உலகின் மிகப்பெரிய விமானம்!

Published On:

| By Balaji

அமெரிக்காவைச் சேர்ந்த தனியார் விமான நிறுவனம் விண்வெளிக்குச் செயற்கைக்கோள்களை அனுப்பும் வகையில் உலகின் மிகப் பெரிய விமானத்தை உருவாக்கி சாதனை படைத்துள்ளது.

அமெரிக்காவின் கலிஃபோர்னியா மாகாணத்தைச் சேர்ந்த ஸ்ட்ராட்டோலான்ச் சிஸ்டம் கார்ப் உலகின் மிகப் பெரிய விமானத்தை வடிவமைத்துள்ளது. இரட்டை உடற்பகுதி கொண்ட இந்த விமானத்தின் இறக்கைகள் கால்பந்து மைதானம் அளவிற்கு நீளமானது. ஸ்ட்ராட்டோலான்ச் எனப் பெயரிடப்பட்டுள்ள இந்த விமானம், இரட்டை எரிபொருள் தொட்டிகளுடன், 6 என்ஜின்களுடன் வடிவமைக்கப்பட்டுள்ளது. இது மணிக்கு 74 கிலோமீட்டர் வேகத்தில் செல்லும். 385 அடி அகலமும், 238 அடி நீளமும் கொண்ட இந்த விமானத்தின் எடை 227 டன் ஆகும். மைக்ரோசாஃப்ட் நிறுவனத்தின் இணை நிறுவனரும், ஸ்ட்ராட்டோலான்ச் சிஸ்டம் கார்ப் நிறுவனத்தின் நிறுவனருமான பால் ஆலன் தனது ட்விட்டர் பக்கத்தில், 12503 மீட்டர் நீளம் கொண்ட சோதனை மையத்தில் கடந்த ஞாயிற்றுக்கிழமை இந்த விமானம் வெற்றிகரமாகச் சோதனை செய்யப்பட்டது என்று பதிவிட்டுள்ளார்.

ADVERTISEMENT

பொதுவாக ஏவுகணைகளை ஒரு குறிப்பிட்ட இடத்திலிருந்து வானில் செலுத்தும்போது மோசமான வானிலை காரணமாக காலதாமதம் ஏற்பட வாய்ப்புள்ளது. ஆனால் ஸ்ட்ராட்டோலான்ச் விமானங்கள் மூலம் பூமியிலிருந்து 36,000 அடி தொலைவில் ராக்கெட் மற்றும் ஏவுகணைகளை வானில் செலுத்தும்போது வானிலை காரணமாக கால தாமதம் ஏற்படும் வாய்ப்புகள் மிகக்குறைவு” என்று அந்நிறுவனத்தைச் சேர்ந்த அதிகாரிகள் தெரிவித்துள்ளனர். இந்த விமானத்தின் முழு சோதனைகளும் முடிவடைந்த பின்னர், வரும் ஜூன் மாதம் முதல் பயன்பாட்டிற்கு வரும் என்று எதிர்பார்க்கப்படுகிறது.

செய்திகளை உடனுக்குடன் பெற மின்னம்பலம் வாட்ஸ் ஆப் சேனலில் இணையுங்கள்!
Join Our Channel
Share