வரும் சட்டமன்றத் தேர்தலில் பாமக ஆட்சியை பிடிக்க வேண்டும் என்று பாமக நிர்வாகிகள் மத்தியில் ராமதாஸ் பேசியுள்ளார்.
பாமக வடக்கு மண்டல செயற்குழுக் கூட்டம் நேற்று (பிப்ரவரி 5) சென்னை தி.நகரிலுள்ள தனியார் திருமண மண்டபத்தில் நடைபெற்றது. முன்னாள் மத்திய அமைச்சர் ஏ.கே.மூர்த்தி தலைமையில் நடந்த இந்தக் கூட்டத்தில், சென்னை, திருவள்ளூர், காஞ்சிபுரம், செங்கல்பட்டு மாவட்டங்களைச் சேர்ந்த பாமக நிர்வாகிகள் கலந்துகொண்டனர். இந்தக் கூட்டத்தில் சிறப்பு அழைப்பாளராக பாமக நிறுவனர் ராமதாஸ் கலந்துகொண்டு கட்சியினருக்கு அறிவுரைகள் வழங்கினார்.
ராமதாஸ் உரையாற்றும்போது, “பாமக என்னும் கட்சி ஆரம்பிக்கப்பட்டு 32 வருடங்கள் ஆகிறது. ஆனால், இதுவரை நாம் ஒருமுறை கூட ஆட்சிக்கு வரவில்லை. இந்த முறை கண்டிப்பாக ஆட்சியைப் பிடிக்க வேண்டும். 70-80 தொகுதிகளில் வெற்றிபெற்றால் ஆட்சி நம் கையில் என்று ஒரு திட்டத்தை நாம் தயாரித்துவைத்துள்ளோம். ஒரு தொகுதிக்கு ஒரு லட்சம் மக்கள் படையை தயார் செய்ய வேண்டும் என்பதுதான் அந்த திட்டம்” என்று தெரிவித்தவர்,
“பாமகவில் இருப்பது போல இளைஞர்கள், இளம்பெண்கள், பொறுப்பாளர்கள், செயல்வீரர்கள் மற்ற கட்சிகளில் இல்லை. அதனால்தான் 400 கோடி ரூபாய் பேரம் பேசி பிகாரிலிருந்து சிலரை இறக்குமதி செய்திருக்கிறார்கள். அந்த கட்சியிடம் ஆட்களும் இல்லை, சரக்கும் இல்லை. பிகாரிலிருந்து வருபவர்கள் கார்பரேட் அரசியல் செய்யப்போகிறார்கள்.” என்று திமுக பெயரைக் குறிப்பிடாமல் மறைமுகமாக சாடினார்.
மேலும், “ “பாமகவில் ஆட்கள் இருக்கிறார்கள், திறமை இருக்கிறது, யுக்தியும் இருக்கிறது. இன்னும் நீங்கள் கூடுதலாக உழைத்தால் இங்கு வேறு எந்தக் கட்சிக்கும் வேலையில்லை. நாம்தான் முதன்மைக் கட்சியாக வருவோம்” என்று கூறிய ராமதாஸ், “நாம் மூன்றாவது பெரிய கட்சி என்று இங்கு பேசியவர்கள் சொன்னார்கள். 10-15 சதவிகித வாக்குகளைப் பெற்றிருந்தால் மூன்றாவது பெரிய கட்சி என்று சொல்வதை ஏற்றுக்கொள்வேன். வெறும் 5.6 சதவிகிதம் வாக்குகளை வாங்கிவிட்டு சொல்வது எனக்கு பிடிக்கவில்லை. வெற்றிமேடையில் 3,2, 1 என்ற வரிசை இருக்கும். அதில் 3ஆவது இடத்திலிருந்து முதல் இடத்திற்குச் செல்ல வேண்டும்” என்று நிர்வாகிகள் வலியுறுத்தியுள்ளனர்.
ஏற்கனவே இதுபோல அன்புமணி தெரிவித்த நிலையில், அதற்கு பதிலளித்த முதல்வர் எடப்பாடி பழனிசாமி, “அவரவருக்கு தங்கள் கட்சி ஆட்சியைப் பிடிக்க வேண்டும் என்றுதான் எண்ணம் இருக்கும். கட்சியினரை உற்சாகப்படுத்துவதற்காக அவ்வாறு பேசியுள்ளார்” என்று தெரிவித்திருந்தார். இந்த நிலையில் ராமதாஸும் இவ்வாறு கூறியுள்ளது அதிமுக கூட்டணியில் பாமக நீடிக்குமா என்ற கேள்வியை எழுப்பியுள்ளது.
