பழனியில் நடைபெற்றது ஆன்மீக மாநாடு அல்ல, இந்து விரோத மாநாடு என்று பாஜக ஒருங்கிணைப்பு குழு தலைவர் ஹெச்.ராஜா இன்று (செப்டம்பர் 2) தெரிவித்துள்ளார்.
விநாயகர் சதுர்த்தி விழாவை முன்னிட்டு கும்பகோணம் மடத்தெருவில் வைக்கப்பட்டுள்ள 10 அடி உயர விநாயகர் சிலை பிரதிஷ்டை செய்யும் நிகழ்ச்சி இன்று (செப்டம்பர் 2) நடைபெற்றது.
இந்த நிகழ்ச்சியில் பாஜக ஒருங்கிணைப்பு குழு தலைவர் ஹெச்.ராஜா, இந்து மக்கள் கட்சி தலைவர் அர்ஜூன் சம்பத் ஆகியோர் பங்கேற்றனர்.
பின்னர் செய்தியாளர்களிடம் பேசிய ஹெச்.ராஜா, “தமிழகத்தில் இந்து விரோத அரசு செயல்பட்டு வருகிறது. பழனியில் நடைபெற்றது ஆன்மீக மாநாடு அல்ல, இந்து விரோத மாநாடு. முருகனை வைத்து ஏமாற்று அரசியல் செய்வதை இந்துக்கள் ஏற்றுக்கொள்ள மாட்டார்கள். பழனியில் கூலிக்கு ஆட்களை கொண்டு வந்து மாநாட்டை நடத்தியுள்ளார்கள்.
விநாயகர் சதுர்த்தி நிகழ்ச்சியின் போது காவல்துறை அதிகாரிகள் அத்துமீறி நடந்தால், மாநில அரசு உடனடியாக நடவடிக்கை எடுக்க வேண்டும். இல்லையென்றால், அனைத்து இந்து இயக்கங்களும், பாஜகவும் பொறுத்துக்கொள்ள மாட்டோம். முதலீடுகளை ஈர்ப்பதற்காக ஸ்டாலின் அமெரிக்கா செல்லவில்லை, அரசாங்க செலவில் சுற்றுலா சென்றுள்ளார்” என்றார்.
தொடர்ந்து, தமிழகத்தில் இருமொழிக்கொள்கையே பின்பற்றப்படும் என்று பொன்முடி பேசியதற்கு பதிலளித்த ஹெச்.ராஜா, “மாணவர்களும் அவர்களின் பெற்றோர்களும் தான் அதை முடிவு செய்ய வேண்டும். பொன்முடி எப்படி முடிவு செய்ய முடியும்?
அண்ணா பல்கலைக்கழகத்தின் கீழ் இயங்கும் 294 பொறியியல் கல்லூரிகளில் 980 ஆசிரியர்கள் ஆதார் கார்டை போலியாக கொடுத்து பணியில் சேர்ந்துள்ளார்கள் என்ற புகாரை பொன்முடி ஏன் கவனிக்கவில்லை?
ஸ்டாலின் மகள் நடத்தும் பள்ளிக்கூடத்தில் ஏன் சமச்சீர் கல்வியை பின்பற்றவில்லை? அப்படி என்றால் நீங்களே கலைஞரை மதிக்கவில்லை என்று தான் அர்த்தம்.
திமுகவைச் சேர்ந்தவர்கள் மொழிக்கொள்கையைப் பற்றி பேசினால், ஆற்காடு வீராசாமி, துரைமுருகன், டி.ஆர்.பாலு குடும்பத்தினர் நடத்தும் பள்ளிகளின் முன்பாக போராட்டம் நடத்தப்படும். மாணவர்கள் எத்தனை மொழி வேண்டுமானாலும் படிக்கட்டும். ஒரு மொழியை படிக்கக்கூடாது என்று தடுப்பதும் திணிப்பு தான்” என்று தெரிவித்தார்.
செல்வம்
செய்திகளை உடனுக்குடன் பெற மின்னம்பலம் வாட்ஸ் ஆப் சேனலில் இணையுங்கள்…
அந்த மோசமான ஆம்பள நரி : ஸ்ரீரெட்டி யாரை சொல்கிறார்!
என் மகனை வைத்து கபில்தேவை பழி வாங்கி விட்டேன்: யுவராஜ்சிங் தந்தை ஆவேசம்!