திருவாரூரில் ஓஎன்ஜிசி குழாயில் உடைப்பு ஏற்பட்டு குளம் மற்றும் விவசாய நிலங்களில் கச்சா எண்ணெய் தேங்கி ஒரு ஏக்கர் விவசாய நிலம் பாதிக்கப்பட்டுள்ளது.
காவிரி டெல்டா மாவட்டங்களில் ஒன்றான திருவாரூர் மாவட்டத்தில் கொரடாச்சேரி, குடவாசல், கோட்டூர் உள்ளிட்ட ஆறு இடங்களில் ஓஎன்ஜிசி நிறுவனம் சார்பில் கச்சா எண்ணெய் எடுப்பதற்கான குழாய்கள் பதிக்கப்பட்டுள்ளன. இங்கு அவ்வப்போது குழாய்களில் உடைப்பு ஏற்படுவது வாடிக்கையாக உள்ள நிலையில் இது குறித்து அப்பகுதி மக்கள் சம்பந்தப்பட்ட அதிகாரிகளிடம் நீண்ட நாட்களாகப் புகார் கூறிவருகின்றனர். மேலும் ஓஎன்ஜிசி நிறுவனம் காவிரி டெல்டா மாவட்டங்களில் இருந்து வெளியேற வேண்டும் என்றும் நீண்ட காலமாக வலியுறுத்திவருகின்றனர். இந்நிலையில் திருவாரூர் அருகே உள்ள கமலாபுரத்தில் தனசேகரன் என்பவரது விவசாய நிலத்தின் அடியில் சென்ற ஓஎன்ஜிசி குழாயில் இன்று உடைப்பு ஏற்பட்டு ஒரு ஏக்கர் விவசாய நிலத்தில் கச்சா எண்ணெய் பரவியுள்ளது.
கச்சா எண்ணெய் பரவிய இந்த ஒரு ஏக்கர் நிலத்தில் இன்னும் 30 ஆண்டுகளுக்கு விவசாயம் செய்ய முடியாது என்று விவசாயி தனசேகரன் கவலை தெரிவிக்கிறார். இது தொடர்பாக அரசு உடனடி நடவடிக்கை எடுத்து உரிய இழப்பீடு தர வேண்டும் என்றும் அவர் கேட்டுக்கொண்டிருக்கிறார். விவசாய நிலங்களில் தொடர்ந்து குழாய்களைப் பதிப்பதால் விவசாய நிலங்கள் முழுவதுமாக பாதிக்கப்படுவதாக விவசாயிகள் குற்றம் சாட்டிவருகின்றனர். எனவே ஓஎன்ஜிசி நிறுவனம் குழாய் பதிக்கும் பணிகளை உடனே நிறுத்த வேண்டும் எனவும் திருவாரூர் மாவட்ட விவசாயிகள் கோரிக்கை விடுத்துள்ளனர். முன்னதாக, கடந்த 15ஆம் தேதி திருவாரூரின் பாண்டவையாற்றில் ஓஎன்ஜிசி குழாயில் எண்ணெய் கசிவு ஏற்பட்டு ஆற்று நீர் பாழானது நினைவுகூரத்தக்கது.
