கேரளாவில் வெள்ளத்தால் பாதிக்கப்பட்ட மக்கள் தங்கவைக்கப்பட்டுள்ள முகாம்களை முதல்வர் பினராயி விஜயன் இன்று(ஆகஸ்ட் 23) ஆய்வு செய்தார்.
கேரள மாநிலத்தில் ஏற்பட்ட பெருமழை, வெள்ளத்தால் இதுவரை ரூ.20 ஆயிரம் கோடி அளவுக்குச் சேதம் ஏற்பட்டுள்ளது. நூற்றுக்கும் மேற்பட்டோர் மரணமடைந்துள்ளனர். லட்சக்கணக்கானோர் மீட்கப்பட்டு முகாம்களில் தங்க வைக்கப்பட்டுள்ளனர்.
இந்நிலையில், செங்கனூர், ஆலப்புழா, பரவூர், சாலக்குடி உள்ளிட்ட பகுதிகளில் அமைக்கப்பட்டுள்ள நிவாரண முகாம்களில் முதல்வர் பினராயி விஜயன் இன்று ஆய்வு மேற்கொள்ளவுள்ளதாக அறிவிப்பு வெளியாகியது.
அதன்படி, இன்று (ஆகஸ்ட் 23) காலை 10.20 மணியளவில் அலப்புழா கடற்கரை அருகேயுள்ள காவல்துறை பரேட் மைதானத்திற்கு ஹெலிகாப்டரில் வந்திறங்கினார் பினராயி விஜயன். ஆலப்புழா கலெக்டர் அலுவலகம் அருகேயுள்ள லஜானதுல் முகமதியா பள்ளியில் அமைக்கப்பட்டுள்ள நிவாரண முகாமை அவர் ஆய்வு செய்தார். அப்போது வெள்ளத்தால் வீடு முழுவதும் மூழ்கிய பெண்ணிடம் பேசிய முதல்வர், வீட்டை மீண்டும் கட்டித்தர அரசு நடவடிக்கை எடுக்கும் என உறுதியளித்தார்.
இதேபோல், முகாம்களில் ஏதாவது குறையிருந்தால் தெரிவிக்கும்படியும் அங்கிருந்தவர்களிடம் முதல்வர் கேட்டுக்கொண்டார். மழை வெள்ளத்தால் இழந்த சான்றிதழ்களுக்கு மாற்றுச் சான்றிதழ் வழங்கப்படும் எனவும் அங்கிருந்த மக்களிடம் தெரிவிக்கப்பட்டது.
ஆலப்புழாவில் மொத்தம் 699 முகாம்கள் உள்ளன. 83 ஆயிரத்து 593 குடும்பங்களைச் சேர்ந்த 3 லட்சத்துக்கு 8 ஆயிரத்து 623 மக்கள் அங்குத் தங்க வைக்கப்பட்டுள்ளனர்.
