/சென்னை விமான நிலையத்திலுள்ள லிப்ட் நடுவில் நின்றதால் முதல்வர் எடப்பாடி பழனிசாமி அதில் சிக்கிக்கொண்டார். உடனடியாக அங்கு விரைந்து வந்த பணியாளர்கள் லிப்டில் ஏற்பட்ட பழுதை நீக்கி முதல்வரை மீட்டனர்.
ராமநாதபுரம் மாவட்டம் பசும்பொன்னில் நடைபெற்று வரும் தேவர் குருபூஜை விழாவில் கலந்துகொள்வதற்காக முதல்வர் எடப்பாடி பழனிசாமி விமானம் மூலம் நேற்று இரவு மதுரை சென்றார். முன்னதாக மதுரை செல்வதற்கு விமான நிலையத்தின் கீழ் தளத்திலிருந்து உள்நாட்டு முனையத்திற்கு செல்லும் முதல் தளத்திற்கு லிப்ட் மூலம் சென்றார். ஆனால் தொழில்நுட்பக் கோளாறு காரணமாக லிப்ட் நடுவழியில் நின்றுவிட்டது. இதனால் முதல்வர் லிப்டில் சிறிது நேரம் சிக்கிக்கொண்டதால் அப்பகுதியில் சிறிது பதற்றம் ஏற்பட்டது.
இதையடுத்து அங்கு விரைந்த பணியாளர்கள் கோளாறை சரிசெய்தனர். அதன்பின் லிப்ட் வேலை செய்ய தொடங்கியது. அதன்பின்னர் எடப்பாடி பழனிசாமி மற்றும் மற்ற அரசு அதிகாரிகள் மதுரைக்கு புறப்பட்டு சென்றனர். அவர்கள் சுமார் எட்டு நிமிடங்கள் லிப்டுக்குள் சிக்கிக்கொண்டனர் என விமானநிலைய அதிகாரிகள் தெரிவித்தனர்.
