உலக அளவில் அதிக பேர் பயன்படுத்தும் செயலிகளில் ஒன்று வாட்ஸ் அப். சமீப நாட்களாக வாட்ஸ் அப் பயனாளிகளை குறித்து வைத்து ஹேக்கர்கள் பணம் பறிப்பது அதிகரித்துள்ளது. காலத்துக்கு ஏற்றவாறு டிஜிட்டல் உலகம் மாற மாற, மோசடி நபர்களும் புதிய புதிய யுக்திகளைப் பயன்படுத்தி மக்களை மிரட்டி பணம் பறித்து வருகின்றனர்.
ஏதாவது ஒரு பிரபல கம்பெனிகளின் பெயரைப் பயன்படுத்தி, லிங்க் கிரியேட் செய்து அதனை வாட்ஸ் அப் பயனாளிகளுக்கு ஹேக்கர்கள் அனுப்புகிறார்கள். அதன் மூலம், ‘உங்களுக்குப் பரிசு காத்திருக்கிறது, மொபைல் போன் வெல்லுங்கள்” என்றெல்லாம் ஆசையைக் காட்டி, இந்த லிங்க்கை 10 பேருக்கு ஷேர் செய்யுங்கள், அல்லது 5 குரூப்புக்கு ஷேர் செய்யுங்கள் என்ற மெசேஜ்களை பரப்புகிறார்கள்.
பரிசு கண்டிப்பாகக் கிடைக்கும் என்று மக்களை ஏமாற்றுவதற்காக, சில பெயர்களை ஹேக்கர்களே பயன்படுத்தி, ‘ஆமாம் நான் ஷேர் செய்தேன் எனக்குப் பரிசு கிடைத்தது’, ‘இது உண்மைதான் ஷேர் செய்யுங்கள்’ என்று அவர்களாகவே அந்த லிங்க்குக்குள் கமெண்ட்டுகளை பதிவிடுகின்றனர்.
இதனைக் கண்டு பொதுமக்களும் ஷேர் செய்யும் போது, வாட்ஸ் அப் பயனாளிகளின் தகவல்கள் எடுத்துக்கொண்டு பணம் பறிக்கின்றனர்.
அந்தவகையில் தான் பிரபல ராம்ராஜ் காட்டன் நிறுவனம் பெயரில் ஹேக்கர்கள் மோசடியில் ஈடுபட்டுள்ளனர். 2021 ஆம் ஆண்டு இறுதியிலேயே இந்த நிறுவனத்தின் பெயரை பயன்படுத்தி, நியூ இயர் மற்றும் கிறிஸ்துமஸ் பரிசு வழங்கப்படும் என ஒரு லிங்க்கை கிரியேட் செய்து ஹேக்கர்கள் அனுப்பினர். அப்போது ராம்ராஜ் நிறுவனம் இதை மறுத்தது, இதுபோன்ற ஒரு லிங்க்கை நாங்கள் அனுப்பவில்லை என்று கூறியது.
சுமார் 39 ஆண்டுகள் பழமையான மக்கள் மத்தியில் பிரபலமான இந்நிறுவனத்தின் பெயரை பயன்படுத்தி மீண்டும் வாட்ஸ் அப் மூலம் பணம் பறிக்கும் செயலில் ஈடுபட்டுள்ளனர்.
கடந்த சில தினங்களாக வாட்ஸ் அப்பில் ‘ராம்ராஜ் காட்டன் கிளை திறப்பு பரிசு’ என்ற பெயரில் ஒரு லிங்க் வலம் வந்துகொண்டிருக்கிறது. அதில் கீழே கொடுக்கப்பட்டுள்ள கேள்விகளுக்குப் பதில் அளிப்பதன் மூலம் நீங்கள் 6000 ரூபாய் பரிசு பெற வாய்ப்பு உள்ளது என்று குறிப்பிடப்பட்டுள்ளது.
ராம் ராஜ் கம்பெனியை உங்களுக்குத் தெரியுமா, உங்களுக்கு எத்தனை வயது, நீங்கள் ராம் ராஜ் காட்டனை பற்றி என்ன நினைக்கிறீர்கள், நீங்கள் ஆணா? பெண்ணா? உள்ளிட்ட கேள்விகள் இடம் பெறுகின்றன.
இந்த கேள்விகளுக்கு எல்லாம் பதில் அளித்து உள்ளே செல்லும் பட்சத்தில் வாழ்த்துகள் நீங்கள் 6000 ரூபாய் வென்றுள்ளீர்கள் என வருகிறது. இந்த பணம் வேண்டுமெனில், உங்கள் வாட்ஸ் அப் உள்ள 5 குழுக்களுக்கு அல்லது 20 பேருக்கு அனுப்பி பெற்றுக்கொள்ளுங்கள் என்று கூறப்பட்டுள்ளது.
