலி வடிவமைப்பு நம்மைப் பாத்திரங்கள் காணும் உலகத்திற்கே அழைத்துச் சென்ற உணர்வை ஏற்படுத்துகிறது.
பின்பாதியில் இடம்பெறும் இமயமலைப் பகுதியிலுள்ள மக்களின் வாழ்வை, அங்குள்ள கலாசாரத்தை உணர்த்த கலை இயக்குனர் ஷெரிக் குர்மித் குங்யாம் பயன்படுத்தப்பட்டிருக்கிறார்.
படத்தொகுப்பாளர் ரேமண்ட் டெரிக் கிரஸ்டா முன்பாதிக் காட்சிகளை இறுக்கமானதாகக் காட்டியிருக்கிறார். நாயக, நாயகியரின் மன உணர்வுகளுக்கு இடம் தரும் வகையில் பின்பாதியிலுள்ள காட்சிகளை ‘நறுக்கென்று’ கட் செய்யாமல் தவிர்த்திருக்கிறார்.
’மின்மினி’யில் ஹலீதா ஷமீம் தந்திருக்கும் காட்சியனுபவம் சிறப்பானது. ஒரு இயக்குனராக, அவர் கையாண்டிருக்கும் திரைக்கதை ட்ரீட்மெண்ட் நிச்சயம் வித்தியாசமானது.
ஒருமுறையாவது இமயமலைக்குப் போய் வர வேண்டுமென்ற சில மனிதர்களின் கனவுக்குத் தீனி போடும் வகையில், இதன் இரண்டாம் பாதி படம்பிடிக்கப்பட்டுள்ளது. அதேநேரத்தில், ஒரு சுற்றுலா போய் வந்த அனுபவமாக அல்லாமல் நம் மனதில் இருக்கும் குறைகளையும் நிறைவேற்ற இயலா ஏக்கங்களையும் புறந்தள்ளச் செய்யும் வாழ்வனுபவத்தையும் அது காட்டுகிறது.
படப்பிடிப்புக்கான காத்திருப்பு!
இந்தக் கதையில் மையப் பாத்திரங்களின் பதின்ம வயதையும் இளம் பருவத்தையும் வேறுபடுத்திக் காட்ட, சில ஆண்டு கால இடைவெளிக்குப் பின் அவர்களைப் படம்பிடித்திருக்கும் உத்தி வழக்கமாகத் திரையுலகில் பயன்படுத்தப்படாத ஒன்று. கால தாமதத்தால் ஒரு இடைவெளிக்குப் பிறகு படம்பிடிப்பதற்கும் இதற்கும் நிறையவே வித்தியாசம் உண்டு.
இத்தனை ஆண்டு காலக் காத்திருப்புக்குப் பிறகு அதே தொழில்நுட்பக் கலைஞர்கள், அதே நடிப்புக்கலைஞர்கள், அதேவிதமான மனநிலையோடு ஒரு படைப்பை அணுகுவதென்பது நிச்சயம் பாராட்டுக்குரியது.
‘மின்மினி’யைப் பார்க்க நேரும் ஒரு ரசிகர் சந்திக்கும் முதல் சவால், அந்தப் படத்தோடு ஒன்றுவது தான். ஏனென்றால், நமது அன்றாட உரையாடலில் வெளிப்படுத்தாத, அவ்வாறு செய்ய இயலாத சில விஷயங்களை இப்படம் பேசுகிறது.
தனது உயிரைக் காப்பாற்றிய நபர் தன் கண் முன்னால் இறந்துபோகிற வலியை, அவரது வாழ்வைச் சிதைத்துவிட்டு நாம் வாழ்கிறோம் என்ற குற்றவுணர்வை, இனி என்றென்றும் வெளிப்படுத்த முடியாத அன்பை எண்ணி ஒரு நபர் தவிர்ப்பதைக் காட்டுகிறது.
இந்த கதை சொல்லலில் திரும்பத் திரும்ப சில விஷயங்கள், நிகழ்வுகள் வருவது சிலரை எரிச்சல்படுத்தும்.
‘விஷயத்தை பட்டுன்னு உடைச்சிட வேண்டியதுதானே’ என்று பொங்க வைக்கும். ‘பொத்திப் பொத்தி வச்சா என்னவாகும்’ என்று கத்திக் கூச்சலிட வைக்கும். அதேநேரத்தில், ‘இது மாதிரிதானே நாமும் நம்மைச் சிதைத்துக் கொண்டு வருகிறோம்’ என்ற கேள்வியை எழுப்பும். அதுவே ‘மின்மினி’யின் பலமும் பலவீனமுமாக இருக்கிறது.
ஹலீதா ஷமீம் அமைத்துள்ள வசனங்கள் சில இடங்களில் தத்துவார்த்தமாக இருப்பது கொஞ்சம் ‘ஓவர்டோஸ்’ ஆக தெரிகிறது. வெறுமனே மௌனமாகச் சில இடங்களைக் கடந்திருக்கலாமோ என்று எண்ண வைக்கிறது. கொஞ்சம் நகைச்சுவையைச் சேர்த்திருக்கலாமே என்றும் ஆதங்கப்பட வைக்கிறது.
இப்படி ப்ளஸ்களும் மைனஸ்களுமாக கலந்து கட்டி நம் கண் முன்னே விரிகிறது ‘மின்மினி’யின் உலகம். மின்மினிப் பூச்சிகளின் ஆயுட்காலம் எவ்வளவு என்று அதனைப் பார்க்கும்போது நாம் கணக்கு போடுவதில்லை. மாறாக, அதன் மினுமினுப்பையே ரசிப்போம்.
‘நமது வாழ்வை நமக்கானதாக வாழ்வோம்’ என்கிற இந்தப் படமும் அதையே செய்கிறது. நல்லது, தீயது குறித்த நமது கற்பிதங்களைச் சில நிமிடங்களுக்கு மறக்கடித்து, எதிரே வருபவரை அன்புடன் பார்க்கச் செய்கிறது. ‘மின்மினி’யை ரசித்துப் பார்த்தால், குறைந்தபட்சமாகச் சில நொடிகளாவது அப்படிப்பட்ட உணர்வு உங்களுக்குள் பூக்கும். அதற்காக, ஹலிதா ஷமீம் மற்றும் குழுவினருக்கு ஒரு ’பூங்கொத்து’ தரலாம்!
செய்திகளை உடனுக்குடன் பெற மின்னம்பலம் வாட்ஸ் ஆப் சேனலில் இணையுங்கள்…
உதயசங்கரன் பாடகலிங்கம்
சுதந்திர தினவிழா… தமிழகம் முழுவதும் காங்கிரஸ் இருசக்கர வாகன பேரணி!
பாகிஸ்தான் வீரர் அர்ஷத் புதிய ஈட்டி வாங்க உதவிய நீரஜ் சோப்ரா… பார்டரை தாண்டிய நட்பு!