இலங்கைக்குச் சுற்றுப்பயணம் மேற்கொண்டுள்ள இந்திய அணி தொடர் வெற்றிகளைப் பெற்று வருகிறது. டெஸ்ட் தொடரை 3-0 என்ற கணக்கில் கைப்பற்றியதைத் தொடர்ந்து கடந்த ஞாயிறு (ஆகஸ்டு 20) அன்று நடைபெற்ற முதல் ஒருநாள் போட்டியையும் வென்றது.
இன்று (ஆகஸ்டு 24) இரண்டாவது ஒருநாள் போட்டி இலங்கையில் உள்ள பல்லேக்லே (Pallekele) மைதானத்தில் நடைபெற உள்ளது. மற்ற போட்டிகளைப் போல் இல்லாமல் இன்றைய ஆட்டத்தில் மட்டும் பல்வேறு சுவாரஸ்யங்கள் அடங்கியுள்ளன. இது இலங்கை அணிக்கு 800ஆவது ஒருநாள் போட்டியாகும். அதுமட்டுமின்றி அந்த அணியின் வீரர் மலிங்கா இன்னும் இரண்டு விக்கெட்டுகளை கைப்பற்றினால் 300 விக்கெட்டுகளை வீழ்த்திய வீரர் என்ற பெருமையைப் பெறுவார். இந்தப் போட்டியில் இந்திய அணி வெற்றிபெற்றால் அது இலங்கை அணிக்கு எதிரான 85ஆவது வெற்றியாகும். இதற்கு முன்னர் இந்திய அணி ஆஸ்திரேலிய அணியுடன் 85 வெற்றிகளைப் பெற்றிருந்ததே அதிகபட்சமாக இருந்தது.
மேலும், இந்திய அணியின் கேப்டன் விராட் கோலி இந்த ஆண்டுக்கான (2017) அதிக ரன் சேர்த்த வீரர்கள் பட்டியலில் 47 ரன்கள் பின்தங்கிய நிலையில் இரண்டாம் இடத்தில் உள்ளார். இன்றைய போட்டியில் 47 ரன்களை சேர்க்கும்பட்சத்தில் முதலிடத்தில் உள்ள டூ ப்ளசிஸ்ஸைப் பின்னுக்குத்தள்ளி முதலிடம் பெறுவார். அதேபோல் தவான் இதுவரை 7 முறை 50 ரன்களுக்கு மேல் இலங்கை அணிக்கு எதிராக அடித்துள்ளார். இந்தப் போட்டியில் மற்றொரு அரை சதம் அடிக்கும்பட்சத்தில் ஓர் அணிக்கு எதிராக தவான் அடித்த அதிகபட்ச அரைசதம் இதுவாக இருக்கும்.
இலங்கை அணியைப் பொறுத்தவரை திஷாரா பெரேரா மற்றும் உபுல் தரங்கா இருவரும் பல்லேக்லே மைதானத்தில் சிறப்பான சாதனைகளைப் படைத்துள்ளனர். எனவே, இரு அணிகளுக்குமான இந்தப் போட்டி மிகுந்த சுவாரஸ்யம் நிறைந்ததாக அமையும் என்றே கூறலாம்.