இவ்வாறு அனுப்புவதன் மூலம், ஹேக்கர்கள் வாட்ஸ் அப்பிலிருந்து மொபைல் டேட்டா மூலம் நமது தகவலை எடுத்துக்கொண்டு அதன் மூலம் மிரட்டி பணம் பறிப்பது தெரியவந்துள்ளது.
இதுகுறித்து போலீஸ் அதிகாரி மதன் வாட்ஸ் அப் குழுக்களில் அனுப்பியுள்ள ஆடியோவில், “‘ராம் ராஜ் காட்டன் கொண்டாட்டம், மகளிர் தின கொண்டாட்டம் என்ற பெயரில் லிங்க்குகள் பரப்பப்படுகிறது. இதுபோன்று இலவசமாகப் பணம் , பரிசு கிடைக்கிறது என இந்த லிங்க்குகளை கிளிக் செய்யாதீர்கள். ஏனென்றால் இப்படி வரும் லிங்க்குகள் எல்லாம் போலியானவை. பரிசுகள் எல்லாம் கிடைக்காது. மாறாக லிங்க்குகளை கிளிக் செய்யும் போது மொபைல் டேட்டாவை பயன்படுத்தி , வாட்ஸ் அப் பயனாளிகளின் மொபைலில் உள்ள போட்டோஸ், வீடியோஸ், தனிப்பட்ட தகவல்கள் என அனைத்தையும் ஹேக்கர்கள் டவுன்லோடு செய்து கொள்வார்கள். அப்படித் திருடப்படும் தகவல்களில் முக்கியமான போட்டோ, வீடியோ எதாவது கிடைக்கிறதா என பார்த்து அதை எடுத்துக்கொண்டு மிரட்டுவார்கள். இல்லை என்றால் குடும்ப பெண்களின் புகைப்படங்களைத் தவறாக மார்பிங் செய்து பணம் பறிக்க மிரட்டுவார்கள்.
இதுபோன்று தான் சமீபத்தில் ஒருவருக்கு நடந்தது. நண்பர் ஒருவர் இதுபோன்று வந்த ஒரு லிங்க்கை க்ளிக் செய்ததும், அவருடைய போட்டோஸ், வீடியோஸ் எல்லாம் எடுத்துக்கொண்ட ஹேக்கர், இவருடைய குடும்பத்தைச் சேர்ந்த ஒரு பெண்ணின் போட்டோவை மார்பிங் செய்து இவரது நம்பருக்கே ஷேர் செய்திருக்கிறான். இதைக் கண்டு பயந்துபோன அவர், புகைப்படம் வந்த எண்ணுக்கு தொடர்பு கொண்டதும் பணம் கேட்டு மிரட்டுகிறான்.
ரூ. 10000 வேண்டும் என மிரட்டியதும் அக்கவுண்டில் இருந்து அனுப்புகிறார். பணம் அனுப்பிய சில நிமிடங்களில் நாங்களும் ஹேக்கர்கள் தான் என 15, 20 பேர் போன் செய்து, உங்கள் அக்கவுண்ட்டை ஹேக் செய்துவிட்டோம் என்று மிரட்டியிருக்கின்றனர். இதனால் அவர் என்ன செய்வது என தெரியாமல் இருக்கிறார். எனவே இதுபோன்று வரும் லிங்க்குகளை நம்பி யாரும் உள்ளே செல்ல வேண்டாம். போலீஸ் வாட்ஸ் அப் குழுக்களிலும் இதுபோன்ற லிங்க்குகள் பகிரப்படுகிறது. சைபர் கிரைம் குற்றங்கள் பற்றி தெரிந்தும் ஏன் பரப்புகிறீர்கள்.
இதுபோன்ற லிங்க்குகளை பரப்புவதன் மூலம் யாராவது அதை கிளிக் செய்து பாதிப்பு ஏற்படும் பட்சத்தில் அதற்கான பொறுப்பைப் பரப்புபவர்கள் ஏற்றுக்கொள்கிறீர்களா?. எனவே இதுபோன்ற லிங்க்குகளை பரப்ப வேண்டாம்” என்று அறிவுறுத்தியுள்ளார்.
வைரஸ் போல பரவிக் கொண்டிருக்கும் இதுபோன்ற லிங்க்கை க்ளிக் செய்து பொதுமக்கள் ஏமாறாமல் எச்சரிக்கையுடன் இருக்க வேண்டும்.
**-பிரியா**
