தமிழ் சினிமாவின் முக்கிய படைப்பான ‘காக்கா முட்டை’யின் ஒரு காட்சியில், சென்னையின் மிகப் பெரிய மால் ஒன்றை பார்த்தவுடன், சின்ன காக்கா முட்டை சொல்லும் ஒரு டயலாக் வரும்… ‘நம்மளை இதுக்குள்ள சத்தியமா விடமாட்டாங்கடா!’
அதேபோல, பீட்சா கடைக்குள் நுழையும்போது, ‘குப்பத்து பசங்கள உள்ளேவிட மாட்டேன்னு சொல்லிட்டாங்க… அவனுக்கு எப்படி தெரியும்… நாங்க குப்பத்து பசங்கன்னு?’ என்று சின்ன காக்கா முட்டை, தனது பாட்டியிடம் சந்தேகம் கேட்கும். அதற்கு பாட்டி, ‘அதுவா உங்க டிரஸ்ஸை பார்த்ததும் தெரிஞ்சிருக்கும்’ என்று சொல்வார். இந்த காட்சி சமீபத்தில் நிஜமாகி இருக்கிறது. சென்னையில் அல்ல… தலைநகர் டெல்லியில்! சோனாலி செட்டி என்ற பெண், அவருடைய கணவரின் பிறந்தநாளையொட்டி, சாலையோரம் வசிக்கும் ஏழை சிறுவர் சிறுமியருக்கு விருந்தளிக்கத் திட்டமிட்டார். சில சிறுவர்களை அழைத்துக்கொண்டு ஒரு உணவகத்துக்குச் சென்றபோது, முறையாக உடை அணியவில்லை என கூறி, உணவகப் பணியாளர்கள் சிறுவர் சிறுமியருக்கு உணவு பரிமாற மறுத்துவிட்டனர். இதனால் ஆத்திரமடைந்த சோனாலி, உணவகம் முன்பு நின்று கூச்சலிட்டதால் சலசலப்பு ஏற்பட்டது. மேலும் அந்த ஓட்டல் நிர்வாகத்தை கண்டித்து போராட்டத்தில் ஈடுபட்டார். ஆனால், தங்களின் செயலில் தவறேதும் இல்லை என உணவக நிர்வாகம் விளக்கமளித்தது. ஆனாலும், ‘குற்றச்சாட்டு நிரூபணமானால் உரிமம் ரத்து செய்யப்படும்’ என டெல்லி துணை முதலமைச்சர் மணீஷ் சிசோடியா எச்சரித்துள்ளார்.
