சொகுசு கார்களுக்கான செஸ் வரியை உயர்த்துவதால் தொழில் வளர்ச்சி பாதிக்கப்படும் என்று மெர்சிடஸ் – பென்ஸ் இந்தியா நிறுவனம் தெரிவித்துள்ளது.
கடந்த ஜூலை மாதம் 1ஆம் தேதி முதல் புதிய சரக்கு மற்றும் சேவை வரி (ஜி.எஸ்.டி) மத்திய அரசால் அமல்படுத்தப்பட்டது. இதில் பல்வேறு பொருட்கள் மற்றும் சேவைகளுக்கான வரிகள் திருத்தி அமைக்கப்பட்டுள்ளன. 1,500 சி.சி-க்கு குறைவான டீசல் கார்களுக்கு 3 சதவிகித செஸ் வரி மற்றும் 1,500 சி.சி-க்கு மேல் உள்ள கார்கள் மற்றும் எஸ்.யு.வி ரக கார்களுக்கு 15 சதவிகித வரி விதிக்கப்பட்டது. இதன்பிறகு, ஆகஸ்ட் 5ஆம் தேதி நடந்த ஜி.எஸ்.டி. கவுன்சில் கூட்டத்தில் எஸ்.யு.வி ரக கார்கள் மற்றும் சொகுசு கார்களுக்கான வரியை 15 சதவிகிதத்திலிருந்து 25 சதவிகிதமாக உயர்த்த ஜி.எஸ்.டி. கவுன்சில் முடிவு செய்துள்ளது.
இதுகுறித்து நிதியமைச்சகம் வெளியிட்ட அறிக்கையில், “கார்களுக்கான ஜி.எஸ்.டி வரியுடன் கூடுதலாக விதிக்கப்படும் செஸ் வரியை 15 சதவிகிதத்திலிருந்து 25 சதவிகிதமாக உயர்த்த ஒப்புதல் அளிக்கப்பட்டுள்ளது. தற்போது ஜி.எஸ்.டி.யில் 8702 மற்றும் 8703 ஆகிய பிரிவுகளின் கீழ் வகைப்படுத்தப்பட்டுள்ள மோட்டார் வாகனங்களுக்கு இது பொருந்தும். 1,500 சி.சிக்கு அதிகமான நடுத்தர கார்கள் மற்றும் 1,500 சி.சிக்கு குறைவான எலெக்ட்ரிக் கார்களும் இப்பிரிவில் அடங்கும்” என்று தெரிவிக்கப்பட்டுள்ளது.
இந்நிலையில், சொகுசு கார்கள் மீதான செஸ் வரியை உயர்த்தினால் ‘மேக் இன் இந்தியா’ திட்டம் பாதிக்கப்படும் என்று மெர்சிடஸ் நிறுவனம் தெரிவித்துள்ளது. இதுகுறித்து மெர்சிடஸ் – பென்ஸ் இந்தியா நிறுவனத்தின் தலைமை செயல் அதிகாரியான ரோலண்ட் ஃபால்கர் பேசுகையில், “மேக் இன் இந்தியா திட்டத்தின் கீழ் மெர்சிடஸ் நிறுவனத்தின் தொழிலை இந்தியாவில் விரிவுபடுத்தத் திட்டமிட்டிருந்தோம். சொகுசு கார்கள் மீது விதிக்கப்பட்டுள்ள 15 சதவிகித செஸ் வரியை 25 சதவிகிதமாக உயர்த்தினால், அது மெர்சிடஸ் நிறுவனத்தின் திட்டங்களை பாதிக்கும்” என்று அவர் தெரிவித்துள்ளார்.
