கிச்சன் கீர்த்தனா: ரவை – சேமியா கிச்சடி!

Published On:

| By Balaji

தேவையானவை: ரவை, சேமியா – தலா ஒரு டம்ளர், பெரிய வெங்காயம் – ஒரு கைப்பிடி அளவு, பச்சை மிளகாய் – 2, சோம்பு – ஒரு டீஸ்பூன், கறிவேப்பிலை – ஒரு கைப்பிடி அளவு, தக்காளி – ஒன்று, மஞ்சள்தூள் – அரை டீஸ்பூன், தண்ணீர் – 4 டம்ளர், உரித்த பூண்டு – ஒரு கைப்பிடி அளவு, நெய் – 2 டீஸ்பூன், எண்ணெய் – ஒரு ஸ்பூன் , உப்பு – தேவையான அளவு.

செய்முறை: அடுப்பில் வாணலியை வைத்து சூடானதும், சேமியா, ரவையை வெறும் வாணலியில் நன்கு வறுத்து எடுத்து வைத்துக் கொள்ளவும். வாணலியில் எண்ணெய்விட்டு சோம்பு, கறிவேப்பிலை போட்டுத் தாளித்து, வெங்காயத்தைச் சேர்த்து நன்கு வதக்கவும். கூடவே, பொடியாக நறுக்கிய பச்சை மிளகாய் போட்டு வதக்கி, அடுத்ததாக உரித்த பூண்டு சேர்த்து வதக்கி, பிறகு நறுக்கிய தக்காளி, மஞ்சள்தூள் போட்டு நன்கு வதக்கவும். இதில் நான்கு கிளாஸ் தண்ணீர் ஊற்றிக் கொதிக்க விடவும். தண்ணீர் கொதிக்கும்போது வறுத்த சேமியா, ரவையைப் போட்டு, உப்பு சேர்த்து வேகவிடவும் (அடுப்பை ‘சிம்’மில் வைத்து விட வேண்டும்). ரவை, சேமியா வெந்து தண்ணீர் வற்றியதும் மேலே நெய் விட்டுக் கிளறி, இறக்கி வைக்கவும்.

ADVERTISEMENT

இதற்கு பெஸ்ட் காம்பினேஷன் தேங்காய் சட்னி.

தேங்காய் சட்னிக்குத் தேவையானவை: தேங்காய் – அரை மூடி, பச்சை மிளகாய் – 2, பொட்டுக்கடலை – 4 டீஸ்பூன், கடுகு – ஒரு டீஸ்பூன், காய்ந்த மிளகாய் – 2, கறிவேப்பிலை – 1 ஆர்க்கு, எண்ணெய், உப்பு – தேவையான அளவு.

ADVERTISEMENT

செய்முறை: தேங்காய், பச்சை மிளகாய், பொட்டுக்கடலையை ஒன்றாகப் போட்டு மிக்ஸியில் தேவையான அளவு தண்ணீர் சேர்த்து அரைத்து, தேவையான உப்பைச் சேர்த்துக் கலக்கிக் கொள்ளுங்கள். வாணலியில் கொஞ்சமாக எண்ணெய் ஊற்றி கடுகு, காய்ந்த மிளகாய், கறிவேப்பிலை தாளித்து, அரைத்து வைத்துள்ள தேங்காய்க் கலவையுடன் சேர்த்துக் கலக்கிவிடுங்கள்.

பரிமாறும் விதம்: அலங்காரத்துக்கு நறுக்கிய கேரட்டுகளைத் தூவலாம். நெய்யில் வறுத்த முந்திரிகளையும் தூவி, கொத்தமல்லி தழைகளைக்கொண்டு பரிமாற ஆர்வத்துடனும் ஆவலுடனும் சாப்பிடுவார்கள்.

ADVERTISEMENT

கீர்த்தனா சிந்தனைகள்: ஆர்க்யூமென்ட் வாதத்துக்கு நல்லது, அட்ஜஸ்மென்ட் வாழ்க்கைக்கு நல்லது

செய்திகளை உடனுக்குடன் பெற மின்னம்பலம் வாட்ஸ் ஆப் சேனலில் இணையுங்கள்!
Join Our Channel
Share