மதுராவில் நடைபெற்ற கலவரமும், அப்போது எம்.பி-யும், நடிகையுமான ஹேமமாலினி ஷூட்டிங்கில் எடுத்த படத்தை பதிவு செய்த ட்வீட்டும் இந்தியாவையே பரபரப்பாக்கின. ஹேமமாலினியை திட்டியோ, ஆதரித்தோ ட்வீட், ஸ்டேட்டஸ் அப்டேட் செய்யாத விரல்களே இல்லை என்னும் அளவுக்கு சமூக வலைதளங்களில் அனல் பறந்தது. பிரச்னை ஓரளவுக்குக் கட்டுக்குள் வந்தபிறகு இந்த சர்ச்சை குறித்து சில கருத்துகளை ட்விட்டரில் தெரிவித்திருக்கிறார் ஹேமமாலினி. அவற்றின் தொகுப்பு பின்வருமாறு…
“மதுராவில் பாதிக்கப்பட்ட குடும்பத்தைச் சந்தித்து பேசிவிட்டேன். என்னால் புரிந்துகொள்ள முடியாதது ஒன்றுதான். சட்டம் ஒழுங்கு குறித்த பிரச்னைக்கும், பார்லிமெண்டுக்கும் என்ன சம்மந்தம்? முக்கிய பிரச்னையிலிருந்து கவனத்தை திசை திருப்ப நான் பயன்படுத்தப்பட்டிருக்கிறேன். சட்டம் ஒழுங்கு என்பது மாநில அரசாங்கத்தின் அதிகாரத்துக்குட்பட்டது. என்னை ஏன் குறி வைத்தார்கள்? என் வேலையை நான் சரிவர செய்து வருகிறேன். மதுராவில் இருப்பவர்கள் என் நேர்மைக்கு சாட்சி சொல்வார்கள். வாழ்வியல் சூழ்நிலை, சாலைகள், நீராதாரம் ஆகியவற்றை நான் மேம்படுத்திக் கொடுத்திருக்கிறேன். ஒரு பார்லிமெண்ட் மெம்பராக என்னால் போலீஸை எந்தவிதத்திலும் கட்டுப்படுத்த முடியாது. வளர்ச்சி மட்டும்தான் என் வேலை. நான் அதை நேர்மையாக செய்கிறேன். என் குடும்பத்தைப் பார்க்கக்கூடச் செல்லாமல் நான் மதுராவுக்காக உழைத்துக் கொண்டிருக்கிறேன். என் நேர்மைக்கு பலனாக நான் எதை பெற்றிருக்கிறேன் தெரியுமா? குற்றச்சாட்டுகளை தான். எனக்கு ஆதரவாக பேசியவர்களுக்கு மிக்க நன்றி. காயமடைந்த போலீஸாருக்கும் ஆறுதல் சொல்லிவிட்டு வந்திருக்கிறேன்”.
