தினகரன் ஆதரவு எம்.எல்.ஏ. மீது தாக்குதல்!

Published On:

| By Balaji

தினகரன் ஆதரவாளரும் பூந்தமல்லி எம்.எல்.ஏ.வுமான ஏழுமலை தாக்கப்பட்ட சம்பவம் அரசியல் வட்டாரத்தில் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது.

தினகரன் ஆதரவாளரும் தகுதி நீக்கம் செய்யப்பட்ட பூந்தமல்லி எம்.எல்.ஏ.வுமான ஏழுமலை, திருவள்ளூரை அடுத்த வெள்ளவேடு அருகேயுள்ள உட்கோட்டை கிராமத்துக்கு, துக்க நிகழ்ச்சி ஒன்றில் கலந்துகொள்வதற்காகச் சென்றுள்ளார்.

நிகழ்ச்சியை முடித்துக்கொண்டு நேற்று (அக்.10 ) இரவு அவர் காரில் திரும்பிக்கொண்டிருந்தபோது , நைனா கண்ணு என்ற அ.தி.மு.க. தொண்டர், ஏழுமலையின் காரை உருட்டுக்கட்டையால் தாக்கியதாகக் கூறப்படுகிறது. இதில் கண்ணாடி உடைந்து ஏழுமலையின் உதடுகள் கிழிந்து ரத்தம் வரத் தொடங்கியது என்று எம்.எல்.ஏ.வின் உறவினர்கள் தெரிவிக்கிறார்கள்.

தாக்குதலைதையடுத்து ஏழுமலை திருவள்ளுவர் அரசு மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டார். அங்கு அவருக்கு மருத்துவர்கள் சிகிச்சை அளித்தனர்.

ஏழுமலையைத் தாக்கிய நைனா கண்ணு துணை முதல்வர் ஓ.பன்னீர்செல்வத்தின் ஆதரவாளர் எனக் கூறப்படுகிறது . போலீசார் அவரைத் தேடிவருகின்றனர்.

தகுதி நீக்கம் செய்யப்பட்ட எம்.எல்.ஏ. தாக்கப்பட்ட சம்பவம் அதிமுக வட்டாரத்தில் அதிர்வலைகளை ஏற்படுத்தியுள்ளது.

செய்திகளை உடனுக்குடன் பெற மின்னம்பலம் வாட்ஸ் ஆப் சேனலில் இணையுங்கள்!
Join Our Channel
Share