தன்ஷிகாவின் அதிரடி ‘மேளா’!

Published On:

| By Balaji

ஒரு டீசரின் அடிப்படை கடமை, அந்தத் திரைப்படத்தின் மீது மிகப்பெரிய அளவில் இல்லையென்றாலும், என்ன செய்திருக்கிறார்கள் என்ற எதிர்பார்ப்பை உருவாக்கவேண்டியது. அதை சரியாக செய்திருகிறது சாய் தன்ஷிகாவின் ‘மேளா’ திரைப்படத்தின் டீசர்.

டாப் ஆங்கிளில் இயற்கையின் கிராஃபிக்ஸ் தோற்றத்துடன் வந்து, ஒரு பாறையின் மீது அமர்ந்திருக்கும் பெண்ணிடம் வருகிறது கேமரா. அந்தப் பெண்ணின் பின்புறத் தோற்றம், குதிக்கும் ஜிமிக்கி, ஆறு போல் வளைந்த சிகையினை பின்னல் போடுவது வரையிலும் சாதாரணமாக இருக்கிறது டீசர். ஆனால், பின்னி முடிந்த சிகையை பின்னால் வீசும்போது, அதிலிருந்து வரும் கத்தி ஒரு கயிற்றை அறுப்பதும், அந்தக் கயிற்றில் கட்டி குழிக்குள் இறக்கி வைத்திருந்த ஆண் சடலங்கள் மேலே எழுவது என காட்சிகள் மாறும்போது ஏற்படும் பிரம்மிப்பைத் தடுக்க முடியவில்லை.

ஒரு பெண் செய்யக்கூடியவை என்று எப்போதெல்லாம் சில வரைமுறைகளை இந்த சமூகம் விதிக்கிறதோ, அப்போதெல்லாம் அவற்றை உடைத்தெறிய சிலர் வருவார்கள். அந்த வகையில், தென்னிந்திய சினிமாவின் மற்ற திரையுலகங்களில் நடிகைகளை மையப்படுத்தி வெளியாகும் திரைப்படங்கள் அதிகமிருக்க, தெலுங்கு திரையுலகத்தில் அப்படிப்பட்ட படங்களுக்கான இடம் காலியாக இருந்தது. அந்த இடத்தை நிரப்புவதற்காகவே, கபாலியில் ஆக்‌ஷன் ரோலில் நடித்த தன்ஷிகா, நேராக டோலிவுட்டுக்கு இடம்பெயர்ந்திருக்கிறார்.

தமிழ் மற்றும் தெலுங்கில் உருவாகும் இத்திரைப்படம், இரண்டு மொழிகளுக்குமென தனித்தனி நடிகர்களால படமாக்கப்பட்டிருக்கிறது. இதில் தன்ஷிகாவுக்கு ஜோடியாக சூர்யா தேஜ் நடித்திருக்கிறார். ஆனால், பொதுவாக ஹீரோக்கள் கையிலெடுக்கும் ஆக்‌ஷன் காட்சிகளையும் இப்படத்தில் தன்ஷிகா எடுத்துக்கொண்டார்.

மேளத்தை அடித்துக்கொண்டு, அதற்கான ஆட்டத்தையும் ஆடிக்கொண்டு முடிவில் எகிறி மிதிக்கும் தன்ஷிகாவின் காலுக்குக் கீழும் ஒரு ஆணின் உடல் கிடத்தப்பட்டிருக்கிறது. இரத்தத்துக்கு பஞ்சமே வைக்காத தெலுங்கு சினிமாவில், தன்ஷிகாவின் அதிரடி ஆக்‌ஷன் காட்சிகளைப் பார்க்கவேண்டும் ஆவலை உருவாக்கியிருக்கும் டீசர், அதனளவில் வெற்றி பெற்றிருக்கிறது என்றே சொல்லவேண்டும்.

[மேளா டீசர்](https://www.youtube.com/watch?v=VPgwQsUR4lU),”

செய்திகளை உடனுக்குடன் பெற மின்னம்பலம் வாட்ஸ் ஆப் சேனலில் இணையுங்கள்!
Join Our Channel
Share